Friday, April 28, 2006

விபத்து

அன்பு நண்பர்களே இன்று ஒரு மிக சோகமான சம்பவத்தை சொல்ல போகிறேன்.

நாம் பல விபத்துகளை கேள்விப்படுகிறோம். கோரசம்பவங்களை பார்க்கிறோம். ஒரு
நிமிடம் அதற்காக கவலைப்பட்டுவிட்டு, பிறகு அதை மறந்து விடுகிறோம்.

போன வெள்ளிக் கிழமை அதிகாலையில் ஒரு தொலைபேசி செய்தி, மங்காப் சிக்னலில்
ஒரு பெரிய விபத்து என்றும் அதில் நண்பர் ஒருவரின் காருக்கு அடிப்பட்டது
என்றும். அந்த நண்பர் ரவிச்சந்திரன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரது இரு
குழந்தைகளும் மிகவும் புத்திசாலிகள். பெரிய பெண் வர்ஸிணி செஸ் சாம்பியன்,
எட்டாவது வகுப்பு படிக்கிறாள், சிறியவன் பிரவிண், ஆறாம் வகுப்பில்.
ஒரு செஸ் போட்டியில் கலந்துகொள்ள சால்மியாவிலிருந்து மங்காப் போகும்போது
சிவப்பு விளக்கு வருவதற்குள் கடந்து விடலாம் என்று கைப்பேசியில்
பேசிக்கொண்டே கொஞ்சம் வேகமாக வண்டியை எடுக்கையில் நேர் எதிரில் பச்சை
விளக்கு வந்துவிடும் என்ற எதிர் பார்ப்பில் வேகமாகவந்த பேருந்து காரின்
பக்கவாட்டில் மோதி....கார் அப்படியே அப்பளமாக நொருங்கி. பின்னால் வந்து
கொண்டிருந்த நண்பர்கள் உடனடயாக அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு
சென்றிருக்கிறார்கள். அங்கு சில மணி நேரங்களில் சிறுவன் பிரவிண்
சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டான். தந்தை ரவிசந்திரனுக்கு லேசான
அடி. வர்ஸிணி தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில்.
தன் குழந்தையை தானே கொன்றுவிட்டோமே என்று ரவியின் கதறலையும், பையன்
வீட்டில் குறும்பு செய்வானே என்று அப்பாவுடன் கட்டாயப்படுத்தி
அனுப்பிவிட்டோமே என்ற தாயின் கதறலையும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

எப்படியோ நடந்தது நடந்துவிட்டது இனி ஆகவேண்டியதை பார்க்கலாம் என்று
சிறுவனின் உடலை இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்டு (இந்த நேரத்திலும்
சிறுவனின் கண்ணை தானமாக கொடுத்த பெற்றோர்) இந்தியாவிற்கு விமானத்தில்
தந்தை எடுத்து சென்றார். சிறுமி வர்ஸிணி மிக மெதுவாக தேறிவந்தாள்.
சிறுவனின் சடங்குகளுக்காக தந்தை சென்னையில். நேற்று என் மகள் செளமியா
வர்ஸினியை பார்க்க (இருவரும் ஒரே பள்ளியில்) மருத்துவமனைக்கு
சென்றிருக்கிறாள். தீவிர கண்காணிப்பில் இருந்த அக்குழந்தையை
பார்த்துவிட்டு ஒரே கதறலுடன் வந்துவிட்டாள்.

இன்று வெள்ளிக்கிழமை அதே அதிகாலை, மீண்டும் நண்பரிடமிருந்து தொலைபேசி....
வர்ஸிணியும் நம்மை விட்டு பிரிந்துவிட்டாள்...ஆம் அவள் உயிரையும் இறைவன்
கொண்டு சென்றுவிட்டான்.

நடனபயிற்சிக்காக சென்ற செளமியாவிற்கும் விஷயம் தெரிந்து அங்கேயே
செயலிழந்து உட்கார்ந்துவிட்டாள். அவளையும் கூட்டிக்கொண்டு
மருத்துவமனைக்கு சென்று வர்ஸினியின் முகம் பார்க்கும்பொழுது........

தனியாக இருக்கும் அந்த தாயின் கதறல்.... பார்க்க போன நண்பர்களின் சோகமும்
அழுகையும், என் மகள் செளமியாவிற்கு ஆறுதல் சொல்லா முடியாமல் என்
மனைவியின் அழுகை.... யாரும் யாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று
புரியாமல்..ஒவ்வொருவரும்...

அந்த பெற்றோரின் நிலைமையை நினைத்தால் ........ கொடுமையிலும் கொடுமை.
இந்த நேரத்திலும் அந்த தந்தை தன் மகளின் கண்ணை தானமாக கொடுக்க சம்மதித்தது.....

விபத்துக்கள் நேரிடும். ஆனால் நம் அஜாக்கிரதை எப்படிப்பட்ட கொடுமையை
ஏற்படுத்தியுள்ளது பாருங்கள். வண்டி ஓட்டும்போது ஜாக்கிரதையாக ஓட்டுவது
மட்டுமல்லாது செல்பேசியில் பேசுவதை தவிர்த்தால் எவ்வளவோ விபத்துக்கள்
தவிர்க்கப்படும். அந்த குழந்தைகள் செய்த பாவம் தான் என்ன?
--
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/

Tuesday, April 25, 2006

கண்ணன் கள்வன் - கண்ணன் (ஆலோ)

கண்ணன் கள்வன் - திருவாய்மொழி 9.9.7

மேலை நாட்டில் வாழும் நம்மில் பலருக்கு குளிர் பழகிப் போய்விட்டது.
குத்தும் பனியிலிருந்து கொடூரப் பனி வரை எல்லாம் நண்பர்களே! ஆனால்,
இந்தியாவில் அப்படியல்ல. தாரை உருக்கி, உடலை உருக்கி முடிந்தால்
கல்லையும் உருக்கும் வெயில். இப்போது பனிக்காலங்கள் வந்து போவது கூடத்
தெரிவதில்லை அங்கு. நண்பர் நா.விச்வநாதன் எழுதுவார், "இந்தமுறை குளிர்
அதிகம், சட்டை போடும் படி ஆகிவிட்டது!" என்று :-) நாம் இங்கு ஐம்பது
கிலோ உடை என்ற கவசத்துடன் அலைவது அவருக்குத் தெரியாது :-)) ஆனால், மாதம்
மும்மாரி பொழிந்த காலத்தில் வாடையும் இருந்தது அம்மாநிலத்தே! வாடை
என்றால் எப்படிப் பட்ட வாடை, "அம்பைக் காய்ச்சி அழுத்த உடலினில் எறிவது"
போன்ற வாடை. இந்த வாடைக் காலத்தில் எரியூட்டி அமர்ந்து மகிழும் போது
காதலனும் உடனிருந்தால் கதகதப்பிற்கு கூடுதல் ருசி! ஆனால் காதலன்
இல்லாதபோது?

வாரா ராயினும் வரினும் நமக்கு
யாரா கியரோ தோழி! நீர
நீலப் மைம்போது உளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளையாட்டி

நுண்முன் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என்னாயினள்கொல் என்னா தோரே? (குறுந்தொகை 110)

நம் பண்டைப் பழமையின் சித்திரமே போல் அமைவன இப்பாடல்களே. அன்றைய
இலக்கியம் இல்லையேல் நம் சரித்திரமே இல்லை என்பது கண்கூடு. தண்ணென்று
இருக்க வேண்டிய வாடை "எரிகிறது"! இந்த எரிச்சல் குறுகிய பொழுதாகவாவது
அமைகிறதோ, அது "நெடு நல் வாடையாக" அமைந்து விடுகிறது.

வருகின்ற எறிவாடை தனியாக வரக்கூடாதோ? சீற்உற்ற அகிற்புகை, அதனுடன் வரும்
இனிய வாடை, யாழ் நரம்பில் வரும் பஞ்சமம் பண்ணிசை, தண்ணென்ற பசுஞ்சாந்து
நறுமணம், மல்லிகையின் கொல்லும் மணம் இவையெல்லாம் கூட்டணி அமைத்துக்
கொண்டு வருகின்றனவாம். எப்படி இருக்கும் நம் பாராங்குச நாயகிக்கு? அவளோ
அடிபட்டு போயிருக்கிறாள்!

தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோனுடன்

என்று சொல்லிவிட்டு, வார்த்தை தவறி விட்டான். மேனி கொதிக்குத்தடீ,
தலைசுற்றி வேதனை செய்யுதடீ! கடுமையுடையதடீ! தோழி! மார்பு துடிக்குதடீ!

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு, தும்பியடி நானுக்கு
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானெளியே! பாராங்குச நாயகியே!


என்று சொல்லிவிட்டு,


சொன்னமொழிதவறு மன்னவனுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்? அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ!

என்று அன்னைமார், தோழிமார் எல்லோரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்கும் எம்
பாராங்குச நாயகிக்கு எறிவாடைதான் ஒன்று குறைச்சல்!

ஆருக்கு சொல்லுவேன் அன்னை மீர்காள்!
ஆர்உயிர் அளவு அன்றுஇக் கூர்தண் வாடை
கார்ஒக்கும் மேனிநம் கண்ணன் கள்வம்
கவர்ந்தஅத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே
சீர்உற்ற அகிற்புகை யாழ்நரம்பு
பஞ்சமம் தண்பழுஞ் சாந்துஅ ணைந்து
போர்உற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ

(திருவாய்மொழி 9.9.7)

கார் ஒக்கும் கண்ணன் கள்வன்! கார்கால மேகம் போன்று கருணை பொழிகின்ற
கண்ணன். வானம் பார்த்த பூமிக்கு கண்ணடித்து பதில் சொல்லும் கார்கால மேகம்
போன்ற கண்ணன். நிறத்தினிலே கருமை கொண்டான்;-அவன் நேயமுறக் களிப்பது
பொன்னிறப் பெண்கள்! பாராங்குச நாயகியோ மறக்குலப் பெண்*

சோர மிழைத் திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டு வதெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லை யென்று சொல்லி விடடீ!

அவளிடம் வம்பு வைத்துக் கொள்ளலாமோ இக்கள்வன் கண்ணன்? அதுவும் "கண்ணன்
கள்வம் கவர்ந்த அத்தனி நெஞ்சம்" எனவேதான் கேட்கிறாள்:

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமுண்டோ ?

ஆற்றங்கரை தனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ வென்றே
சொல்லி வருவையடி தங்கமே, தங்கம்!!

காலம் கடந்த பொருள் இறைமை என்பதற்கு அழகிய சாட்சிகள் நம் நம்மாழ்வாரும்,
பாரதியும். நம்மாழ்வாரின் மனோநிலையை வார்த்தைக்கு வார்த்தை படம்
பிடிக்கிறான் எம் கவிக் குயில் பாரதி. நீவீர் வாழ்க.

*நம்மாழ்வார் பாண்டிய நாட்டு (வழுதி வள நாடு) குலத்தோன்றல்.
சித்தார்த்தன் போல் 'அச்சுவை' பெரிது என்று 'இச்சுவை' விட்டவர்

Sunday, April 23, 2006

செயற்கை கருப்பை - ஒரு வரம்

செயற்கை கருப்பை - ஒரு வரம்

தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.


இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.


இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."

இதற்கான சுட்டி : http://www.newscientist.com/article.ns?id=dn2014
இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.

மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?
வணக்கங்களுடன்,சிவா..
http://srishiv.blogspot.com

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4