Friday, April 21, 2006

கரைவேட்டியும் கறைஜீன்சும்

கரைவேட்டியும் கறைஜீன்சும் சந்தித்தன எதிர்பாராமல்

கரை :"வணக்கம்"
கறை :"மன்னிக்கவும். அரசியலும் அரசியல்வாதியும் எமக்கு பிடிக்காது"
கரை :"ஹா ஹா..தம்பி, இதுவும் அரசியல் தான்"
கறை :"விட்டுவிடுங்களேன் வேண்டாம்.."
கரை :"காரணம் சொல் தம்பி"
கறை :"அடுக்கிக்கொண்டே போகலாம் "
கரை :"எங்கே ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசை ப் படுத்து"
கறை :"சொல்லில் சுத்தமில்லை. சொன்னதை சொன்னாற்போல் செய்வதில்லை"
கரை :"நீங்கள் உறுதியளிக்கும் தேதியில் பணியை முடித்ததுண்டா?"
கறை :"சரி..அடிக்கடி கூட்டணிமாற்றம், கட்சிமாற்றம்?"
கரை :"அடிக்கடி கம்பெனி மாற்றம்?
கறை :"நாங்கள் மாறுவது தொழில் வளர்ச்சிக்கு (career growth)"
கரை :"நாங்க ள் மாறுவதும் கட்சிவளர்ச்சிக்கும் கொள்கைக்கும்.."
கறை :"இல்லை பின்னால் இருப்பது பணமல்லவோ?"
கரை :"உங்களுக்கு எப்படி???"
கறை :"லஞ்சம், இதற்கென்ன பதில்?"
கரை :"வரியை குறைக்க எத்தனை தில்லுமுல்லு சொல்லு?"
கறை :"இப்படி பொதுவாக பேசக்கூடாது.."
கரை :"அதே..அதே.."
கறை :"விடுங்கள்...சட்டமன்றத்தில் எப்போதும் வெட்டி பேச்சு"
கரை :"அட..நீங்கள் மின்னஞ்சலில் பேசும் பேச்சு?"
கறை :"அதென்ன..நினைத்தால் வெளிநாட்டு பயணம்"
கரை :"அதென்ன கஸ்டமர் நினைக்காமல் அவரிடத்திற்கு திடீர் பயணம்.."
கறை :"பார்டீ பார்டீ(கட்சி)... இது தானா எப்போதும்.."
கரை :"பிறந்தா பார்டீ, போனா பார்டீ, வந்தா பார்டீ..
இரவில் பார் (BAR) , பகலில் டீ."
கறை :"அய்யா ஆளை விடுங்கள்..என்ன வேணும் சொல்லுங்கள்"
கரை :"ஒட்டு போடு தம்பி. உங்க கையில தான் இருக்கு எங்க தலையெழுத்தும், இந்த நாட்டோட தலையெழுத்தும்.ஒரு சாதாரண.கைநாட்டுக்கு இருக்கிற கடமை உணர்வு உனக்கில்லையேப்பா.
உங்க வோட்டு வைக்குமே தப்பான அரசியலுக்கு வேட்டு..
கறை கண்டுபிடிப்பதென்றால் வெள்ளை துணியிலும் கண்டுபிடிக்கலாம்..
ஓட்டு போடு...இல்லையெனில் ஓ போடு (49 ஓ)..

--

விழியன்
http://vizhiyan.wordpress.com
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Thursday, April 20, 2006

இயந்திர வாழ்க்கை

அன்பர்கள்,

நான் கோவைக்கு சென்றிருந்த போது அரசின் பெரிய அதிகாரி ஒருவரின் மனைவி, "அமெரிக்காவில் உங்களூக்கு எல்லாம் இயந்திர வாழ்க்கைதானே" என்றார்.

அதுதான் ஒரு 24 மணி நேரம் நான் என்ன செய்கிறேன் என்று பதிவு செய்ய கருதியிருந்தேன். எமது எந்திர வாழ்க்கைதான்.

இனி நீங்கள் எல்லோரைக்கும் அதே குற்றம் சுமத்தினால்?

எந்திரம் இல்லை எமக்கு சுதந்திர வாழ்க்கை என்று யாரேனும் நிறுவ இயலுமா?

(மூன்னர் அவ்வப்போது இட்ட மடல்களின் தொகுப்பு)
----------------------------------------------------------------------------------------------------------------------------
காலை 7. 06. தேனிர் அருந்தியாச்சு.
மின்மடல் எல்லாம் பார்த்தாச்சு.
இனி புறப்பாடுதான்.
பேருந்து 8.16 மணிக்கு.
BVN மூர்த்தி் வாசிக்கிறேன்.

மணி காலை 7.09 ஓடிப்போ மடலே
-------------------------------------------------------
காலை மணி: 8.02

புறப்பாட்டு ஆச்சு:
'மயிர் வழிக்க இரும்பும் மழுங்கும்' என்றொரு புது மொழி உருவாச்சு.
அவல் சாப்பிட்டாச்சு. காலையில் சாப்பிடவிலையென்றால் முளை இல்லாதவர்கள் என்று ஆர்த்தி பாப்பா வலைதளத்தில் படித்தேன். அதனால் சாப்பிடதொடங்கிவிட்டேன்.

எசமானி எழுந்து மதிய உணவு அடுக்கியாச்சு. போட்டுகொடுத்த காபி குடிச்சாச்சு.

காரின் கண்ணாடிமேல் உள்ள உறைந்த நீரை வழி்க்க வேண்டும்.
பேருந்து நிறுத்தம் ஒரு 5 நிமிடம் தூரம்.

ஓடிப்போ மடலே:மணி காலை 8.06
---------------------------------------------------------
மணி: காலை 8.15: பேருந்து நிறுத்தம் அடைந்தேன். இருவர் நின்றிருந்தனர். சேதிதாள் படிக்கின்றவன் காலை வணக்கம் தெரிவித்தான்.

மணி:8.16: பேருந்து வழக்கம் தவறவில்லை. ஏறுகையில் 'வெற்று பேருந்தை ஓட்டி வந்துள்ளாயே' என்று ஓட்டுனியிடம் சொன்னேன். உண்மையே என்று சொல்லி நகைத்தாள். மூன்று பேர்தான் இருந்தனர். வழக்கமாக வரும் பாரதர் எவரும் இல்லை. புறாக்கூட்டிலிருந்து கிளம்பும் புறவுகள் போல் தம் கார்களிலிருந்து வந்து பேருந்தில் அடைந்தவரோடு மொத்தம் 12 பயணியர். ஆளுக்கு 1.1/2 வெள்ளி கொடுத்தால் ஓட்டும் ஆளுக்கும் ஓட்டுவிக்கும் "அவி"க்கும்மே சேர்ந்த வெள்ளி போதாது. சின்கை மாநகர பேருந்து கழகமே, நன்றி. பேருந்தில் இரவா அளித்து உதவிய PVN மூர்த்தியின் ராமாயண ரகசியம் என்ற நூலின் ஒரு படலம் வாசித்தேன்.'ராமன் தமிழனா' என்பது தலைப்பு. அப்படித்தான் தோனுகிறது

மணி: 8.44: எம் பேருந்து சின்கை பட்டணம் வந்தது . நெடுஞ்சாலையில் நெரிசல் குறைவே. என்னுடன் இறங்கியவன் தன் கைபையொடு ஒரு துவலைதுண்டு வைத்திருந்தான். என்ன நோக்கம் என்றேன். மதிய இடைவேளையின் போது மெல்லோட்டம் போகலாம் என்றுதான். குளித்தபின் ஈரம் உலர்த்தத்தான். இன்று நாள் 57 பாகைக்கு வெம்மை பெறும் என்றான்.

அலுவலகம் செல்ல "வான் நடைவழி" என்று ஒன்றின் வழியே செல்வேன். பல மாடிகட்டிடங்களை ஒரு கூண்டு வழியால் இணைத்திருப்பார்கள். குளிருக்கு ஆளாகாமல் பல அலுவலகங்களுக்கும் மக்கள் இதனூடே செல்வார்கள். வழியில் சில் கடைகளும் இருக்கும். Starbuck குளம்பிக்கு பேர் போனது. எனக்கு அவ்வழியாக செல்லும் நசை அந்த தூக்கலான மணம் நுகரவே .

மணி: 8.55: ப்ராக்டர் & கேம்பிள் தலைமை அலுவலகம் தொடுகிறேன். தாயின் மணிக்கொடி இன்றும் பறக்குது காணீர். தூக்கு தூக்கியில் 6 ஆம் மாடி அடைந்தேன். கணினியை மேசைஅறையிலிருந்து எடுத்து உசுப்பி விட்டேன்.

மணி 9.03: கணினி உயிர்பெற்றது. அவரவர் அவரவர் வேலை பார்க்கிறார்கள். அலுவலக மடல் ஒன்றும் இல்லை.

வழக்கமாக வலையில் நாள் செய்திகள் வாசிப்பேன். இன்று மட்டும் முத்தமிழுக்கு இந்த திருமடல். என் அண்டைய வளையில் உள்ள சிங்கை நாட்டு பாசில் எட்டிபார்த்து தமிழில் அச்சடிக்க கடினமானதா என்கிறான். எனக்கு அச்சு வராது. வருபவர்களுக்கு எளிது. உனக்கு எந்த இந்தியமொழி தெரியும் என்றேனா, இந்தி சற்று தெரியும் என்றான். இந்திபோல் அல்லாது தமிழல் 30 எழுத்துக்கள்தான். ஆனால் மூன்று லகரங்கள் உண்டு என்று அவனுக்கு ழகரம் எப்படி சொல்ல்வது என்று சொன்னேன்.

மணி காலை 9.38: வந்த வேலையை கவனிப்போம். போ மடலே.
----------------------------------------------------------------------
மணி:மதியம் 1.00. அப்பாடா ஏறத்தாழ நான்கு மணி நேரம் வாங்குகிற காசுக்கு வேலை செய்தாச்சு. காலையில் உண்ட அவல் இந்நேரம் வரைக்கும் தாங்கியது. கொண்டுவந்த உண்டியை காபிடீரியாவில் போய் சாப்பிடலாம். நமக்கு துணை இல்லை. பாசிலும் மற்றும் சிலரும் வெளியே உணவங்களுக்கு போய்விட்டர்கள். நான் தினம் 5 வெள்ளி மிச்சம் பிடிக்கிறேன். ஆண்டு முழுதும் மிச்சம் செய்தால் தாயகத்துக்கு ஒரு பயணத்துக்கு காசு மிஞ்சும்.

அம்மணி என்ன கொடுத்து அனுப்பினாக. நாலு ரொட்டிதுண்டும் ஒரு வாழை, ஒரு ஆப்பிள். ரொட்டிக்கு ஜாம். போர். சரி என்ன செய்ய? நேற்று வெளியூர் போனவங்க இரவோடு மீண்டுவந்து இந்த சேவையாவது செய்தாங்களே. ஆனா ரொட்டி மட்டும் தின்று பழகிட்டோம் என்றால் காசு எத்தனை மிஞ்சும். ஒரு ரொட்டி 1 வெள்ளிதானே. ஓரிரண்டு நிமிடம் வேலை செய்தால் அந்த காசு ஈட்டிவிடலாம்.

இருக்கும் இடத்திலேயே சாப்பிடலாம். பலரும் அப்படிதானே செய்கிறார்கள். இன்றைய செய்திகள் என்ன? அப்பாடா! இன்று எந்த அமெரிக்கரும் ஈராக்கில் சாகவில்லை. கடவுளுக்கு நன்றி. Rediff, The Hindu ஒன்றும் பெரிய சேதி இல்லை. யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் அதையும் தெரிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யுதாமே. Very Good!

மணி:மதியம் 1.35: போய்கோ மடலே.
--------------------------------------------------------------------------
மணி:மாலை 4.30.

இன்னும் ஒரு மூன்று மணி நேரம் வேலைபார்த்தயிற்று. வழக்கம்போல் இப்பொது புறப்பட்டால் 4.40 க்கு வரும் பேருந்து பிடிக்கலாம். இன்னிக்கு மட்டும் அடுத்த பேருந்து பிடிப்போமே. ஆப்பிரிக்காவிலிருந்து வந்த குஜ்ஜு உட்பட இங்கே பணிபுரியும் மற்றவர் எல்லோரும் இன்னமும் பணி முசுவாக உள்ளார்கள். இத்தாலி மொழியில் சத்தமாக தொலைபேசுபவனை காணவிலை. ஒவ்வொருத்தனும் ஒவ்வொருமொழி பேசி நம்ம ஊரை நினைவு படுத்துவானுக. இவர்களுடைய மேலாளருக்கு பெருமிதம்.'நம் குழு மிக்க வேற்றுதன்மைகொண்டவர்கள் நிறைந்தது' என்று. இன்றைக்கு புதிதாக இணந்த இந்த இளம்பெண் யாராக இருக்கும். அறிமுகம் ஆகாமலா போகும்!!

மணி:மாலை 4.40. பேருந்துக்கு ஓட்டம். போ மடலே.
----------------------------------------------------------------
மணி: மாலை: 4.45: நகர சதுக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நிற்கிறேன் விமான நிலையம் போலத்தான் இந்த பேருந்து நிறுத்தமும். கூட்டம் இருப்பதாக தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேருந்துக்கும் மக்கள் சாரிசாரியாக வந்துகொண்டே இருக்கிறார்கள். வேறு வேறு தோற்றம் கொண்ட மக்களை வேடிக்கை பார்த்துகொண்டு உள்ளேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு ஆணும் பெண்ணும் சற்று உரக்கவே பேசிக்கொள்கின்றனர். என்ன வேலை செய்வார்களோ, தினமும் பார்க்கிறேன். அவர்கள் அவர்க்கே துணை.

பேருந்து வருகிறது. முன்னர் போன பேருந்து கூட்டத்தை வழித்துக்கொண்டு போய்விட்டது போலும். இதில்கூட்டம் அதிகமில்லை. ஒரு தமிழ் மகனும், ஒரு பாரதியும் இருந்தார்கள். இனிமேல் இந்த வண்டியில்தான் நாள்தோறும் பயணிக்க வேண்டும். சற்றே நெரிசல் இருந்தாலும் ஒரு குண்டு பெண் வந்து அருகில் உட்கார்தால் நாம்தான் ஒடுங்கி அமர வேண்டும். உடல் ஊனமுற்றவருக்கு தனி இருக்கை ஒதுக்கி இருப்பதுபோல் குண்டிகளுக்கும் ஒதுக்கி விட்டால் என்ன? என் புத்தகத்தில் 'ஆரியர்கள் படையெடுப்பா? ஆரியர் வெளிப்பரவலா?" என்ற படலத்தை வாசிக்கிறேன்.

மணி: 5:35 நான் கார் நிறுத்தும் இடத்தில் பேருந்து நின்றதும் இறங்கி விடுகிறேன். பேருந்துகளில் போகும் போது ஏறுகையில் காசு போட வேண்டும். மீளும் போது இறங்குகையில் காசு போட வேண்டும். ஓட்டுநரே, நடத்துனர். எனக்கு மூன்னர் அமர்ந்தவர் எழுந்து சென்ற பின்னரே நான் எழுந்து இறங்க வேண்டும். வரிசை, வரிசைக்கு வருந்தும் இந்த சீமை வாழ்க்கை.

மணி: 5.45 வீடு திரும்பியாயிற்று. மனைனயாள் இருக்க தேனிருக்கு என்ன பயம்.

இன்று நாள் வெம்மையாக உள்ளதால் தோட்ட வேலை செய்யலாம். இளவேனில் என்று பிறக்கும் என்று வானிலையார் சொல்லவில்லை. ஆனால் மணலுள் புதைந்த மனிதர் எழுந்து நிற்பதுபோல் இரண்டு மூன்று நாட்களில் துலிப்ப மலர்கள் எல்லாம் எழுந்து நினறு மஞ்சள், சிவப்பு மலர்களை தலையாட்டிக் கொண்டுள்ளன. புல்வெளி, யாரோ ஒருவன் நாளூம் நள்ளிரவில் வந்து அதன் பசுமையை மீண்டும் அடர்த்தி செய்துவீட்டு சென்றது போல் நாளொரு பச்சை பொழுதொரு நீட்டம் என்று வளர்கிறது. மரங்கள் எல்லாம் தம் ஆடைகளை உள்ளிருந்து வெளிக்கொணர்கின்றன். அடுத்த குளிர்காலம் வந்து விடுமோ என்ற அவசரத்தில் பூக்களதான் முதலில் என்று முந்தும் சில மரங்கள்.
இதோ அமெரிக்கா மால் வண்ணன் போல் மேனி போர்க்கும்.

நானும் நம் பங்குக்கு நம் வீட்டு புல்வெளிக்கு சற்றே உரம் இடுவோம்

மணி: மாலை 6.30 போ மடலே.
------------------------------------------------------------------------------------
மணி மாலை: 8.20, புல்வெளிக்கு உரம் இட்டு நீர் பாய்ச்சி விட்டாயிற்று. செழித்து வளரும் என்று நம்புகிறேன். இன்னமும் மங்குல் விழ வில்லை. வழக்கமாக என் இரு நாய்களுடன் முயல் வேட்டைக்கு போவேன். ஒரு வாரமாக போவதில்லை. கடுவன் நாய்க்கு உடம்பில் தோன்றிய கட்டிகளை மருத்துவரிடம் களையச்சொன்னோம். தையல் இட்டு அவனுக்கு ஓய்வு கொடுக்க மருத்துவர் ஆணையிட்டார்.

மனையாள் சப்பாத்தியும் கோழி குருமாவும் செய்து படைத்தார்கள். பாவம்! மதியம் ரொட்டி சாப்பிட்டீரே, பசித்திருப்பீர்கள் என்று வருத்தப்பட்டுக்கொண்டாள். நான் போன பிறவியில் பாஞ்சாபியாக இருந்ததால் எனக்கு சப்பாத்தி என்றால் கொள்ளை விருப்பம். ஒரு வயிறு பிடித்தேன்.

மணி இரவு 9.00: சன்னில் செய்திகள் வரும். கேட்க வேண்டும். பின் 9.30 க்கு சூப்பர் பத்து . குண்டு பொண்ணு ஆர்த்தியொட காமெடி பார்க்கணும். அத்தோடு காலையில் பதிவு செய்யப்பட்ட சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியை வி்ளம்பர வேளையில் பார்க்கவேண்டும்..

9.30 இரவு ஓடிப்போ மடலே.
-------------------------------------------------------------------------------------------------
மணி. இரவு:10.00. எல்லா மடல்களையும் வாசித்தாயிற்று. சொல்லவேண்டியவற்றை சொல்லி விட்டேன். பட்டி மன்றத்தின் பக்கம் யாரையும் காணவில்லை.

என் திருமதி கோலங்கள் பார்க்கிறார்கள்.

நான், இனி படுக்கைக்கு போக வேண்டியதுதான். உறங்கத்தான்.

மணி: இரவு 10.30 போ மடலே.
----------------------------------------------------------------------------------------------
முற்றும்.


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

பா.ஜ.கவில் பேன்டேஜ் பாண்டியன் - செல்வன்

மாலை நேரம் ஆனவுடன் பேன்டேஜ் பாண்டியன் அப்படியே காற்று வாங்க வெளியே போனார்.பா.ஜ.க அலுவலகமான கமலாலயம் கண்ணில் தெரிந்தவுடன் அப்படியே மெதுவாக உள்ளே நுழைந்தார்.

"வாங்க பாண்டியன் இப்ப தான் கண் தெரிஞ்சதா,பெரிய கட்சிகளை கண்டுக்குவீங்க,எங்களை எல்லாம் விட்டுடுவீங்க" என அட்டகாசமாக சிரித்தபடி நம்மை வரவேற்றார் இல.கணேசன்.

"எலெக்ஷன் வேலை எப்படி போகுது?" என கேட்டார் பாண்டியன்.

"அதை ஏன் கேக்கறிங்க?234 தொகுதிக்கும் ஆள் புடிக்கறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.என்னை கேட்டா 10 அல்லது 12 தொகுதிக்கு மேல இருக்க கூடாதும்பேன்.வேட்பாளர் பிரச்சனைய கூட எப்படியோ சம்மளிச்சுடலாம்னு வையுங்க.ஆனா ஒவ்வொரு வேட்பாளருக்கும் 10 பேர் முன்மொழியணும்னு சொல்றாங்க.2340 பேருக்கு நாங்க எங்க போறது?" என கவலையுடன் சொன்னார் கணேசன்.

"அப்புறம் என்ன தான் பண்ணீங்க?" என கேட்டார் பாண்டியன்.

"ஒவ்ப்வொரு தொகுதில இருக்கற கோயிலுக்கு டூர் வர்ராங்க பாருங்க வடநாட்டுக்காரங்க.அவங்களை கூட்டி வந்து சமாளிச்சோம்" என உற்சாகமாக சொன்னார் கணேசன்."இதுல காமடி என்னன்னா ஒரு 4 அல்லது 5 தொகுதிக்கு ஆளே கிடைக்காம திண்டாடிட்டு இருந்தோம்.வசமா ஒரு சேட்டு மாட்டினாரு.வேட்பு மனுவை முன்மொழிய கையெழுத்து போடுங்கன்னு சொல்லி வேட்புமனுவிலயே கையெழுத்து வாங்கிட்டோம்.தமிழ் தெரியாம அவரும் கையெழுத்து போட்டு வேட்பாளராயிட்டார்" என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.

"அட பாவமே.2 தொகுதிக்கு மேல கையெழுத்து போட்டா மனு தள்ளுபடியாயிடுமே?" என அனுதாபத்துடன் சொன்னார் பாண்டியன்.

"ஆகட்டும்.அப்படி தள்ளுபடி ஆனா அதை வெச்சே ஒரு அனுதாப அலையை உருவாக்கிட மாட்டோமா என்ன?" என்றார் கணேசன்.

அவர் நிஜமாகவே சொல்கிறாரா இல்லை ஜோக் அடிக்கிறாரா என்பதை பாண்டியனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

"உங்க கூட்டணில மொத்தம் எத்தனை கட்சி?" என கேட்டார் பாண்டியன்.

"யாருக்கு தெரியும்?கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை லெட்டர் பேட் கட்சிகளும் எங்க கூட்டணில தான் இருக்குன்னு வையுங்களேன்" என்றார் கணேசன்.

"இத்தனை பேரை எப்படி புடிச்சீங்க? என்று கேட்டார் பாண்டியன்.

"நாங்க விஞ்ஞான முறையில தான் எல்லாத்தையும் அணுகுவோம்.கூட்டணி பத்தி பேச ஒரு பெரிய டீமே போட்டோம்.டீம் மெம்பருங்க எல்லாம் தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை பிரின்டிங் பிரஸ்சுக்கும் போய் லட்டர் பேட் ஆர்டரை எல்லாம் வாங்கி பாத்து கட்சிகளோட் அட்ரஸ்,போன்நெம்பர் விவரத்தை தொகுத்து அவங்களை புடிச்சு கூட்டணில சேத்தோம்.இத்தனை பிரின்டிங் பிரஸ்சுக்கு போய் கடசில என்ன ஆச்சுன்னா பிரின்டிங் பிரஸ் சங்கத்தையே அரசியல் கட்சியா மாத்தி அவங்ககளுக்கு "அச்சு"றுபாக்காம் தொகுதிய ஒதுக்கிட்டோம்" என பெருமையுடன் சொன்னார் கணேசன்.

"பெரிய சாதனை இல்ல பண்ணிருக்கீங்க" என்றார் பாண்டியன்.

"சும்மாவா? லெட்டர் பேட் கட்சிகளை வச்சு யாராவது பி.கெச்டி பண்ணணூம்னா எங்க கிட்ட அனுப்புங்க.எத்தனை சுவாரசியமான தகவல்கள் இருக்கு தெரியுமா?" என்றார் கணேசன்.

"கொஞ்சம் எடுத்து விடுங்களேன்" என்றார் பாண்டியன்.

"தமிழ்நாட்டில் முதல் கட்சி ராஜராஜ சோழன் காலத்தில் உத்தரமேரூர் தேர்தலில் போட்டியிட்ட 'தஞ்சை குடியானவர் கழகம்'.தலைவர் சோழகுலாந்தக பெருவழுதி.துவக்கப்பட்ட வருடம் கிபி965" என்றார் கணேசன்.

"இவங்களும் உங்க கூட்டணில இருக்காங்களா? என்ன" என்றார் பாண்டியன்.",

"பின்ன விடுவமா?சாண்டில்யன், கல்கி, இப்படி பல சரித்திர நாவல்களை படிச்சு இந்த கட்சி இருக்குற ஆபிசை கண்டுபிடிச்சு....அதெல்லாம் ஒரு பெரிய கதை" என்று பெருமூச்சு விட்டார் கணேசன்.

"சரி.பிரசார சுற்றுப்பயன திட்டம் எல்லாம் தீட்டியாச்சா?" என்றார் பாண்டியன்.

"ஓ" என்றார் கணேசன்."12ம் தேதி கொடைக்கானல்,13ம் தேதி ஊட்டி,14தேதி ஏற்காடு,15ம் தேதி குற்றாலம்,16ம்தேதி பவானிசாகர் டேம்,17ம் தேதி வைகை அணை,19ம் தேதி வைதேகி நீர்வீழ்ச்சி.." என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.

"என்னங்க.எல்லாம் ஜாலிடூர் அடிக்கிற இடமா இருக்கு?தேர்தல் பிரச்சார பயணம் மாதிரி தெரியலையே" என்றார் பாண்டியன்.

"ரொம்ப நாளா வீட்டுல கொழந்தைக இந்த இடமெல்லாம் பாக்கணும்னு சொல்லிட்டிருந்தாங்க.கோடைகாலத்துல ஸ்கூல் வேற லீவு.சரின்னு பிரச்சார பயணத்தையும் கோடை விடுமுறை சுற்றுப்பயணத்தையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணிட்டேன்.பிரச்சாரம் பண்ண மாதிரியும் ஆச்சு,டூர் போன மாதிரியும் ஆச்சு" என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.

"சரி வந்தது வந்தீங்க.ஒரு வேட்புமனுவில கையெழுத்து போடக்கூடாதா" என்றார் கணேசன்.

அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார் பாண்டியன்."

Wednesday, April 19, 2006

மல்லிகை கமழ்தென்றல்- நா. கண்ணன்

மல்லிகை கமழ்தென்றல் ஈரும் மாலோ!
வண்குறிஞ் சிஇசை தவரும் மாலோ!
செல்கதிர் மாலையும் மயக்கும் மாலோ!
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கும் மாலோ!
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறுஅரி ஏறுஎம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ!

(திருவாய்மொழி 9.9.1)

சடகோபன், மாறன், பாராங்குசன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இங்கு
தன்னைப் பாராங்குச நாயகியாக பாவித்து, கண்ணன் வாழும் கோகுலத்தில்
கண்ணனின் சிறுபிரிவையும் தாங்காத கோபியர் மனோநிலையை இங்கு தமிழ் அகமரபின்
வழியாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

இராமாவதாரத்தில் இராமனைப் பிரிந்து அயோத்தி 14 ஆண்டுகள் பட்ட பாட்டை
கோகுலத்தில் கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சியர் ஒரு மாலைப் பொழுதில்
பெறுகின்றனராம்!

"விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டுஊழி நிற்கஎம்மை
உளைவான் புகுந்துஇது வோர்கங்குல் யிரம் ஊழிகளே!" (திருவிருத்தம் 70)

ஐன்ஸ்டைன் திவ்யப்பிரபந்தம் படித்தாராவென்று தெரியவில்லை, ஆனால் தனது
சார்புடைமைத் தத்துவத்தை விளக்க, நம்மாழ்வார் போல் காதலியின்
காத்திருத்தலை உதாரணமாகச் சொல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் பொழுது
ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகிறது. அதே நேரத்தில் காதலியுடன் இருக்கும்
போது ஒரு யுகம் கூட ஒரு நொடி போல் கரைந்து விடுகிறது. இதோ, நளவெண்பா:

"ஊழி பலஓர் இரவு யிற்றோ என்னும்"

இந்த காதலர் மனோநிலையை சட்டம் போட்டுக் காட்டும் இன்னொரு காட்சி,
கம்பராமாயணத்திலிருந்து.....

விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும்
எரிநிறச் செக்கரும் இருளும் காட்டலால்
அரியவட்கு அனல்தரும் அந்தி மாலையாம்
கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான்

கம்பன் போடும் கம்பளம் (ஓவியப் படுதா) எப்போதுமே பிரம்மாண்டமாக
இருக்கும். மிதிலையில் சீதையின் நிலையைப் பாருங்கள். வழக்கம் போல்
சூரியன், தன்பாட்டுக்கு மாலையில் மறைகிறது. ஆயின் சீதைக்கு அது எப்படி
இருக்கிறது? "கருநிறச் செம்மயிர்க் காலன்" போல் தோன்றுகிறது!! அப்பாடா!
பிரிவுத் துயர் என்பது கொடுமையானது. தன் இன்னுயிராக இருக்கும் காதலன்,
காதலி பிரிவு என்பது மிகக் கொடுமையானது.

"சீதையுடன் இருக்கும்போது எந்தப் பொருள்கள் இனியனவாய் இருந்தனவோ, அந்தப்
பொருள்களே அவள் இல்லாமல் இருக்கும் போது துன்பம் பயப்பனவாய் இருக்கின்றன"
(கிஷ்கிந்தா காண்டம் 1:69)"

"மலர்களின் வாசனையுடன் கூடியதும் இளமையாக வீசுவதும், குளிர்ச்சியுடன்
கூடியதுமான இந்தக் காற்று, அந்தச் சீதையைப் பற்றி நினைத்துக்
கொண்டிருக்கையிலே எனக்கு நெருப்புக்குச் சமானமாய் இருக்கிறது (கிஷ் 1:52)

என்கிறான் இராமன். இதுவும் சார்புடைமைதான். நமக்குப் பிரியமானவர்கள்
இருக்கும் போது உலகமே பிரியமானதாக உள்ளது. அதுவே சோக மனோநிலையில்
வெறுக்கத் தக்கதாய் உள்ளன.

[வேறு:
கம்பன் நம்மாழ்வாரின் பரம பக்தன். நம்மாழ்வார் கையாளும் சொற்களை ஆசையுடன்
இவனும் கையாள்வான் (அவனது முதற்பாடலே அதற்கு சாட்சி). இங்கும் "செக்கர்
நன் மேகங்கள்" என்னும் நம்மாழ்வாரின் உபயோகத்தை "எரிநிறச் செக்கரும்
இருளும்" என்று பயில்கிறான்.]

இப்பொது பாராங்குச நாயகி விரிக்கும் கம்பளத்தைப் பார்ப்போம். இந்தியா
போன்ற சூடான நாட்டில் தென்றல் என்பது ஒரு சுகானுபவம். அந்தத் தென்றல்
வரும் வழியில் மல்லிகை மணத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தால்? ஆகா! என்ன
சுகம். இல்லையா? இல்லை! என்கிறாள். பாராங்குச நாயகி. இந்த பாழாப்போன
தென்றல் என்று திட்டுகிறாள்! இந்தத் தென்றலும், மல்லிகை மணமும் எப்படி
உள்ளதாம்? வாளினால் வெட்டினால் தரும் துன்பம் போல், அது மட்டுமல்ல அது
நஞ்சு தீட்டிய வாள் வேறு!! ஐயோ! ஏற்கனவே பிரிவுத்துயரில் பிரிந்து
போயிருக்கும் உயிரை இது இன்னும் கூறு, கூறாய் அறுக்கிறதே!

குறிஞ்சி இசை வருகிறது (கவனிக்க: இங்கு குறிஞ்சி இசை என்கிறார் மாறன்.
முல்லை இசை என்று சொல்லவில்லை. கண்ணனைக் குறிஞ்சித் தலைவன் என்று ஈடு
சொல்வதற்கு இதுதான் காரணம்). இசை எவ்வளவு இன்பம் தரக் கூடியது. ஐயோ, வண்
குறிஞ்சி இசை தவரும் என்கிறாளே பாராங்குச நாயகி! "புண்ணிற் புளிப்
பெய்தாற் போல்" (ஆண்டாள்) ஆகிவிட்டது நிலமை. காற்றும், மல்லிகையும்
கூட்டிய பிரிவை இசை மேலும் கூட்டுகிறது. இவையெல்லாம் தங்களுக்குள் இரகசிய
கூட்டணி அமைத்துக் கொண்டு இராப்படை ஏறுவாரைப் போல் இவளை தப்பித்து ஓடா
வண்ணம் துன்புறுத்துகின்றன. இந்த அவதியை, இம்சையை கவி நயத்தோடு ஒப்புமைப்
படுத்திக் காட்டும் ஈடு - துன்புறுத்துகின்ற பொருட்கள் எல்லாம், முன்பு
தனித்தனியே, இழி சொற்களைப் பேசி நலிந்த ஒற்றைக்கண்ணள், ஒற்றைக்காதள்
உள்ளிட்ட அரக்கிகள் பின்பு அவ்வளவில் நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல்
விழுந்து, அதற்கு மேலே நலிவுகளைச் செய்ய நினைத்தாற் போல - என்று அசோக
வனத்தில் சீதை பட்ட அவதியுடன் ஒப்புநோக்குகிறது.

செல் கதிர் மாலையின் மையலில் அவதியுற்ற அனுபவம் உண்டோ ? நான் இந்தியாவில்
இருந்த மட்டும் மாலைப் பொழுதை வெளியே களிக்கவே விருப்ப முற்றேன். அது
மறைந்து இரவு வருவதைக் கண்ணால் காண வேண்டும். அப்போதுதான் ஒரு நிம்மதி.
அது மயக்கும் மாலை. இரண்டும் கெட்டான் பொழுது. விவரிக்க முடியாத ஒரு
சோகம் கவ்வும் பொழுது. அதனால்தானோ "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா!" என்று பாடினான் இன்னாளைய கவிஞன்.

இந்தியாவின் மாலைகள் சிறப்பு வாய்ந்தன. மாலை நேரத்தின் செந்நிறத்தையும்
கருமையான நிறத்தையுமுடையவான மேகங்கள் கண்ணனின் நிறத்தை ஒத்து இருத்தலால்
அவையும் துன்பம் தருவனவாயின.

அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம்.

காதல் பற்றிச் பேசுவதால் கண்ணனின் தாமரைக் கண்னை முன்னால் சொல்கிறார்.
ஏன்? கண்கள்தானே காதலின் சாளரம்!

நண்ணரு நலத்தினான் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றைஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் (கம்பராமாயணம்)

கண்ணன் நம்மாழ்வாரைப் பார்த்த போது என்ன நடந்ததாம்? "கலக்கும் போது
மின்மினி பறக்கும்படி காணும் கலந்தது" என்கிறது ஈடு. இப்படி உவமைக்கு
மேல் உவமை வைத்துப் பேசும் வைணவ ஆசார்யர்களின் உரைகள் பால், கலந்து தேன்
கலந்து ஊனுடன் உயிர் கலத்தல் போல் இனிமைக்கு இனிமை செய்கின்றன. அவர்தம்
தமிழ், வட மொழிப் புலமை மெய் மறக்க வைக்கிறது.

இன்னும் வியாக்கானத்தைப் பாருங்கள்! கண்ணன் வந்த போது தழுவிய முலைகளும்,
தோள்களும் அவன் இல்லாத இம்மாலைப் பொழுதில் "பஞ்ச காலத்தில் குழந்தைகள்
சோறு, சோறு என்னுமாறு போல படுத்தாநின்றன" என்கிறது ஈடு :-))

இத்தனை அவதியும் எப்படி உண்டாயின?

இறைவனைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்க, அதற்கு அனுகூலமாக ஒரு
சங்கின் ஒலியோ, நாண் ஒலியோ, திருவடி, திருச்சிறகு ஒலி போன்ற நற்
சகுனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அனுகூலமாகக் கருதப்படும் பொருள்கள்
கூட துன்புறுத்தத் துவங்கின.

இந்த சுகமான சோகம் அனுபவித்தவர்களுக்கே புரியும்.

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

"நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா" போட்டி அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா
கவிதை மற்றும் கட்டுரை போட்டி
அறிவிப்பு மடல்

இணையத்தின் இனிய நண்பர்களே! சக குழும நண்பர்களே வணக்கம்!
உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கவிதை மற்றும் கட்டுரை போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:
1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.
2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.
3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.

போட்டி விதி முறை:

கவிதை !
1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட கவிதையாய் இருத்தல் வேண்டும்! (தலைப்பு உங்கள் விருப்பப்படி வைக்கலாம்)
2. கவிதை வரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! மரபுக்கவிதை (அ) புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.
3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!
4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

கட்டுரை !
1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் சமூக பார்வை கொண்ட கட்டுரையாய், மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் கட்டுரையாய் இருத்தல் வேண்டும்!
2. குறைந்தபட்சம் ஒருபக்கம் அளவில் இருக்க வேண்டும். மற்றபடி கட்டுப்பாடு இல்லை.
3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!
4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்
14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்

தேர்வு குழு
படைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள்.

உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.
முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை.
கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.

அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்க!

முக்கியக் குறிப்பு :
தேர்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4