விழிகள்
முத்தமிழ் கூகிள் குழுமத்தில் காசி கணேசன் அரங்கநாதன் எழுதிய தேன் சிந்தும் கவிதை
விழிகள்
உன் விழித்தபடி விழித்திருந்த
விழிகள்
என்னைச் சுடுகின்றன.
உன் கேள்விகள் கலையாத மௌனம்...
தாயே,
படிப்பறிவில்லாததால் நீ
பலவந்தப்படுத்தப்பட்டாயோ?
என் இயற்கை அன்னையும்
படிப்பறிவில்லாதவளே.
காடுகள், மலைகள், ஓடைகள்
ஆறுகளின் வழித்தடங்கள்
எல்லாம் கற்பிழந்தன.
சுவர்களுக்கெல்லாம் காது முளைக்கும்போது,
முடைநாற்றமெடுக்கும் உண்மைகள்
வீதிகளில் கொண்டுவந்து கொட்டப்படும்போது,
உலகத்திலுள்ள ஆண்களெல்லாம்
ஒட்டுமொத்தமாக,
நடுவீதியில் நின்று தீக்குளிப்பார்கள்.
2.
உலகம் முழுவதும் கற்பிழந்தாலும்
என் தங்கை கற்புள்ளவள், என்று
மார்தட்டும் எனது நண்பா..
உன் இயற்கை அன்னையை இன்னும்
எத்தனை முறைதான் கற்பழிப்பாய்...
போதும்.
3.
சென்ற நூற்றாண்டிலேயே இறந்துபோன
என் தோழிக்கு,
இந்த உதவாக்கரையின், ஒன்றுக்கும் உதவாத
ஆறுதல் கடிதம்.
இதனால் நீ ஆறுதலடைவாயா?
இல்லை,
இந்த வெற்று ஆறுதல்
நொண்டி சமாதானம் சரியா?
உன்னுடைய இறவா
விழித்திருந்து விழிக்கும் விழிகள்
உலகின் ஒவ்வொரு கலங்கரை விளக்கிலும்
எனது இரவின் ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
நின்று விதிர்க்க,
ஒவ்வொன்றுக்காய் எண்ணி... எண்ணி...
எத்தனைகோடி சமாதானங்கள்,
நொண்டி சாக்குகள்.
ஒன்றுமறியாதவளே,
உன் ஒரு சிறு பார்வையில்
நாணிக் கோணிக் குறுகி நிற்கும்
ஆன்றோர் எனப் பிதற்றும் இவ்வுலகு.
இயலாமை
-----------------
நான் கடமைமறந்தேன்.
எம் போன்ற அறிவற்ற அறிவாளிகள்
கடமை மறந்தோம்.
எம் அன்னையின்
மேல்துணி களையப்பட்டது.
எங்கள் வரலாறு களங்கப்பட்டது.
ஏதும் செய்யாது, இயலாது
விதிமுடியும் நாளிலே
ஊனமுள்ள மனிதர்களாய்
வெறிதே
இந்த உலகைவிட்டுப் போவோம்.
மதவாதி
--------------
பெண்ணைக் கற்பழித்த பாவத்தைப்போக்கக்
கடவுளென்றாய்.
போதவில்லை...
பஞ்ச பூதங்களின் பிரதிநிதியென்றாய்.
தீரவில்லை...
பூமியென்றாய்..
எல்லாம் வல்ல இயற்கையென்றாய்...
கடவுளைவிட
ஏன்,
கடவுளைவிடப்பெரிய உன்னைவிடப்
பெரிய
தாய், என்றாய்
தீரவில்லை.
முதல் பாவத்தின் சுவடுகளே
இன்னும் அழியாது
எச்சில்பட்ட முதுகோடு ஓடிக்கொண்டிருக்கிறாய்...
இன்னும்,
புதிது புதிதாக
தினந்தோறும் பல பாவ மூட்டைகள்
எந்தக் கடலில் கொட்டுவாய்?
விடுதலை
----------------
அவிழ்த்துவிடு
உன்
சுயநலச் சுருக்குப்பைக்குள்
சுருண்டுகிடக்கும் பூதங்களை.
பயமா???
ஆம், பயந்தான்
வெளியில் வந்த பூதங்கள்
உன்னை விழுங்கிவிடும் என்ற பயம்.
உன் பயங்கள் ஒவ்வொன்றையும்
வீரம் என்று மொழிமாற்றம் செய்து
உன் மனதுள் கேட்கும் மரண ஓலங்களிலிருந்து
தப்ப,
வெளியில் பிளிறிப்
பறையடித்துக் கொண்டிருக்கிறாய்.
எத்தனை நாள் வாழும் உனது வாழ்வு???
முற்றும்.
நவ.2004.