Friday, February 17, 2006

வீரபாண்டிய கவுண்டமணி - அன்புசெல்வன்

வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர். கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார்,மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா? கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை.

ஜாக்சன்:"நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?"

கவுண்டர்:"ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா. நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?"

ஜாக்சன்:"ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?'

கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும், பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பண்ணிக்குட்டி மாதிரி இருக்கே? கலரே அப்படியா இல்லை வெண்குஷ்டம் வந்து இந்த மாதிரி ஆயிட்டியா?"

செந்தில்:"அண்ணே கொஞ்சம் அடக்கி வாசிங்க. டுப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கப்போகிறான்"

கவுண்டர் :"அப்படியாடா சொல்றே?" (பயத்துடன் திரும்பி) "நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர். அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர்"

ஜாக்சன்: " நட்பு வேண்டும். ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உன்னிடம்"

கவுண்டர்: "இல்லைங்க ஆபீசர். நான் நல்லா தான் நடப்பேனுங்க ஆபீசர். இதோ பாருங்க ரஜினி மாதிரி நடந்து காட்டட்டுமா?"

ரஜினி,கமல் போல் பல விதங்களில் நடந்து காட்டுகிறார். ஜாக்சனுக்கு கோபம் வருகிறது.

ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
கவுண்டர்:"என்ன குற்றம் அப்படின்னு சொன்னா திருத்திக்கிவேனுங்க ஆபீசர்"

ஜாக்சன்: "சொன்னால் எண்ணிக்கை தெரியாது."

கவுண்டர்: (நக்கலாக)"ஓ ஐ ஆம் சாரி. நீங்க எண்ண தெரியாத தற்குறியா ஆபீசர்?(உரத்த குரலில்) ஆமா எண்னவே தெரியாத உனக்கெல்லாம் எவன்டா வேலை போட்டு குடுத்து ஊரையே கூட்டி பெருக்கற நீளத்துக்கு கவுனையும் மாட்டி விட்டான்?"

ஜாக்சன்:"எனக்கா எண்ணிக்கை தெரியாது?அகமபாவம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். பல வருடங்களாக கிஸ்தி,திறை,வரி,வட்டி இது எதுவும் நீ செலுத்தவில்லை"

கவுண்டர்: "வானம் பொழியுது, பூமி விளையுது. நடுவுல வெள்ளைப் பண்ணி உனக்கெதுக்குடா புரோக்கர் கமிஷன்? நீ என்ன என் கூட வயலுக்கு வந்து சோத்துபானை திருடி அடி வாங்கினாயா?என் கூட சேர்ந்து ஊர்ல கடன் வாங்கிகிட்டு ஒண்ணா தலைமறைவானாயா?இல்லைனா முனியம்மா என்னை போட்டு மொத்தினப்ப வந்து காப்பாத்துனையா?இல்லை இந்த பேரிக்கா மண்டையன் கிட்ட நான் சிக்கிதவிச்சப்ப வந்து ஆறுதல் சொன்னாயா?
என்ன எளவுக்குடா உனக்கு நான் கிஸ்தி கட்டணும்?அடேய் டோப்பா தலையா,நான் இங்க வந்தா உங்கிட்ட அஞ்சோ,பத்தோ கடன் வாங்கிட்டு போலாம்னு பாத்தா நீ எங்கிட்டையே வரி வட்டி கேக்காரயா?நியாயமாடா இது?ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?"

ஜாக்சன் ஆவேசத்தில் முறைக்க கவுண்டமனி தன் மீசையை முறுக்குகிறார்.

ஜாக்சன்: "என்ன மீசையை முறுக்குகிறாயா?அது ஆபத்துக்கு அறிகுறி.உன்னை கைது செய்ய உத்தரவிடுகிறேன்"

கவுண்டர்: "ஐயோ ஆபீசர்.இது ஒட்டு மீசை.இந்தாங்கோ"

மீசையை தூக்கி எறிந்துவிட்டு கவுண்டர் ஓடுகிறார்.

Thursday, February 16, 2006

சன்னலும் windowsம் - விழியன்
















அம்மை தாக்கியதாய் நினைவு..
அழுகை இல்லாமல் வாரக்கணக்கில் விடுமுறை..
தொலைக்காட்சி தொல்லை தொலைவிலிருந்த நாட்கள்..
இரண்டு நாளில் வெறுத்து போனது அனைத்தும்..
உதவிக்கரம் நீட்டியது சன்னல் ஒன்று..
அட என்ன சுவாரஸ்ய உலகமிது..
அழுது கொண்டே அடுத்த வீட்டு பையன் பள்ளிக்கு
அவசர அவசரமாய் அலுவலகத்திற்கு அந்த சொட்டை மாமா
நேரம் தவறாமல் பத்து மணிக்கு பிச்சை..
மத்தியம் கொஞ்சம் மழை....
சருக்காமரமாடியது மழைத்துளிகள் டெலிபோன் கம்பியில்..
கிளம்பிய மண் வாசனை..
குறுக்கும் நெடுக்குமாய் இரண்டு இளவட்டம்
எதிர் வீட்டு அக்காவிடம் சைகை காட்டியபடி...
ஊர் கதை வம்படித்தபடி அம்மாக்கள்..
அன்று..
கை பிடித்து உலகை ரசிக்க சொன்னது சன்னல்..
இன்று..
கையை சுறுக்கி
உலகை மறக்கடிக்க வைத்து..
ரசனையில் மண் அள்ளி..
முடக்கி விட்டது WINDOWS

Wednesday, February 15, 2006

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வைராஷா - (முத்தமிழுக்காக டசிதரன்)

அட்டாக் வைரஷா (மாணிக்கம்) - "சூப்பர் ஸ்டார்" ரஜினி
வைரஸ் ஆன்டனி - ரகுவரன்
ஜனகராஜ்
வைரசாமி - விஜயகுமார்

சீன் 1 (அமெரிக்காவில்)
வேலையாள்: ஆண்டவா!! தெரியாத் தனமா வைரஸை டவுன்லோட் பண்ணிட்டன், முதலாளிக்குத் தெரிஞ்சா வேலையை விட்டு நிறுத்திடுவார். இப்ப நான் என்ன பண்ணுறது?!?
ஜனகராஜ்: இந்தாங்க, புடிங்க ஆன்டி வைரஸ் புரொகிராம்! நம்ம மாணிக்கம் அண்ணேதான் குடுத்து அனுப்பிச்சு.
வேலையாள்: (வாங்கியபடி) அவர் நல்லா இருக்கணும்!

சீன் 2
வேலையாள் 2: அய்யய்யோ...இன்னிக்கு பார்த்து வைரஸ் வந்திடிச்சு. முதலாளி வேற வர்ர நேரம், டவுன்லோட் பண்ணலாம் எண்டா இன்டநெட் வேலை செய்யல்ல. காப்பாத்து ஆண்டவா!!!
ஜனகராஜ்: இந்தப்பா, இதை புடி.
வேலையாள் 2: யாருண்ணே கொடுத்தா??
ஜனகராஜ்: நம்ம மாணிக்கம்தான் குடுத்திச்சு. சொஃவ்ட்வேயர்காரனுக்கு ஒரு ஆபத்து எண்டா, அது எல்ல சொஃவ்ட்வேயருக்கும் ஆபத்து எண்டு சொல்லி அனுப்பிச்சு!
வேலையாள் 2: மாணிக்கம் அண்ணே இப்ப எங்க??
ஜனகராஜ்: (ஒரு கண் மூடியபடி) இன்னைக்கு பில் கேட்ஸுக்கு பிறந்த நாளா இல்லையா, அண்ணன் கொம்பியூட்டர்ல பட்டைய கிளப்பிட்டு இருப்பார்!!

(இசை - டிடி.டிடி.டிடி டின்..டிடி.டிடி.டிடி டின்...)

நான் வைரஸ்காரன் வைரஸ்காரன்
நாலும் அழிக்கும் ஆன்டி வைரஸ்காரன்
நாயமான புரொகிராமிங்காரன்
நல்லா எழுதும் புரொகிராமிங்காரன்
பில் கேட்ஸ் பிறந்த ஊருக்காரன்
வைரஸ் வந்தா அழிக்கும் ஆன்டி வைரஸ்காரன்
இன்டநெடில் டவுன்லோடிங்காரன்
எம்.எஸ்.என்'ல சட்டிங்காரன்டா!
குவிக்'கான ஆன்டி வைரஸ்காரன்டா!!
நான் எப்பவுமே எம்புளோயிஸ்க்கு சொந்தகாரன்டா!

நான் எப்பவுமே எம்புளோயிஸ்க்கு சொந்தகாரன்டா!

வைரஸ் எண்டா அஜுக்குதான், ஆன்டி வைரஸ் எண்டா குமுக்குதான்!!

டவுன்லோட் பண்ணியாச்சு, வைரஸ் வந்தாச்சு
ஸ்கான் செய்ய போயி பாதி வயசாச்சு
வேலை ஃபயர் ஆகும் நேரத்தில
இருப்பான் ஆன்டி வைரஸ் ஓரத்தில

டவுன்லோட் பண்ணினா வைரஸ் வரும் சொல்றாங்க
நீங்க டவுன்லோட் பண்ணாமா ஆன்டி வைரஸ் வரும் சொல்றேங்க..
ஆ...டவுன்லோட் பண்ணினா வைரஸ் வரும் சொல்றாங்க
நீங்க டவுன்லோட் பண்ணாமா ஆன்டி வைரஸ் வரும் சொல்றேங்க..

குவிக்'கா போய் வாங்கு, இது குவிக் ஆன்டி வைரஸ் பாரு..
குவிக்'ஆன ஆன்டி வைரஸ்காரன்டா!!
நான் எப்பவுமே எம்புளோயிஸ்க்கு சொந்தகாரன்டா!

ஐயா இன்டநெட் டவுன்லோடர்ஸே! வைரஸ் வர விடமாட்டேன்
பெரிசோ, சின்ன வைரஸோ அழிக்கமா விடமாட்டேன்
அங்ககே டவுன்லோட் பண்ணினா வைரஸு
அதுக்கு இருக்குது ஆன்டி வைரஸு

நான் ஸ்கான் பண்ண இலவசமா வாரேம்மா
உன் கொம்பியூட்டர்ல இன்ஸ்டால் பண்ணி தாரேம்மா
வைரஸ் உள்ள ஆளும் எங்கள நம்பி வருவான்
அட்ரெஸ் இல்லா ஃபைலும் இந்த ஆன்டி வைரஸ்காரன் அறிவான்

குவிக்'கான ஆன்டி வைரஸ்காரன்டா!!
நான் எப்பவுமே எம்புளோயிஸ்க்கு சொந்தகாரன்டா!
நான் எப்பவுமே எம்புளோயிஸ்க்கு சொந்தகாரன்டா!
வைரஸ் எண்டா அஜுக்குதான், ஆன்டி வைரஸ் எண்டா குமுக்குதான்!!
வைரஸ் எண்டா அஜுக்குதான், ஆன்டி வைரஸ் எண்டா குமுக்குதான்!!
------------------------
தங்கச்சி: அண்ணே, எனக்கு கிடைக்க வேண்டிய சொஃவ்ட்வேயர் என்ஜினியர் கோட்டாவை அவங்க ஹக் பண்ணி வேற பேருக்கு குடுத்திட்டங்க :(
..............
ரஜினி: ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு :)
(ஷா..ஷா..வைரஷா..வைரஷா..அட்டாக் வைரஷா..அட்டாக் வைரஷா..)

கோட்டா மனேஜர்: அண்ணே..ஸாரிண்ணே...நீங்க யாருண்ணு தெரியாம ஹக் பண்ணிட்டேன்..

ரஜினி: கண்ணா நான் பாக்கத்தான் சொவ்ட்வேயர், இறங்கினா ஹார்ட்வேயார்!!
------------------------
ஜனகராஜ்: மாணிக்கம் நம்ம தங்கச்சிக்கு தாரன் எண்டு சொல்லிட்டு அவங்க நம்மல ஏமாத்திட்டாங்கப்பா!! :'(

(மாணிக்கம் கொதிக்கிறார்..அனைத்து கொம்பியூட்டருக்கும் அட்டாக் வைரஸ் அனுப்பி கதி கலங்க வைக்கிறார்)

தம்பி: அண்ணே, நீங்க அனுப்பின வைரஸ் ஃபைலை பாத்து எல்லாரும் ஷாக் ஆகி நிக்கிறாங்க. அத டீரிட் பண்ண டிரை பண்ணின அத்தின பேரும் மிரண்டு போய் இருக்கங்க. வைரஸை வைரஸால அழிக்க தெரிஞ்ச ஒருத்தனால தான் இதை அனுப்ப முடியும் என்கிறாங்க. சொல்லுங்க நீங்க இந்தியாவில என்ன பண்ணிட்டு இருந்திங்க?? யாருக்காக இந்த ஆன்டி வைரஸ் வேசம்?? சொல்லுங்க....சொல்லுங்க....சொல்லுங்க....???

ரஜினி'ஸ் ஃபிளாஷ்பாக் இன் இந்தியா... Oooooooo (வட்டம் சுத்திறன்)

ரஜினி: அன்வர், அண்டைக்கு வைரஸ் ஆன்டனி ஊருக்குள்ள வைரஸ் பரப்பிட்டு இருந்தான். ஊரே அவன் வைரஸுக்கு பயந்து நின்னுச்சு. அப்போ நீயும், நானும் ஒரு கொம்பியூட்டரோட தனிய நிண்டோம். அப்பவே அவன் நம்ம கொம்பியூட்டருக்கு வைரஸ் அனுப்பி அழிச்சு இருப்பான், ஏதோ நம்ம அப்பாவுக்காக அப்படியே விட்டுட்டான்.

அவன் வைரஸை ஆன்டி வைரஸால அழிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவனை அவன் வழியில போய் அழிக்க முடிவு பண்ணிணோம். வைரஸை, வைரஸ் வச்சு கொஞ்ச கொஞ்சமா அழிச்சு தள்ளினோம். இதை தாங்கிக்க முடியாத வைரஸ் ஆன்டனி நான் இல்லாத நேரம் பார்த்து பாம் வைரஸ் அனுப்பி உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான். இப்ப தனி ஆளா ப்ரொகிராம் பண்ணி அவனோட மோதிக்கிட்டு வாரன். இப்ப வைரஸ் ஆன்டனி என்னை தனியா சந்திக்க வைரஸ் மூலம் வர சொல்லி இருக்கான்.......
------------------------

ரகுவரன்: என்ன வைரசாமி, உன் புள்ள நான் அனுப்பின வைரஸ் அட்டாக்குக்கு பயந்திட்டானா??
விஜயகுமார்: அவன் வைரஸை ஸேஃவ்டி இல்லாம ஓப்பன் பண்ணி பாத்ததில்ல.
ரகுவரன்: அப்புறம் என்ன, உன் புள்ளைய காணோம்?
விஜயகுமார்: இதோ..இப்ப வந்துடுவான். நம்ம வைரஸை அழிச்சுட்டு இருக்கானோ என்னமோ!
(ரஜினி ஃfபாஸ்டா நட்ந்து வருகிறார்)

ரகுவரன்: வாப்பா, வைரஷா!
ரஜினி: ஏய், ஏய், "அட்டாக் வைரஷா!"
ரகுவரன்: ஆ..ஆ..அதான், எப்படி இருக்காய்..?? அட்டாக் வைரஷா!!
ரஜினி: டேய்..டேய்..டேய்..நான் இங்க கொஞ்சி குலாவுரத்துக்கு வரல்ல. என்ன எதுக்கு வர சொன்னாய் அத சொல்லு?
ரகுவரன்: நீ பண்ற அட்டாக் வைரஸால நம்ம வைரஸுக்கு ரொம்ப தொல்லை என்னு பசங்க சொன்னங்க. நமக்குள்ள அடிச்சுக்க வேணாம், நீ ஒரு ஏரியாவ எடுத்துக்க, நான் ஒரு ஏரியாவ எடுத்துக்கிறன். நம்ம ஏரியாக்குள்ள உன் வைரஸ் வரமா பாத்துகணும். என்ன சொல்றா..???
ரஜினி: டேய்..டேய்..டேய்..நான் இந்த தொழிலுக்கு வந்ததே உன்னையும், உன் வைரஸுகளையும் அழிக்கதாண்டா!! அழிச்சுடறன்..அழிச்சுடறன்..எண்ணி ஏழு நாலுல உன் வைரஸ் எல்லாத்தையும் அழிச்சுடறன்..
ரகுவரன்: ஹா..ஹா..ஹா..தம்பி வைரஷா, இந்த தொழிலுக்கு நீ புதுசு, ஏழு நாலுல என் வைரஸ அழிக்கிறியா..எண்ணி ஏழு செக்கண்ட்ல உன் ப்ரொகிராம நான் முடிக்கிறன். புரியல்ல, கொஞ்சம் அங்க பாரு. (புதுசாக ஒரு வைரஸை காட்டுகிறார்)
ரஜினி: ஹ..ஹ..ஹா..(கூலிங் கிளாஸை கழட்டியபடி) கொஞ்சம் இங்க பாரு கண்ணா!! (அதுக்கும் ஒரு அட்டாக் வைரஸை காட்டுகிறார்)
------------------------
ரகுவரன்: (கொம்பியூட்டர், கீ-போர்ட்டை சுழற்றி அடித்த படி).. வைரசாமி, அன்னிக்கே உன் பையன் கொம்பியூட்டர்ல வைரஸ் அனுப்பி இருந்தா, இன்னிக்கு இந்த வைரஸ் ஆன்டனி முன்னால ஒருத்தன் அட்டாக் வைரஸ் காட்டியிருக்க மாட்டான்..பாசம் தடுத்திடிச்சு இல்ல..அதுவே இப்ப நமக்கு பாச கயிறா வந்து நிக்குது..அழிச்சிடுறன் பாக்கிறியா??
விஜயகுமார்: சார்..சார்..சார்..இந்த ஒரு தடவ சார்.. நான் அவன்கிட்ட பேசி பார்கிறன்..
ரகுவரன்: சரி போ!! ஆனா..இது தான் உனக்கு கடைசி தடவ....!
------------------------
(ரஜினி கொம்பியூட்டரில் ஏதோ செய்து கொண்டு இருக்கிறார்)

ஜனகராஜ்: வைரஷா ஃபாய்..வைரஸ் ஆன்டனி ஹொட்மெயில்க்கு வைரஸ் அனுப்பிட்டு இருக்கான்.
ரஜினி: அனுப்பட்டும்..!
ஜனகராஜ்: வைரஷா ஃபாய்.. ஆன்டனி ஃகூகுல்க்கு வைரஸ் அனுப்பிட்டு இருக்கான்.
ரஜினி: அனுப்பட்டும்..!
ஜனகராஜ்: வைரஷா.. ஆன்டனி முத்தமிழுக்கு வைரஸ் அனுப்ப பிளான் பண்ணிட்டு இருக்கான்.
ரஜினி: பண்ணட்டும்..!
ஜனகராஜ்: நம்ம யாகூக்கு வைரஸ் வைக்கிறான்.
ரஜினி: வைக்கட்டும்..
(ஜனகராஜ் ஒண்ணும் புரியாமல் தலை ஆட்டியபடியே செல்கிறார்)
------------------------

(ஃபோன் ரிங்கிங்)
ரகுவரன்: யப்பா..வைரஷா..ஏழு நாலுல என்கதைய முடிக்கிறியா..உன் ஈ-மெயில் எல்லாத்தையும் பாரு..எல்லாத்துக்கும் மொத்தமா வைரஸ் அனுப்பிட்டன்..
ரஜினி: ஹா..ஹா..ஹா..ஆமா நீ பேப்பர் பாக்கிற பழக்கமில்ல..கொஞ்சம் பேப்பர் பாரு கண்ணா..
(செய்தி: வைரஸ் அனுப்பிய 'வைரஸ் ஆன்டனி' ஐ/பி அட்ரெஸ் மூலம் பிடிபட்டார் )
ரகுவரன்: வைரஷா!!!!!!!!!!!!!!!!!!!!!! (கத்துகிறார்)
ரஜினி: ஹேய்..ஹேய்..ஹேய்..அப்பவே சொன்னன் இல்ல..வைரஸ் கிரியேட் பண்ணறவனுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான், ஆனா ஐ/பி அட்ரெஸை காட்டி குடுத்திடுவான். அட்டாக் வைரஸ் கிரியேட் பண்ணறவனுக்கு ஆண்டவன் கஷ்டம் குடுப்பான் ஆனா கைவிட மாட்டான். பாத்தியா உன்ன காட்டி குடுத்திட்டான்....
ஹா..ஹா..ஹா..வர்ர்ட்டா கண்ணா..ஓகே..ஓகே...குட் ஃபாய்..குட் ஃபாய் (எக்கோவிங்)
------------------------
(ரகுவரன் ஜெயிலிருந்து தப்பி வருகிறார்.. ரஜினியின் கொம்பியூட்டர்கள் அனைத்தையும் கைபற்றுகிறார்)

(ரஜினி ஓடி வருகிறார்..கீ-போர்ட், மெளஸ் அனைத்தும் தொங்குவதை காண்கிறார்..துடிக்கிறார்)

ரகுவரன்: யப்பா..வைரஷா..நீ இங்க எப்படியும் வருவேன்னு தெரியும்...அதான் எல்லா கொம்பியூட்டரையும் சுத்தி ஃபாம் வச்சிருக்கன்..இது ஒன்னும் நீ அட்டாக் பண்ண வைரஸ் ஃபாம் இல்ல..ஃபாம்ம்ம்..ரியல் ஃபாம்.. ஓப்பன் பண்ணினா எல்ல கொம்பியூட்டரும் பீஸ் பீஸாகிடும். போ..போ!!! முடிஞ்சா போய் காப்பாத்திக்கோ..போ!! ஹி..ஹி..ஹி...(பல் தெரிய சிரிக்கிறார்)

ரஜினி: ஆண்டவன் குறிச்சிட்டான்டா உனக்கு டேட்டு..இண்டைக்கு வைக்கிறண்டா உனக்கு வேட்டுடுடுடு!!

Tuesday, February 14, 2006

நிலா ரசிகன் கவிதைகள்



முத்தமிழ் கூகிள் குழுமத்தின் பெட்டகத்தில் இருக்கும் நவரத்தினங்கள் பல.அப்படிப்பட்ட ரத்தினத்தில் ஒருவன் தான் எங்கள் நிலா ரசிகன்.நிலவனை நாங்கள் அன்போடு "தேவதை ரசிகன்" என அழைப்போம்.நிலா தேவதை என்றால் அதை ரசிக்கும் எங்கள் நிலவனும் தேவதை ரசிகன் தானே?

இதோ முத்தமிழின் "நிலாரசிகன் கவிதைகள்" இழையில் எங்கள் தேவதை நிலவன் எழுதிய தேன் சிந்தும் கவிதைகள் சிலவற்றை இடுகிறோம்.நிலவன் கவிதைகளை படித்த பிறகு காதல் தேவதையே தன் மீது பெருமிதம் கொண்டாளாம்.காதலும் தமிழும் துள்ளி விளையாடும் எங்கள் தேவதை நிலவனின் கவிதைகள் இதோ உங்களுக்காக

மயிலிறகு மனசுக்காரன்...


வாழ்த்து அட்டைகள்,
பூங்கொத்துகள்,
இடைவிடாத தொலைபேசி
அழைப்புகள்...
இப்படி,
என் பிறந்தநாளுக்கான
வாழ்த்து மழையில்
நான் நனைந்து நின்ற
பொழுதில்
வெறுங்கையுடன் வந்து
நின்றாய் நீ.

பார்வையால் என்
கேள்வியுணர்ந்து
மயிலிறகு ஒன்றை
பரிசளித்துவிட்டு
கண்களால் வாழ்த்திவிட்டு
போகும் உன்னை
காதலனாய் பெற
என்ன தவம் செய்தேன்
நான்?

மனிதப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே?

நாய்க்குட்டியிடம்
நீ கொஞ்சுவது
கண்டப்பின் மனித
பிறப்பே எனக்கு
பிடிக்கவில்லை போ!

மகாலஷ்மியின் தந்தை

கடவுள் நம்பிக்கை
இல்லை என்கிறார்
உன் அப்பா...
மஹாலட்சுமி
உன்னை வீட்டில்
வைத்துக் கொண்டு!!!

0
சுடிதாரில் நீ
பெண்.
தாவணியிலும் நீ
பெண்.
நம் திருமணத்தன்று
அணியும் சேலையில்
நீ என் உயிர்வளர்க்கும்
தேவதை.

Monday, February 13, 2006

தத்துவம்


அடுத்தமுறை யாராவது வதந்தியைப் பரப்ப முயன்றால், இதை நினைத்துப் பார்க்கவும்:

தத்துவஞானி சாக்ரட்டீஸைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்

ஒரு நாள் சாக்ரட்டீஸின் நண்பர் மிக ஆர்வத்துடன் அவரிடம் ஓடிவந்து, "நண்பரே, உங்களுடைய சீடன் ஒருவன் என்ன செய்தானென்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

"கொஞ்சம் பொறுங்க, நீங்க சீடனுடைய விசயத்தெ சொல்றதுக்கு முன்னாடி, உங்களுக்கு நான் ஒரு சின்ன தேர்வு வைக்கிறேன். அந்தத் தேர்வின் பெயர் மும்முறை வடிக்கட்டி தேர்வு" என்று சாக்ரட்டீஸ் சொன்னார்.

"மும்முறை வடிக்கட்டி"

"ஆமாம", என்று சொன்ன சாக்ரட்டீஸ், "நீங்கள் எனது சீடனைப் பற்றி சொல்வதற்கு முன்னால் ஒரு நிமிசம் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை சுருக்கமாக வடிக்கட்டவும்.

முதல் வடிக்கட்டி உண்மை.

"நீங்கள் சொல்லப்போகும் விசயம் நிச்சயமாக உண்மையான விசயமா?" என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

"இல்லை, உண்மையெ சொல்லப்போனா நா இப்பத்தான் அந்த விசயத்தைக் கேள்விப்பட்டேன்." ஆனா.

"சரி, அப்ப அது உண்மையா இல்லையான்னு உங்களுக்கு நிச்சயமா தெரியாது."

இப்ப நாம இரண்டாவது வடிக்கட்டியெ எடுக்கலாம்.

இரண்டாவது வடிக்கட்டி: நல்ல விசயம்.

"என்னுடைய சீடனைப் பற்றி நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயமா?"

"இல்லை," ஆனா அது வந்து...

"அப்ப, நீங்க என்னுடைய சீடனைப் பத்தி மோசமா ஏதோ சொல்லப் போறீங்க, ஆனா அது உண்மையா, இல்லையான்னுக்கூட உங்களுக்குத் தெரியாது அப்படித்தானே?"

நண்பர் சங்கடமாக தோளைக் குலுக்கிக்கொண்டு, ஒரு மாதிரி நெளிந்தார்.

"இப்பவும் நீங்க இந்த சோதனையில் வெற்றிப்பெறலாம்.ஏன்னா மூணவது வடிக்கட்டி இருக்கு.

மூன்றாவது வடிக்கட்டி : பயன்

"நீங்க என்னுடைய சீடனைபபத்தி சொல்லப் போற விசயம் எனக்குப் பயன்படக் கூடியதா?

நண்பர் சங்கடத்துடன் "உண்மையா சொல்லனும்னா இல்லை"

சரி, நீங்க சொல்லப் போற விசயம் உண்மையோ, நல்ல விசயமோ அல்லது எனக்குப் பயனளிக்கக் கூடியதோ கிடையாது. பின்னெ எதுக்கு அதெ எங்கிட்டெ சொல்ல நினைக்கிறீங்க.

அந்த நண்பர் தனது தோல்வியை தலைக்குனிவுடன் ஒப்புக்கொண்டார்.

இதனால் தான் சாக்ரட்டீஸ் ஒரு மிகப் பெரிய தத்துவஞானியாகவும் உலகம் போற்றுபவராகவும் திகழ்ந்தார்.

குறிப்பு:
தன் மனைவிக்கும் புளுட்டோவுக்கும் (சாக்ரட்டீஸின் சீடன்) உள்ள உறவை சாக்ரட்டீஸ் அறியாததற்கு காரணமும் இதுதான்.

தொடரும்

Sunday, February 12, 2006

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!

முனைவர் இர.வாசுதேவன்

காதலர் தினம்:
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து வந்த பெண்களை ஆண்டுக்கு ஆண்டு அதே குலுக்கல் முறையில் மாற்றிக் கொள்ளவும் செய்தனர். அக்கொடுமை கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் நடந்து வந்த காதல் கொடுமைக்குத் துணை நின்ற உரோமானிய அரசு, காதலுக்கும் காதல் வாழ்வுக்கும் தடை விதித்தது.
தடுக்கப் பட்ட தடைவிதிக்கப் பட்ட காதலர்க்குத் துணைபுரிந்த பிஷ்ப் வேலன்டைன், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கொலையும் செய்யப் பட்டார்.

உரோமானிய நாட்டின் காதல் கொடுமை முடிவுக்கு வந்தபின்னர், 'காதலர்க்கு துணைபுரிந்த 'வேலன்டைன்' நினைவைப் போற்றும் தினமாகக் "காதலர் தினம்" கொண்டாடப் படுகிறது. இதுவே, காதலர் தினக் கொண்டாட்டத்தின் சுருக்கமான வரலாறு.

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா:

பண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா முற்றிலும் மாறுபட்டது! உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழா! அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது! காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

சோழன் செம்பியன்:
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன்! என்று, புறநானூற்றுப் புலவர் (49) மாற்றோக்கத்து
நப்பசலையார் கூறுகிறார்.

பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன், அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான்! என்று, சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும், போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன், தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை, காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான். 1.

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், அவன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக்கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன்! என்று, குறிப்பிடுகின்றார். 2.

இந்திரவிழா:

தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக், காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் (3.) குறிப்படுவர். அவ்விழாவை, விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால், அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று, பொருள் கொள்ளலாம். மேலும்,காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனித் திங்கள் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) விழவு நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித்திங்கள் சித்திரை நாளில் விழாவற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர்! என்பதை, அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம்.

பின்பனிக் காலம்:

மகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில் அமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம், பின்பனிக் காலம். அக்காலத்தை, ஆதித்த மண்டலம் மிதுன வீதியில் இயங்கும் காலமே பின்பனிக் காலம் என்று, கூறினர். அத்தகைய பின்பனிக் காலமே, காதல் திருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர்.

பின்பனிக் காலச் சிறப்பு:

குணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு திரையாக அளிக்கும் பொருள்களாகிய அகில், சந்தனம், வாசனைப்பொருள், கருப்பூரம் முதலியபொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும் வில்விழாவைக் காண வந்த பின்பனிக் காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்? என்று, இளங்கோ வினவுகின்றது, நயமான இலக்கிய விருந்தாகும். 4.

வில்விழா:

காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், அவ் வில்விழா என்றும் வழங்கப் பட்டுள்ளது. 5.
கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும், காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது, புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது! என்று, ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள். 6.
சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது! என்று, ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை.
விழா ஏற்பாடுகள்:
காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை, பட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.
காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள்! ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்! விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள்! உரையாற்றும் வல்லமை கொண்டோ ரெல்லாம் உரையாற்றுங்கள்! சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்! கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்! வாதத்தை வாதத்தால் வாதிட்டு, வாதத்தைத் தீர்த்து வையுங்கள்! பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள்! அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள்! வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! என்று, செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான். 7. என்றால், பண்டைய தமிழகம் நடத்திய காதல் திருவிழா எவ்வளவு சிறப்புக்கு உரியதாக இருந்துள்ளது என்பது விளங்கும்.
காதலர் தங்குமிடம்:
விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, "மூதூர்ப் பொழில்" என்று, பெயரிடப்பட்டிருந்தது! அவ்விடத்திற்கு, "இளவந்திகை" என்னும், சிறப்புப் பெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 8.,9.
காமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தோட் செம்பியனுக்குத் திறை செலுத்த காமதேவனே வருகின்றான்! என்று, விழாவைச் சிறப்பித்துக் கூறும் புலவர், காமதேவன், வேனிலொடும் தென்றலொடும் சேர்ந்து திறை கொண்டு வந்தான்! என்கிறார். காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும் பூங்கா அழகுமிக்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது! அந்த மலர்ச் சோலையில் இளவேனில் காலங்களில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய மலர்களை மலர்விக்கும் மரங்களையும் மலர்க் கொடிகளையும் பயிரிட்டிருந்தனர்.
காதற் கடவுளாகிய மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில் என்பதால், காதல் விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப் பட்டது!
காமன் கோட்டம்:
மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்தன. இத்தெய்வத்திற்கு, இரசகிரியத்தில் விழவு நடந்தப் பட்டதை பெருங்கதை உரைக்கிறது.
காதலன் வரவுக்காகக் காத்திருந்த பதுமாபதி, உதயணனைக் கண்டு மகிழ்ந்த பின்னர் தன் காதற்தலவனைக் கண்ட மகிழ்ச்சியில் வேதியர்க்கும் மற்றவக்கும் அவர்கள் வேண்டிய பொருளைத் தானமாக வழங்கினாள்! என்பதயும் அறியலாம். 10.
இளவேனில்:
காதல் தலைவியர், தங்கள் காதல் தலைவனைக் காதலித்து விரும்பியது போலவே இளவேனிலும் அவர்களைக் காதலால் விரும்புகின்றது! எவ்வாறென்றால், காதலரைக் கூடிக் களித்து மகிழும் மகளிர், தங்கள் காதல் தலைவனை அணைத்த கை, நெகிழ்ந்து விடாமல் பின்னிக் கிடக்கச் செய்வதே இளவேனில் தான்! என்பர். தம்மை விரும்பும் நல்லவராகிய காதல் தலைவர்க்கு தாம் நல்லவர் ஆனது போல, காதல் திருவிழாவின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் காதலர்க்கும் இளவேனில் நல்லையே! என்று, கூறும் அழகே! அழகு! .11..,12.
தமிழர் விரும்பும் விழா:
இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழாஎன்றும், வேனில்விழா என்றும் கொண்டாடப் பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப் பட்டது மதுரைப்பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது 13.
காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி, அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது! என்று, அறியப் படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.
பண்டைக்காலத்தில் தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும்! என்று இந்திரனை வேண்டினான், சோழன்! அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான்! அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது! அச்செய்தியை, மணிமேகலை விழாவறை காதை விளங்குகிறது. அவ் விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், "மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, 'ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்' உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், "இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்" என வரைவு காண்கின்றார். 14.
காதல் தேவனை வணங்கும் பெண்கள்:
வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும்! என, விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, "காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்! என்று, வேண்டுகின்றனர்.
'காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதி ரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும்! காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக், காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன்! அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய வேண்டும்! என்று, காமனை இன்று மட்டுமல்ல என்றும் இரப்பேன்' என்று, ஒருத்தி உரைக்கக் காணலாம். 15.
காம தேவன் விழாவில் பூம்புனல் விளையாட்டு:
காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து புனலாடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோது, வினையாற்ற வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம். தோழியிடம் தலைவி கீழ்க் கண்டவாறு உரைக்கின்றாள்.
'ஒளிரும் இழையினை உடைய தோழி!, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக்கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ?' என்று, காதலன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பது புலனாகிறது. 16.
நம் காதல் இளைஞர்கள், பூம்புனலில் நீராடும் போது இல்லக் கிழத்தியுடன் மட்டுமல்லாது காதல் கிழத்தியுடன் சேர்ந்து புனலாடிக் கொண்டிருந்தனர். காதல் திருவிழா காதலர்க்குப் பெருவிழா என்பது புலப்படும்.
கடற்கோள்:
இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது! என்னும் செய்தி காதல் கொண்ட தமிழின உள்ளங்களைக் கண்ணீரில் ஆழ்த்துகின்றது. காதல் வாழ்க! காதல் வாழ்க! என்று, உலகம் வியக்க விழாக்கோலங்கொண்டு உவகையில் மூழ்கித் திளைத்திருந்த பூம்புகார் பெருநகர் கடலுக்கு இரையாகக் காதலே காரணமாயிற்றே! எனக் கதற தோன்றுகிறது.
கரிகால் வளவனின் மகன் சோழன் நெடுமுடிக் கிள்ளி:
கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்! தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடாத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான். 17.
தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப் பட்டதால்கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது! என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணி மேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார். 18.
நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக, சோழமண்டலத்தின், ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை!
பழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒருவரான பேராசிரியர் k.உலகநாதன், தமிழ் மொழியின் தொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழகம், "உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று! என்று, உறுதியாகக் கூறலாம். உரோமாபுரியினரால் தொடங்கப் பட்டு நடத்தப் படுவதாகக் கூறப்படுகின்ற 'காதலர் தினம்' (VALENTINES DAY) உம், தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்! காரணம், உரோமானியர்கள், காமதேவனுக்குத் திருவிழா நடத்திய சோழர்களின் காலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப்பாளர்களாக, போர் வீரர்களாக அமர்த்தப் பட்டுள்ளனர். அஃதோடல்லாமல், உரோமானிய வணிகர்கள் தமிழகத்தின் பொருள்களை வாங்கிச் செல்ல மரக்கலங்களில் வந்து சென்றனர்! என்பது, காமதேவனுக்காக எடுக்கப்படும் விழாவைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்! அதனால், அவர்களிடத்திலும் அப்பழக்கம் தோன்றியிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், காதல் திருவிழா நடத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருந்திருப்பது தமிழகமே! என்றுரைப்பதற்கு, எவ்வித ஐயமுமில்லை.

கட்டுரையில் மேற்கோள்களாகக் காட்டப் பட்டுள்ள குறிப்புகள்:
1. (மணிமேகலை. 1: 1 - 9).
2. (சிலம்பு.1:6:1-6)
3. (மணிமேகலை. 1: 65-72.)
4. (சிலம்பு. 2:14: 106 - 112.)
5. (குறுந்தொகை. 31.), (திணைமாலை. 62.)
6. "மள்ளர் குழீஇய விழவி னானும், மகளிர் தழீஇய துணங்கை யானும், யாண்டும் காணேன், மாண்மதக் கோனை" (குறுந்தொகை - 31.)
7. (மணிமேகலை. 1.1.64 - 73)
8. "பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தங்கு" (சிலம்பு. 214:82.)
9. "கலையி லாளன் காமர் வேனிலொடு மலைய மாருத மன்னவற் கிறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின்எழிற்புறம் போகி" (சிலம்பு. 1:19:28 - 31.)
10. (பெருங்கதை. 3: 178 - 81.)
11. "காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது, தாது அவிழ் வேனிலோ வந்தன்று"
(கலித்தொகை. 33.)
12. "புணர்ந்தவர் முழக்கம் போல் புரிவுற்ற கொடியோடும் நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம்போல்" (கலித்தொகை. 32.)
13. "கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்"
(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 - 111.)
. 14. (தொல்காப்பியம். அகத்திணை. 5.உரை.)
15. 'பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன் கணை இரப்பேன், கால் புல்லிக் கொண்டு'
(கலி த்தொகை.147) 16. "மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்து, அவர், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ -
"வலன் ஆகவினை!" என்று வணங்கி நாம் விடுத்தக்கால், ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்"என்று உரைத்ததை?
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" நன்று உரைத்ததை?"
(கலித்தொகை. 35)
17. (மணிமேகலை. 29: 10 - 13.)
18. (மணிமேகலை. 29: 33: 36.)

மிட்டாதார்

முத்தமிழ் இணைய குழுவில் திரு காசிகணேசன் ரங்கநாதன் எழுதியது

அழிந்து போன பெயிண்ட்டாக இருந்தாலும், இன்னும் தெருப்பெயரைத் தெளிவாகப் படிக்க முடிந்தது. எங்கள் வீட்டுச் சாமான்களைச் சுமந்தபடி, ஒற்றை மாடு பூட்டிய வில் வண்டி அந்தத் தெருவுக்குள் நுழைந்தது. அது எங்கள் ஊரின் கடைசியில் இருந்த தெரு. அந்தத் தெருவின் அனைத்து வீடுகளின் பின்புறமும் நீளமாக ஒரே நேர்க்கோடாக ஓனி என்று மக்களால் அழைக்கப்பட்ட சாக்கடை ஓடை ஓடியது. சாக்கடையைத் தாண்டினால் புன்செய் நிலங்கள். வருடத்தின் சில மாதங்கள் விவசாயம் செய்யப்பட்டு சோலைகளாகவும், எஞ்சிய மாதங்களில் பலமாகக் காற்று வீசும் பொட்டல் வெளிகளாகவும் இருந்தன.

நாங்கள் முதலில் மேட்டுத் தெருவில்தான் குடியிருந்தோம். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் அவசரத் தேவைக்காக வீட்டைக் காலி செய்யச் சொன்னதால், அந்தத் தெருவில் வீடு எதுவும் காலியாக இல்லாததால், இந்தத் தெருவுக்கு வரவேண்டியதாயிற்று. வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. ஒவ்வொரு சாமானாக எடுத்துக் கொண்டுபோய் உள்ளே வைத்தோம். அன்று மாலைவரை ஒவ்வொரு சாமானாக அனைவரும் தேடித் தேடி எடுத்து அதனதன் இடத்தில் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மாலையில் ஒரு வழியாக வீடு ஒழுங்கானதும் கயிறு, வாளியோடு பொடக்காலியில் போய், கிணற்றிலிருந்து நீர் இறைத்து, கை கால் முகம் கழுவி, தலைக்கு எண்ணெய் தடவி, விசிலடித்தபடி கண்ணாடி பார்த்துத் தலைசீவிப் பௌடர் அடித்து ஷோக்காக வெளியே கிளம்பினேன். வீட்டை விட்டு வெளியே வந்த போது பக்கத்து வீட்டு அன்வர் எதிர்ப்பட்டான். அன்வர் என் பள்ளித்தோழன். அவனுக்கு நாங்கள் வரப்போவது தெரியாது.

"டேய் ரவி பக்கத்து ஊட்டுக்கு நீங்கதான் வந்திருக்கிறீங்களா?.."

"ஆமாண்டா ஒனக்குத் தெரியாதா?"

"யாரோ வரப்போறாங்கன்னு முனவர் ச்சிச்சா சொன்னாரு ஆனால் நீதான் வரப்போறன்னு தெரியாது."

வீட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு போனான்.

"அம்மி கோன் ஆயா ஹை ரத்தி தேக்.." அம்மா யார் வந்திருக்காங்கன்னு பாரு.

"ரவி வாப்பா. நல்லா கீறயா? பக்கத்து ஊட்ல நீங்கதான் வொந்தி க்கீறதா? இரு கண்ணு டீ சாப்ட்டு போவியான்."

"அன்வர் பைட்னக்கொ போல்ரே அபி ஆத்தியௌன்." அன்வன் அவனை உட்காரச் சொல்லு. இதோ வரேன்.

இருவரும் தோள்மேல் கை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அது நீளமான தெரு. இரண்டு கிளைச் சந்துகளோடு சுமார் ஐநூறு குடும்பங்கள் வசித்து வந்தன. முழுக்க முழுக்க உருது பேசும் முஸ்லீம் இனத்தவர் மட்டுமே வசிக்கும் தெரு.

"அன்வர், எங்கம்மா தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க."

"அப்படியா, நிறைய காய்கறி வாங்கணுன்னா சந்தைப் பக்கமாப் போலாம். வெறுந் தக்காளிதானே? இங்க பக்கத்துல மிட்டாதார் கடையிலயே வாங்கிக்கலாம்."

"மிட்டாதார் கடையா?"

"ஆமாண்டா. மிட்டாதார் கடைதான்."

ஏற்கெனவே மிட்டாதார் தெரு என்ற பெயரினால் எனக்கு உண்டான குழப்பமே இன்னும் தீரவில்லை. முதலில் மிட்டாய்க்காரத் தெருவோ? என்று நினைத்தேன். ஆனால் தெளிவாக எழுதியிருந்தது. மிட்டாதார் கடை என்று கேள்விப்பட்டதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அந்தக் கடை ஒரு வீட்டின் இடிபாட்டின் முன்புறம் அமைந்திருந்தது. இடிந்து போன செங்கல் மற்றும் காரையின் மீது மெத்தி, இரண்டு மூன்று பலகைக் கல் பாவி, அதன் மீது மூன்று நான்கு சாக்குப் பைகள் போட்டு, தண்ணீர் தெளித்து ஈரமாக்கி, அதன் மேல் சிறிதும் பெரிதுமாக நான்கைந்து கூறுகள் தக்காளியும், அதே போன்று நான்கைந்து கூறுகள் கத்தரிக்காயும் வைக்கப் பட்டிருந்தது. அருகே ஒரு கல்லின் மேல் கிழவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அன்வர் சொன்னான்.

"இந்தக் கூறு நாலணா. இது எட்டணா. எது வேணும்?"

நான் ஒரு நாலணா நாணயத்தை அவனிடம் நீட்ட, அவன்,

"நானா, நாலணா அலியௌ."

அவர் கையில் நாலணாவைத் திணிக்க, அதை வாங்கிச் சாக்குக்கு அடியில் போட்டுக் கொண்ட அவர் சட்டை போடாமல் லுங்கி மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். வாயில் சின்ன மன்னான் பீடி புகைந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாக இருப்பார் போலத் தோன்றியது. மூக்கு கொஞ்சம் நீண்டு வளைந்திருந்தது. நான் விரும்பிப் படிக்கும் லயன் காமிக்ஸின் லக்கி லூக் நகைச்சுவைக் கதைகளில் வரும் கிழவரை ஒத்திருந்தார். எங்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நாங்கள் இருவரும் ஒரு கூறு தக்காளியை ஒரு கைக்கு மூன்று நான்காக எங்கள் இரு கைகளிலும் அள்ளிக் கொண்டு கிளம்பினோம். என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"டேய் அன்வர், இதுதான் மிட்டாதார் கடையா?..."

"ஆமா.." அவன் வாய் பப்பர மிட்டாயைச் சப்பிக் கொண்டிருந்தது.

எதிர்த்த வீட்டின் நீண்ட திண்ணையில் அமர்ந்து கொண்டோம். என்னிடம் கேள்விகள் நிறைய இருந்தன.

"அப்ப, கடையில இருந்த அந்த தாத்தா யாரு?.."

"அவருதான் மிட்டாதார்."

"அப்ப அவரு பேரயா இந்த தெருவுக்கு வெச்சிருக்காங்க?..."

"ஆமா ரவி. இவரு சாதாரண ஆளு இல்லை. ஒருகாலத்துல பெரிய மிட்டாதாரா இருந்தவரு."

"மிட்டாதார்ன்னா?"

"மிட்டாதார்ன்னா.. பெரிய பணக்காரரு. இந்த ஜமீந்தார் எல்லாம் இருக்காங்கல்ல, அந்த மாதிரி. அந்த காலத்துல இந்தத் தெருலயே அவரு வீடுதான் பெரிய வீடு. அவர் வீட்ல மூட்டை மூட்டையா வெள்ளிக் காசு வெச்சிருந்தாருன்னு சொல்லுவாங்க. அதுக்கப்புறம் ஏளையாயிட்டாரு." தக்காளியோடு மௌனமாக வீடு நோக்கி நகர்ந்தோம்.

அன்றிரவு "அங்கன்" என்று உருதுவில் அழைக்கப்படும் வீட்டின் பின்புறம் இருந்த வெட்டவெளியில் மல்லாந்து படுத்தபடி சாவகாசமாக வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பத்துபேர் ஓடிப்பிடித்து விளையாட வசதியான நல்ல நீள அகலமுடைய அங்கன் அது. கெட்டியாகக் கரைக்கப்பட்ட சாணியிட்டு மெழுகப்பட்டிருந்த அந்த மண் தரை காரை பூசிய தளம் போல உறுதியாக இருந்தது. பக்கத்து வீட்டு தாஹிரா பானு என் அருகே வந்து அமர்ந்தாள்.

"ரவி மேல பாத்தியா?.."

"ஆங்.. நெறய நட்சத்திரம் இருக்கு."

"அந்த நட்சத்திரம்லாம் எப்படி வந்துச்சு தெரியுமா?.."

"எப்படி வந்துச்சு?.."

"பெரிய பெரிய பணக்காரங்கல்லாம் செத்துப் போய்ட்ட பின்னாடி அல்லா கிட்ட போவாங்கல்ல.."

"ஆமாம்."

"அப்ப அவங்கள்ல பெரிய பணக்காரங்கள எல்லாம் அல்லா நட்சத்திரமா ஆக்கிருவாராம்.."


"அப்புடியா?.."

"ஆமாம். அதோ அந்த நட்சத்திரம் எல்லாத்தையும் விட பெரிசா இருக்குல்ல."

"ஆமாம்."

"அதுதான் ரொம்பப் பணக்காரரா இருந்தவரு. அத வுட கொஞ்சம் சின்னதா ஒரு நட்சத்திரம் இருக்குல்ல."

"ஆமாம்."

"அவரு கொஞ்சம் கம்மி பணக்காரரு."

என் மனதுக்குள் கேள்வி எழுந்தது.

'மிட்டாதார் நட்சத்திரமாவாரா?...'

சில நாட்களில் தேன்கனிக்கோட்டை உரூஸ் சந்தனக்கூடு விழா வந்தது. பெரியவர்கள் தாரை தப்பட்டை முழங்க புலி வேஷம் கட்டி ஆடினார்கள். சிலம்பம், பந்தம் சுற்றுதல், சுருள் கத்தி சுற்றுதல் என உற்சாகமாகக் கண்டு களிக்கும்படி இருந்தது. சூ·பிகள் தப்படித்துப் பாடிவந்தார்கள். பெரியவர்களின் பெரிய சந்தனக் கூடு யானையில் செல்ல, அதனைப் பின்தொடர்ந்து இளையவர்களின் சிறிய சந்தனக் கூடு குதிரையில் வந்தது. அந்த ஒரு வாரமும் நான் அன்வரிடம் சத்தமாக விசிலடிக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் ராஜேஸ்வரி கொட்டாயில் முன்பக்கத்துத் தரை டிக்கட்டில் மண்ணை கும்பாரமாகக் குவித்து அமர்ந்துகொண்டு சினிமாப் படத்தின் நடுவே விசிலடிக்க பின்பக்கத்து கூடைச்சேர் டிக்கெட்டிலிருந்து நான்கைந்துபேர் கத்தினார்கள்.

"டேய் யார்ரா அவன் பிகிலடிக்கறது?.."

பயந்து மூச்சுக்காட்டாமல் ஒளிந்துகொண்டாலும் மனதுக்குள் பெருமையாக இருந்தது.



அன்று தெருவே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் வீட்டுப் பக்கம் வந்த அப்சரைப் பார்த்துக் கேட்டேன்.

"க்யா ரே?..."

"ரவி நம்ம மிட்டாதார் மகன் இருந்தாரில்லே?.."

"ஆமா."

"அவருக்கு ஆகஸ்லண்ட் ஆயி சத்திபோய்ட்டாராம்?!"

அவர் வாழும் சந்தின் முனை வரை சென்று பார்த்தேன். அவருடைய நீண்ட கதறல் ஒலி கேட்டது. இதுவரை அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. அது இதுநாள் வரை அவர் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளின் பீறிடலாக இருந்தது.

"அல்லா, என்னைக் கொன்னிருக்கக் கூடாதா?..."

வரலாற்றுப் பாடத்தில் படித்த முகலாய மன்னருடைய நினைவு வந்தது. சாகக்கிடந்த தன் மகனைக் காப்பாற்ற உண்ணாமல் உறங்காமல் மூன்று நாள் தொடர்ந்து தொழுது தன் மகனை காப்பாற்றி தான் உயிர்விட்ட முதிய மன்னனின் கதை.

பிறகு, மீண்டும் மேட்டுத்தெருவுக்கே குடிபெயர்ந்துவிட்டோம். நான் மேல் படிப்புக்காகப் பட்டணம் நோக்கிப் போய்விட விடுமுறைகளில் மட்டுமே ஊருக்கு வருவது வழக்கமாகிப் போனது.


ஒருநாள் கல்லூரித் தேர்வுகள் முடிந்து நன்றாக மழை பெய்து ஓய்ந்த ஒரு இரவில் பேரூந்தை விட்டு இறங்கினேன்.

"ரவி வாடா நல்லாக்குறயா?" அன்வர் வெகு உற்சாகமாக வரவேற்றான்.
சைக்கிளின் பின் கேரியரில் கட்டிவைத்த ஆட்டுத் தோலுடன் நின்றிருந்தான்.

"என்னடா அன்வர் தோல் வியாபாரமா?"

"அட நீ வேறபா, சந்தைக்கு போயிருந்தனா, மாமா இத தலைல கட்டிட்டாரு. அவரு ஊட்ல கொண்டுபோய் கொடுக்கணும். நான் ஒரு மளிகைக் கடை வச்சிருக்கன்."

பள்ளி நண்பர்கள், நெருங்கிய பலர் மற்றும் மலரும் நினைவுகள் அனைத்தையும் நிதானமாகத் துவைத்துக் காயப் போட்டபின் கடைசியாகக் கேட்டேன்.

"மிட்டாதார் எப்படியிருக்கார்?.."

"உனுக்கு தெரியாதா? அட.. நீதான் ஊருலயே இருக்கறதில்லையே. அவரு இறந்துபோய் ரொம்பநாள் ஆச்சிபா. சரி நான் வரம்பா. ரொம்ப நேரம் ஆயிடுச்சி. நெறய வேல இருக்குது."

ஈரமான சாலையில் நடந்து, மக்களோடு கலக்கப் பிடிக்காமல் இடதுபுற கொடித்தடத்தில் தனியாக நடந்தேன். நடந்தபடியே மேலே பார்த்தபோது மழை விட்ட வானத்தில் அடையாக அப்பியிருந்த கருப்பு இருட்டு வானத்தில் தோன்றியிருந்த ஏராளமான நட்சத்திரத் துளைகளின் வழியே வானம் என்னை வெறித்துக் கொண்டிருந்தது. என்னுள் வெகு தன்னியல்பாய் மீண்டும் அந்த கேள்வி எழும்பியது.

"மிட்டாதார் நட்சத்திரமாயிருப்பாரா?..."


(தொகுப்பு: வானவில் கூட்டம்)
காசிகணேசன் ரங்கநாதன்.

தேவதை ரசிகன்

வணக்கம் முத்தமிழ் உள்ளங்களே., காதல் ஒரு மென்மையான உணர்வு. காதல்" என்று சொன்னாலே சிலருக்கு திக்கும், சிலருக்கு தித்திக்கும். ...சரி சரி விசயத்துக்கு வருவோமா?

காதல் என்று சொன்னால் உங்களுக்கு என்ன்ன என்னவோ எல்லாம் நினைவு வரும் அதை விடுங்கள். ஆனால் 'தேவதை" என்று சொன்னால் உங்களுக்கு எல்லாம் யார் நினைவில் வருவாங்க?... ஐ!!. சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே...நம் வளர்பிறை நிலவே அது!...

எங்கள் நட்புத்தோழன்...அவன் நட்பை போலவே அவன் எழுத்துக்களுக்கும் காதலுக்கும் அத்தனை தோழமை. மென்மைக்காதலின் மேன்மை புரிந்தவன். அறிந்தவன். எல்லோர் மனங்களிலும் கவிதையால் கவிதையாகியவன். காதலர் மாதத்தில் எங்கள் தேவதை நாயகனை.....!!!.... இதோ!!..இதோ!!!

கலக்கப்போவது யாரு? !!! நிலைக்கப்போவது யாரு? தேவதை நாயகன் யாரு"..? காதல் மன்னன் யாரு? இவர்க்கு தானே கொடுக்க வேண்டும் காதல் மன்னன் பட்டம்'....!!.... விஷேச விருந்தாய் 'தேவதை நாயகனோடு" காதலர் தினத்தை வரவேற்போம்'...


1.நிலா ரசிகன் என்ற பெயர் காரணம்?

நிலவின் மெளனம் எனக்கு பிடிக்கும். நிலவைப் போல மெளனமான அழகுடையவள் என் தேவதை. அதனால் நிலாரசிகன்.


2.காதலை பற்றி நீங்கள் எழுதியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை?

அவள் பெயர்.

(இப்படி சொன்னா அடி விழும்...சரி..சரி..இதோ எ.பி.க) .

"உன் பிரிவைக் கூட என்னால் தாங்கியிருக்க முடியும்
அழாமல் நீ பிரிந்திருந்தால்"

3.காதல் பற்றி மற்றவர் எழுதிய உங்களுக்கு பிடித்த கவிதை? எதைக்கேட்டாலும் தருகிறேன்
என் உயிரைத் தவிர
அதை உன்னோடு
வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் -தபூ சங்கர்.

தண்டவாளத்தில் தலைசாய்த்து
பூத்திருக்கும் ஒற்றைப் பூவாய் நான்.
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா? -பழனிபாரதி

4.காதல் தோற்பது எப்போது?

எதிர்ப்பார்புகள் நிறைவேறாத போது. எதிர்பார்ப்பு இல்லையெனில் காதலில் என்றும் தோல்வி இல்லை.

5.எந்த மாதிரி காதல் பிடிக்காது?

நாய்க்காதல்(மன்னிக்கவும்) விளக்கம்:- கண்களால் பேசுவதை விடுத்து கைகளால் பொது இடங்களில் பேசுகின்ற காதலில்லாத காதலர்களை.

6.மனைவியை காதலிப்பது போரா,அற்புதமா?

பேரானந்தம். மனைவி என்பவள் தாலிகட்டிய காதலி.

7.நிச்சயிக்கபட்ட திருமணம் குறித்து..?

நிச்சயிக்க பட்ட பின் திருமணத்திற்கு முன் இரு மனங்களும் காதலித்தல் வேண்டும். புரிதலே வாழ்க்கை என்று உணர்தல் வேண்டும்.

8 காவிய காதலர்களில் உங்களை கவர்ந்தவர்கள்?

சாஜகான்,மும்தாஜ். (திருமணத்திற்கு பின்னர் பல குழந்தைகள் பிறந்த பின்பும் காதலாகி வாழ்ந்த காரணத்தினால்)

9.சினிமாவில் பிடித்த காதல் ஜோடி?

கமல்-ஸ்ரீதேவி/ விஜய்-ஜோதிகா

10. பிடித்த காதல் பாட்டு?/.பிடித்த காதல் படம்?

படம்:- நிறைய படமுண்டு,குறிப்பாக மூன்றாம் பிறை, காதல்,அலைபாயுதே.

11.அடிக்கடி முணுமுணுக்கும் காதல் பாட்டு?

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது... காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே....என் நெஞ்சில்..

12 ஒற்றைவரியில் சொல்லுங்கள் 'காதலை"ப்பற்றி

காதல்- வாழும்போதே சொர்க்கம் இனி!!!..காதலால் வளரும், பின்னப்படும் இந்த இழை... இது தொடக்கம்!!!....

கேள்வி கேட்டவர் : விஜி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4