அகமே புறம் - பகுதி 3
அகமே புறம் - 3.
மனத்தின் தன்மையும் வன்மையும் -2
தனது சொந்த நிலைமைகளைச் சிருஷ்டித்துக் கொள்வதற்கும், தான் வாழ்வதற்குத்தக்க நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கும், ஏற்ற சக்தி மனத்தினிடத்தில் உண்டு. மனம் எந்த நிலைமையையும் மாற்றுதற்கும், எந்த நிலைமையை விட்டொழித்தற்கும், வல்லமையுடையது.
ஆன்றோரும்,
"கெடுக்க வல்லதுங் கெட்டவர் தங்களை
யெடுக்க வல்லது மிம்மனம்...."
என்று கூறியுள்ளார்.
அது பல நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக அநுபவித்து அவற்றின் ஞானத்தை அடையுங் காலையில் தனது நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக் மாற்றிக்கொண்டும், கைவிட்டுக்கொண்டும் இருக்கிறது.
உள்நோக்கும் நினைப்புக்கள் ஒழுக்கத்தையும் வாழ்வையும் உண்டு பண்ணுகின்றன; நினைப்புக்களை மனிதன் தனது விருப்பத்தாலும் முயற்சியாலும் திருத்திக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் கூடும். பழக்கமும் பலவீனமும் பாவமுமாகிய தளைகள் தன்னாலேயே யுண்டுபண்ணப்படுகின்றவை; அவை தன்னால் மாத்திரம் அழிக்கப்படக்கூடும்; அவை ஒருவனுடைய் மனத்திலின்றி வேறெங்கும் இல்லை; அவை புறப்பொருட்களோடு சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவை உண்மையில் அப் புறப்பொருட்களின் கண் இல்லை.
புறம் அகத்தால் ஆக்கவும் திருத்தவும் படுகிறது. அகம் ஒருபோதும் புறத்தால் ஆக்கப்படுவதும் திருத்தப்படுவதும் இல்லை. மனக்கவர்ச்சிக்கு ஏது புறப்பொருளில் இல்லை; ஆனால், அப்பொருளின் மீது மனம் கொண்டிருக்கிற ஆசையில் இருக்கிறது. துன்பமும் நோவும் புறப்பொருட்களிலும் வாழ்வின் சம்பவங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை; ஆனால், அப்பொருட்களை அல்லது சம்பவங்களைப் பற்றிய மனத்தின் ஓர் ஒழுங்குபடாத நிலைமையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. தூய்மையால் ஒழுங்கு செய்யப்பட்டு, ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட மனம் பிரிக்கக்கூடாத வண்ணம் துன்பத்தோடு கட்டப்பட்டுள்ள சகல அவாக்களையும் காமங்களையும் ஒழித்துத் தெளிவையும் சாந்தியையும் அடைகிறது.
பிறரைக் கெட்டவர் என்றலும், கெடுதிக்கு மூலம் புறநிலைமைகள் என்றெண்ணி அவற்றோடு போராடுதலும் உலகத்தின் துன்பத்தையும், அமைதியின்மையையும் அதிகப்படுத்துவதன்றிக் குறைப்பதில்லை. புறம் அகத்தின் நிழல், அகத்தின் ககரியம். அகம் சுத்தமாயிருக்கும்பொழுது புறத்திலுள்ள சகல காரியங்களும் சுத்தமாயிருக்கின்றன. ஆன்றோரும்,
"கற்றதங் கல்வியுங் கடவுட் பூசைய
நற்றவ மியற்றலு நவையி றானமு
மற்றுள வறங்களு மனத்தின் பாலழுக்
கற்றவர்க் கேபய னளிக்கு மென்பரால்"
என்று கூறியுள்ளார்.
மனம் விரியும்....
நன்றி
ஜேம்ஸ் ஆலன்
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
0 Comments:
Post a Comment
<< Home