மனைவி அமைவதெல்லாம்
மனைவி அமைவதெல்லாம்
எழுதியவர்-லாவண்யா
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - நன்றி கண்ணதாசன்
மனைவி மட்டும் அல்ல கணவன் அமைவது, வேலைக்காரி அமைவது, சொந்தங்கள் அமைவது எல்லாமே இறைவன் கொடுக்கும் வரம் என்பதை விட அந்த உறவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம், அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் நாம் அவர்களுக்கு தந்த அனுபவத்தின் பின் விளைவே அன்றி கடவுள் தரும் வரம் அல்ல. ஒரு பந்தை சுவற்றில் அடித்தால் அது நம்மிடம் திரும்பி வருவது போல தான் எந்த ஒரு உறவும், நட்பும். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் இதை தான் காட்டுகின்றன. ஆனால் இந்த கட்டுரையில் நான் அளவளாவ வந்த விசயம் ஒரு திரைப்பட பாடலின் தாக்கம்.
"ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ தாலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா" என்று வரும் "பார்த்திபன் கனவு" பட பாடலின் திரையாக்கப்பட்ட ஒரு சில காட்சிகளே இந்த கட்டுரைக்கு கரு. அருமையான ஆலாபனையோடு தொடங்கும் கர்னாடக இசை பாடல் ஒன்றை கதாநாயகி பாட அலுவல் முடிந்து வரும் நாயகன் அதை ரசிக்காமல் என்ன இப்படி கர்னாடக பாடல் எதை எடுத்தாலும் இழுத்து இழுத்து என்று கூற அவனை மகிழ்விக்க அவள் பாடும் பாடல். அப்பாடலின் ஒரு வரி முடிவதற்கும் அந்த நாயகி கணவனுக்கு செய்யும் சேவைகள் பின் வருமாறு. அவன் உடை மாற்றியவுடன் பழைய ஆடையை துவைக்கும் போடபட வேண்டிய அழுக்கு துணிகள் சேர்க்கும் கூடையில் போடுவாள். அப்படியே அலமாரியில் இருந்து முகம் கழுவும் கணவனுக்கு முகம் துடைக்க துண்டு ஒன்றை எடுத்து தருவாள். அவன் முகம் கழுவி வாழும் அறைக்கு வந்து அமர்ந்ததும் கையில் படிக்க ஒரு தினப்பத்திரிக்கையை எடுக்க, அவள் அவனுடைய மூக்குக்கண்ணாடியை நீட்டுவாள். அப்புறம் காபி கோப்பையை ஏந்தி வந்து அவனுக்கு கொடுப்பாள். இது அந்த இயக்குனர் எண்ணப்படி இல்லத்தரசிக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களா இல்லை இல்லத்தரசி என்பவள் கணவனின் மனம் புரிந்து நடந்து கொள்ளவே பிறந்து வளர்ந்தவள் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதியா? பெண் என்பவள் அழகு பதுமையாக இருக்க வேண்டும். அன்பே உருவானவளாக இருக்க வேண்டும். பொறுமையின் பிறப்பிடமாக இருக்க வேண்டும். அறிவுடையவளாக இருக்க வேண்டும் ஆனால் மலைக்கு பின்னால் ஒளிந்து ஒளிரும் நிலவினை போல கணவனுக்கு பின்னால் இருந்து சில சமயம் அறிவினை வெளிப்படுத்த வேண்டும் பல சமயம் அறிவில்லாதவளாக கண்டும் காணாதவளாக இருக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்பு தான் நடைமுறையில் இருக்கின்றது.
தன் உள்ளம் புரிந்தவளாக தன் மனைவியை எதிர்பார்க்கும் அனைவரும் ஒரு நொடி தன் நடவடிக்கைகள் பற்றி சிந்திந்தால் மனைவியாக அமைந்தவள் இறைவன் கொடுத்த வரமாக இருப்பாள். திருமணம் ஆன முதல் நாளே தன்னை பற்றிய முழு அறிவையும் மனைவியிடம் யாரும் ஏற்றி விட முடியாது. சிறுக சிறுக அவள் உள்ளத்தில் தன் எல்லா எண்ணத்தையும் ஏற்றலாம். தன் வீடு மக்கள் விட்டு உங்கள் வீடு வரும் அவள் மனம் உங்கள் குடும்ப சுழலுக்கு தன்னை தானே தயார் செய்து கொள்ளும் வரை பொறுமை தேவை. அவள் முக்கியமானவளாக கருதப்படுவதை அவளுக்கு வெளிப்படையாக உணர்த்துங்கள் பின்பு அவள் உங்கள் மனம் புரிந்தவளாக நடப்பாள்.
அதே போல் பெண்களும் திருமணம் ஆன அடுத்த நாளே கணவன் தன் கட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும். அவன் அன்னை, அக்காவை விட அதிக முக்கியத்துவம் தனக்கு உடனே வேண்டும் என்ற எண்ணம் கூடாது. அன்பால் வெல்ல வேண்டும். காயப்பட்டால் தனிமையில் பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். அதிக சத்தத்தால் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. மனம் புரிந்து அவனை எங்கும் விட்டுத் தராமல் மிக தன்மையாக நடந்தால், அன்பாக தினமும் நாலு வார்த்தை பேசினால், நல்ல சமையல் செய்து தந்தால், எந்த கணவன் தான் மயங்க மாட்டான். மீண்டும் உறுதியாக சொல்வேன் சொந்தங்கள் அமைவது எல்லாமே இறைவன் கொடுக்கும் வரம் என்பதை விட அந்த உறவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம், அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் நாம் அவர்களுக்கு தந்த அனுபவத்தின் பின் விளைவே அன்றி கடவுள் தரும் வரம் அல்ல