சமூக சமத்துவம்
சமூக ஏற்றத்தாழ்வுகள் தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களிலிருந்து விலக்கி வைத்திருந்த கால கட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தின. 1939-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். ""எதிர்பாராமல் நடந்து விட்டது. கனவிலும் காண முடியாதது. கண்ணெதிரே கைகூடி விட்டது. இதுவரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத ஹரிஜனங்களும் மற்ற ஜாதியாரும் மதுரை மீனாட்சியம்மனை சென்ற சனிக்கிழமையன்று தரிசனம் செய்யும் பேறு பெற்றார்கள். சட்டமில்லை; பலவந்தமில்லை; குழப்பமில்லை. இவ்வளவுக்கும் பதிலாக, அன்பையும் விவேகத்தையும் ஆயுதங்களாகக் கொண்டு மகத்தான புரட்சி நடந்து விட்டது'' என்று அந்தக் கோயில் நுழைவுப் போராட்டம் குறித்து "மீனாட்சி அம்மன் தரிசனம்' என்ற தலைப்பில் 10-7-1939-ல் "தினமணி' தலையங்கம் தீட்டியது. இதுபோல சமூக சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தி வந்துள்ளன.
தற்போது கோயில் நுழைவுப் போராட்டத்துக்கான தேவைகள் பொதுவாக இல்லையென்ற போதிலும், கண்டதேவி போன்ற இடங்களில் கோயில் தேர் இழுக்கும் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் கூட தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு கோயிலில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்படுவதற்கு என்ன பாடுபட்டார் என்பதைப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக அறிய முடியும்.
பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்பதற்காக 1970-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதிமன்ற ஆணை காரணமாக உடனடியாக நிறைவேறவில்லை. இந்து திருக்கோயில்களில் அனைத்து வகுப்பினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு உள்ள தடைகளை அகற்றி, நோக்கத்தை எய்துவதற்கான வழிகளைப் பரிந்துரைக்க எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நீதிபதி மகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகளும் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் திருக்கோயில் அர்ச்சகர்களாக வருவதற்கு வழி வகை செய்யும் வகையில் வேத ஆகம சாஸ்திர கல்லூரி அமைக்கப்படும் என்று 1991-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற முயற்சிகள் நடந்த போதிலும், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவது என்பது நடைமுறையில் எட்டாத நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்நிலையில், உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசாணை வெளியிட தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இந்த சமூக சீர்திருத்த நடவடிக்கைக்குத் தமிழக அரசு உடனடியாகச் செயல் வடிவம் கொடுக்க முனைந்துள்ளது. 2002-ம் ஆண்டு
எழுதியவர் புலவர் இரவா கபிலன்