ராஜ்குமார் மரணம் ஏற்படுத்திய சலனம்- விழியன்
மரணம் ஏற்படுத்திய சலனம்
கன்னட சினிமாவின் ஒர் சகாப்தமாக கருதப்படும் ராஜ்குமார் நேற்று பெங்களூரில் இறந்தார். தமிழகத்திற்கு எம்ஜியார், ஆந்திரத்திற்கு ஒரு என்.டி.ஆர், கன்னடத்திற்கு ஒரு ராஜ்குமார். மற்ற இருவரைக் காட்டிலும் இவருக்கு ஒரு பெருமை என்னவென்றால் இவர் அரசியலில் இறங்கவில்லை. எத்தனை சந்தர்ப்பம் வாய்த்தபோதும் தன்னை அரசியலில் இணைத்துக்கொள்ளவில்லை.
அலுவலகத்தில் மிக பரபரப்பான வேலையின் நடுவே இந்த செய்தி அச்சத்தை ஏற்படுத்தியது. காரணம் ஏற்கனவே ராஜ்குமார் 2001ல் கடத்தப்பட்ட போது எழுந்த கலவரம் தான் நினைவிற்கு வந்தது.அனைவரும் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நானும் எனது சக ஊழியரும் சரி சீக்கிரம் கிளம்ப ஒரு நல்ல சந்தர்ப்பம்,விரைவாக சென்று நான் படிக்கும் புத்தகத்தை முடிக்கலாம், சின்ன சிறுகதை எண்ணத்தில் இருந்தது, அதையும் முடித்துவிடலாம் என்று கிளம்பினோம். அலுவலக வாசலை அடையும் போது எதிர் வரிசையில் இருந்த கடைகள் அடைக்க சொல்லி பெரும் கும்பல் கூடி இருந்தது. கைவசம் கேமரா வைத்திருந்தேன். ஏதாவது நடந்தால் புகைப்படம் எடுக்கலாம் என்ற ஒரு குருட்டு ஆசை. விபரீத ஆசை தான்.
வழி நெடுகிலும் கர்னாடக கொடி ஏந்தி மக்கள். என்னுடன் வந்த சக ஊழியனுக்கு அடுத்த மாதம் திருமணம், அதனால் அதை பற்றி பேசிவந்தோம்.அதிக அவனோடு பேசியதில்லை. தனக்கு இருக்கு தமிழ் நண்பன் நான் ஒருவனே என்றான். கால்மணி நேரம் இனிமையாக பேசிக்கொண்டு சென்றோம். தூரத்தில் புகைவந்தது. என்ன அது என்று பார்த்தால் ஒரு பைக் எரிந்து கொண்டிருந்தது. திடீர் என்று பயம் தொற்றிக்கொண்டது. எதிரே ஒரு பேருந்து, ஒரு கார், சில வாகனங்கள். எதுவும் அசையாமல் நின்றது.
காரின் முன்னால் ஒரு மிருகம், ஆம் மனித முகம் போர்த்திய மிருகம் கையில் உருட்டுக்கட்டையுடன் காரை நோக்கி வந்தான். காரின் கண்ணாடியை உடைக்க ஓடி வந்தான். அந்த கண்களில் இருந்த வெறி. அய்யகோ. அது அந்த நடிகன் மீது வைத்திருந்த பற்றா? இருக்கவே இருக்காது. என் கண்களை தற்போது மூடினாலும் அந்த வெறி என்னை உலுக்கிவிடுகின்றது. அந்த நொடி என் வண்டியை நான் தான் செலுத்தினேனா என்று கூட தெரியவில்லை.பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி வேறு வழியாக தப்பியோட வேண்டியதாகிவிட்டது வண்டியுடன். பத்திரமாக வீடு சேர்ந்தேன். எந்த காரியமும் செய்ய முடியவில்லை. புத்தகம் திறந்தால் அதே கண்கள், பேனா எடுத்தால் மை ரத்தமாக வருவது போன்ற உணர்வு. என்ன கொடூர பார்வை அது.
பையில் கேமரா இருந்தும் பிடிக்கவில்லை
கண்ணின் கேமரா வழியாக பிடித்துவிட்டேன்
தவிற்கவேண்டிய கண்களை.
யார் வருவார்கள் இவர்களை மனிதர்களாக்க?
இரவு, எங்கும் உணவு கிடைக்கவில்லை. சுமார் 3-4 கீமீட்டர் நடந்தே தேடினோம். எங்கும் கும்பல் கும்பலாக. யாராவது ஔஅருகே வந்தால் "ராஜ்குமாருக்கு ஜே" என்று செல்லலாம் என்று பேசிவைத்தோம். கடைசியாக ஒரு தமிழ் ஓட்டல் திறந்து வைத்திருந்தனர்.
மறுநாள் காலையாவது நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தால், இன்னும் மோசமாகிவிட்டது. அலுவலக திறக்கவில்லை. விடுமுறை என்று அறிவிப்பு. ஊருக்கு செல்லலாம் என்றால் பேருந்து இயங்கவில்லை. இரவு 11 மணிக்கு தான் பேருந்தில் சென்னை செல்ல முன்பதிவு செய்து இருந்தேன். அந்த ட்ரேவல்சுக்கு காலை முதல் தொலைபேசியில் அழைத்துக்கொண்ருந்தேன். மதியம் 2 மணிக்கு சொல்கிறார். இன்று எந்த பேருந்தும் இல்லை என்று.. " பயணம் பயமாகி போனது"
இதன் நடுவே ஊருக்கு பயணிக்கு நண்பன் அலைபேசியில் அழைத்து. "மச்சி நிற்க கூட இடம் இல்லை புகைவண்டியில். இந்த வெயிலில் கதவை வேறு மூடிவிட்டனர். கல் எறிகின்றனராம்" என்றான்.
அலுவலம் அருகே பல டிராவல்ஸ் இருக்கு, எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன். வழியில் ஏகப்பட்ட கண்ணாடி உடைப்பு, என் அலுவலகத்திலும் 5 இடத்தில் உடைத்துள்ளனர் புண்ணியவான்கள். உணவகம் ஏதுமில்லாமல் ஒரு நாள் முழுக்க ரொட்டியில் வாழ்கை நடத்துகின்றனர் மக்கள். எந்த கடையும் திறக்கவில்லை. எப்போது நெரிசலாக இருக்கும் பெங்களூர், வெரிச்சோடி கிடந்தது.போலீசுக்கும் மக்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் 5 இறந்ததாக தகவல். மதியம் தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கையில் சிக்கிய போலீஸ்காரரை நார்நாராக கிழித்துவிட்டனர். தர்ம அடி.பாவம்
ஒரு வழியாக கே.பி,என் டிராவஸ்சில் இரண்டு சீட் கிடைத்துள்ளது. மிருகர்கள் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்தால் சென்னைக்கு பத்திரமாக செல்வேன்.
இந்நேரம் அந்த நடிகரின் உடல்தகனம் செய்யப்பட்டு இருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். ஆனால் அமைதியை விரும்பிய அவரின் ஆத்மா, ரசிகர்களின் வெறியாட்டத்தை கண்டு நிச்சயம் எங்காவது அழுதுகொண்டிருக்கும்.
--
விழியன்
http://vizhiyan.wordpress.com