Thursday, January 04, 2007

அகமே புறம் - பகுதி 5

அகமே புறம் - 5

அதிகாரம் - 3

பழக்கத்தை உண்டாக்கல் - 1


நிலைத்த மனோநிலைமை ஒவ்வொன்றும் மனிதனால் ஈட்டப்பட்ட பழக்கம்; அது திரும்பத் திரும்பத் தொடர்ந்து நினைக்கப்பட்டதால் பழக்கமாகியிருக்கிறது. தளர்ச்சியும்,உற்சாகமும், வெகுளியும், பொறுமையும், இவறன்மையும் ஈகையும், உண்மையில் மனத்தின் சகல தன்மைகளும் மனிதனால் தெரிந்து கொள்ளப்பட்ட நினைப்புக்கள்; அவை தாமாக நிகழும் வரை திரும்பத் திரும்ப நினைக்கப்பட்டுப் பழக்கங்களாகி யிருக்கின்றன. அடிக்கடி நினைக்கப்பட்ட ஒரு நினைப்பு, கடைசியில் மனத்தின் ஒரு ஸ்திரமான பழக்கமாகின்றது. அத்தகைய பழக்கங்களிலிருந்து வாழ்க்கை வருகின்றது...

தனது அநுபவங்களைத் திரும்பத் திரும்ப கொள்ளுதலால் அறிவை அடையும் இயற்கையுள்ளது மனம். முதலில் கிரகிப்பதற்கும் சிந்திப்பதற்கும் அதிகப் பிரயாசமாகத் தோன்றும் ஒரு நினைப்பு அடிக்கடி மனத்திற் கொள்ளப்படுதலால் பழக்கமும் இயற்கையும் ஆகின்றது.

ஒரு சிறுவன் ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங்காலத்தில் தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது. ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை மிகச்சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல, முதலில் அடைவதற்கு முடியாததாகத் தோற்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற ஒரு நிலைமை ஆகின்றது.
தனது பழக்கங்களையும் நிலைமைகளையும் ஆக்கற்கும் திருத்தற்கும்
மனத்திற்கு வலிமையுண்டு. இவ்வலிமை மனிதனது முத்திக்குக் காரணமாக இருப்பதுந்தவிர, தன்னை ஆளுதலால் அடையப்படும் பூரண சுதந்திரத்தையடையும் வழியைக் காட்டுகிறது. ஏனெனின், ஒரு மனிதன் தீய பழக்கங்களை உண்டு பண்ணிக்கொள்ளும் சக்தியை உடையவனாயிருப்பதுபோல, நல்ல பழக்கங்களை உண்டுபண்ணிக்கொள்ளும் சக்தியையும் உடையவனாயிருக்கிறான்.

இப்பொழுது நான் சொல்லும் விஷயத்தைச் சிறிது விளக்கிக் கூற வேண்டுவது அவசியம். இதனைப் படிப்பவரும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்...

மனம் விரியும்....





நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
Mind Engineering - K.Raveendran

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4