அகமே புறம் - பகுதி 6
அகமே புறம் - 6
அதிகாரம் - 3
பழக்கத்தை உண்டாக்கல் - 2
சரியான் காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் எளிதென்றும், புண்ணியத்தைச் செய்தலினும் பாவத்தைச் செய்தல் எளிதென்றும், சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. அந்நிலைமை அநேகமாக எல்லோராலும் நித்தியத்தன்மை யுடைய தெனக் கொள்ளத்தக்க தாகி விட்டது.
ஆசிரிய சிரேஷ்டரான புத்தரும் "தீய வினைகளையும் நமக்குத் துன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் எளிது; நல்ல வினைகளையும் நமக்கு இன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் அரிது..." என்று கூறியுள்ளார்.
இது மனித சமூகம் சம்பந்தப்பட்ட மட்டில் உண்மையானாலும் மனிதர் அபிவிருத்தியடையும் மார்க்கத்தில் கண்டு கழிக்கும் ஒரு அநுபவமேயன்றிப் பொருட்களின் ஸ்திரமான நிலைமையன்று, நித்தியத் தன்மை யுடைய தன்று; சரியான காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் மனிதர்களுக்குச் சுலபமாகத் தோற்றுவதற்குக் காரணம் அவர்களிடத்துலுள்ள மடமையும் அவர்கள் வாழ்வின் நோக்கத்தையும் பயனையும் அறியாமையுமே.
ஒரு குழந்தை எழுதுதற்குக் கற்றுக்கொள்ளுங் காலையில் எழுதுகோலைப் பிசகாகப் பிடித்தலும் அச்ஷரங்களைப் பிசகாக எழுதுதலும் அதற்கு மிகச் சுலபமாகவும்; எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும் அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அதற்கு மிகப் பிரயாசமாகவும் தோற்றுகின்றன; விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் ஒழிக்கக் கூடிய எழுதற்றொழிலின் அறியாமை அதனிடத் திருத்தலான்.
கடைசியாக அவ்வஞ்ஞானம் நீங்கிய பின்னர் எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும், அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அக்குழந்தைக்கு இயற்கையும் சுலபமுமாகிவிடுகின்றன. அக்காலத்தில் பிசகான காரியத்தைச் செய்தல் பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் அதற்குத் தோற்றுகிறது.
இவ்வுண்மை மனத்தின் காரியங்கட்கும் வாழ்க்கையின் காரியங்கட்குமசமமாகப் பொருந்தும். சரியான காரியத்தை நினனத்தற்கும்
செய்தற்கும் அதிக அப்பியாசமும் விடாமுயற்சியும் வேண்டும்; சரியான காரியத்தை நினைத்தலும் செய்தலும் இறுதியில் இயற்கையும் சுலபமுமாகின்றன; அப்பொழுது பிசகான காரியத்தைச் செய்தல்பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் தோற்றுகிறது.
ஒரு சிற்பி அப்பியாசத்தினால் தனது தொழிலில் தேர்ச்சியடைதல் போல, ஒரு மனிதன் அப்பியாசத்தினால் நல்வினையில் தேர்ச்சியடைதல் கூடும்; அது புதிய நினைப்புக்களால் புதிய பழக்கங்களை உண்டுபண்ணுதலே யன்றி வேறன்று; எவனுக்குச் சரியான நினைப்புக்களை நினைத்தலும் சரியான செயல்களைச் செய்தலும் சுலபமாகவும், பிசகான நினைப்புக்களை நினைத்தலும் பிசகான செயல்களைச் செய்தலும் பிரயாசமாகவும் தோற்றுகின்றனவோ, அவன் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒழுக்கத்தையும் ஒப்புயர்வற்ற தூய ஆன்ம ஞானத்தையும் அடைந்து விட்டான்.
மனம் விரியும்....
நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
Mind Engineering - K.Raveendran
The Art of Excellence - K.Raveendran