Wednesday, April 19, 2006

மல்லிகை கமழ்தென்றல்- நா. கண்ணன்

மல்லிகை கமழ்தென்றல் ஈரும் மாலோ!
வண்குறிஞ் சிஇசை தவரும் மாலோ!
செல்கதிர் மாலையும் மயக்கும் மாலோ!
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கும் மாலோ!
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறுஅரி ஏறுஎம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ!

(திருவாய்மொழி 9.9.1)

சடகோபன், மாறன், பாராங்குசன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இங்கு
தன்னைப் பாராங்குச நாயகியாக பாவித்து, கண்ணன் வாழும் கோகுலத்தில்
கண்ணனின் சிறுபிரிவையும் தாங்காத கோபியர் மனோநிலையை இங்கு தமிழ் அகமரபின்
வழியாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

இராமாவதாரத்தில் இராமனைப் பிரிந்து அயோத்தி 14 ஆண்டுகள் பட்ட பாட்டை
கோகுலத்தில் கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சியர் ஒரு மாலைப் பொழுதில்
பெறுகின்றனராம்!

"விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டுஊழி நிற்கஎம்மை
உளைவான் புகுந்துஇது வோர்கங்குல் யிரம் ஊழிகளே!" (திருவிருத்தம் 70)

ஐன்ஸ்டைன் திவ்யப்பிரபந்தம் படித்தாராவென்று தெரியவில்லை, ஆனால் தனது
சார்புடைமைத் தத்துவத்தை விளக்க, நம்மாழ்வார் போல் காதலியின்
காத்திருத்தலை உதாரணமாகச் சொல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் பொழுது
ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகிறது. அதே நேரத்தில் காதலியுடன் இருக்கும்
போது ஒரு யுகம் கூட ஒரு நொடி போல் கரைந்து விடுகிறது. இதோ, நளவெண்பா:

"ஊழி பலஓர் இரவு யிற்றோ என்னும்"

இந்த காதலர் மனோநிலையை சட்டம் போட்டுக் காட்டும் இன்னொரு காட்சி,
கம்பராமாயணத்திலிருந்து.....

விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும்
எரிநிறச் செக்கரும் இருளும் காட்டலால்
அரியவட்கு அனல்தரும் அந்தி மாலையாம்
கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான்

கம்பன் போடும் கம்பளம் (ஓவியப் படுதா) எப்போதுமே பிரம்மாண்டமாக
இருக்கும். மிதிலையில் சீதையின் நிலையைப் பாருங்கள். வழக்கம் போல்
சூரியன், தன்பாட்டுக்கு மாலையில் மறைகிறது. ஆயின் சீதைக்கு அது எப்படி
இருக்கிறது? "கருநிறச் செம்மயிர்க் காலன்" போல் தோன்றுகிறது!! அப்பாடா!
பிரிவுத் துயர் என்பது கொடுமையானது. தன் இன்னுயிராக இருக்கும் காதலன்,
காதலி பிரிவு என்பது மிகக் கொடுமையானது.

"சீதையுடன் இருக்கும்போது எந்தப் பொருள்கள் இனியனவாய் இருந்தனவோ, அந்தப்
பொருள்களே அவள் இல்லாமல் இருக்கும் போது துன்பம் பயப்பனவாய் இருக்கின்றன"
(கிஷ்கிந்தா காண்டம் 1:69)"

"மலர்களின் வாசனையுடன் கூடியதும் இளமையாக வீசுவதும், குளிர்ச்சியுடன்
கூடியதுமான இந்தக் காற்று, அந்தச் சீதையைப் பற்றி நினைத்துக்
கொண்டிருக்கையிலே எனக்கு நெருப்புக்குச் சமானமாய் இருக்கிறது (கிஷ் 1:52)

என்கிறான் இராமன். இதுவும் சார்புடைமைதான். நமக்குப் பிரியமானவர்கள்
இருக்கும் போது உலகமே பிரியமானதாக உள்ளது. அதுவே சோக மனோநிலையில்
வெறுக்கத் தக்கதாய் உள்ளன.

[வேறு:
கம்பன் நம்மாழ்வாரின் பரம பக்தன். நம்மாழ்வார் கையாளும் சொற்களை ஆசையுடன்
இவனும் கையாள்வான் (அவனது முதற்பாடலே அதற்கு சாட்சி). இங்கும் "செக்கர்
நன் மேகங்கள்" என்னும் நம்மாழ்வாரின் உபயோகத்தை "எரிநிறச் செக்கரும்
இருளும்" என்று பயில்கிறான்.]

இப்பொது பாராங்குச நாயகி விரிக்கும் கம்பளத்தைப் பார்ப்போம். இந்தியா
போன்ற சூடான நாட்டில் தென்றல் என்பது ஒரு சுகானுபவம். அந்தத் தென்றல்
வரும் வழியில் மல்லிகை மணத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தால்? ஆகா! என்ன
சுகம். இல்லையா? இல்லை! என்கிறாள். பாராங்குச நாயகி. இந்த பாழாப்போன
தென்றல் என்று திட்டுகிறாள்! இந்தத் தென்றலும், மல்லிகை மணமும் எப்படி
உள்ளதாம்? வாளினால் வெட்டினால் தரும் துன்பம் போல், அது மட்டுமல்ல அது
நஞ்சு தீட்டிய வாள் வேறு!! ஐயோ! ஏற்கனவே பிரிவுத்துயரில் பிரிந்து
போயிருக்கும் உயிரை இது இன்னும் கூறு, கூறாய் அறுக்கிறதே!

குறிஞ்சி இசை வருகிறது (கவனிக்க: இங்கு குறிஞ்சி இசை என்கிறார் மாறன்.
முல்லை இசை என்று சொல்லவில்லை. கண்ணனைக் குறிஞ்சித் தலைவன் என்று ஈடு
சொல்வதற்கு இதுதான் காரணம்). இசை எவ்வளவு இன்பம் தரக் கூடியது. ஐயோ, வண்
குறிஞ்சி இசை தவரும் என்கிறாளே பாராங்குச நாயகி! "புண்ணிற் புளிப்
பெய்தாற் போல்" (ஆண்டாள்) ஆகிவிட்டது நிலமை. காற்றும், மல்லிகையும்
கூட்டிய பிரிவை இசை மேலும் கூட்டுகிறது. இவையெல்லாம் தங்களுக்குள் இரகசிய
கூட்டணி அமைத்துக் கொண்டு இராப்படை ஏறுவாரைப் போல் இவளை தப்பித்து ஓடா
வண்ணம் துன்புறுத்துகின்றன. இந்த அவதியை, இம்சையை கவி நயத்தோடு ஒப்புமைப்
படுத்திக் காட்டும் ஈடு - துன்புறுத்துகின்ற பொருட்கள் எல்லாம், முன்பு
தனித்தனியே, இழி சொற்களைப் பேசி நலிந்த ஒற்றைக்கண்ணள், ஒற்றைக்காதள்
உள்ளிட்ட அரக்கிகள் பின்பு அவ்வளவில் நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல்
விழுந்து, அதற்கு மேலே நலிவுகளைச் செய்ய நினைத்தாற் போல - என்று அசோக
வனத்தில் சீதை பட்ட அவதியுடன் ஒப்புநோக்குகிறது.

செல் கதிர் மாலையின் மையலில் அவதியுற்ற அனுபவம் உண்டோ ? நான் இந்தியாவில்
இருந்த மட்டும் மாலைப் பொழுதை வெளியே களிக்கவே விருப்ப முற்றேன். அது
மறைந்து இரவு வருவதைக் கண்ணால் காண வேண்டும். அப்போதுதான் ஒரு நிம்மதி.
அது மயக்கும் மாலை. இரண்டும் கெட்டான் பொழுது. விவரிக்க முடியாத ஒரு
சோகம் கவ்வும் பொழுது. அதனால்தானோ "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா!" என்று பாடினான் இன்னாளைய கவிஞன்.

இந்தியாவின் மாலைகள் சிறப்பு வாய்ந்தன. மாலை நேரத்தின் செந்நிறத்தையும்
கருமையான நிறத்தையுமுடையவான மேகங்கள் கண்ணனின் நிறத்தை ஒத்து இருத்தலால்
அவையும் துன்பம் தருவனவாயின.

அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம்.

காதல் பற்றிச் பேசுவதால் கண்ணனின் தாமரைக் கண்னை முன்னால் சொல்கிறார்.
ஏன்? கண்கள்தானே காதலின் சாளரம்!

நண்ணரு நலத்தினான் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றைஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் (கம்பராமாயணம்)

கண்ணன் நம்மாழ்வாரைப் பார்த்த போது என்ன நடந்ததாம்? "கலக்கும் போது
மின்மினி பறக்கும்படி காணும் கலந்தது" என்கிறது ஈடு. இப்படி உவமைக்கு
மேல் உவமை வைத்துப் பேசும் வைணவ ஆசார்யர்களின் உரைகள் பால், கலந்து தேன்
கலந்து ஊனுடன் உயிர் கலத்தல் போல் இனிமைக்கு இனிமை செய்கின்றன. அவர்தம்
தமிழ், வட மொழிப் புலமை மெய் மறக்க வைக்கிறது.

இன்னும் வியாக்கானத்தைப் பாருங்கள்! கண்ணன் வந்த போது தழுவிய முலைகளும்,
தோள்களும் அவன் இல்லாத இம்மாலைப் பொழுதில் "பஞ்ச காலத்தில் குழந்தைகள்
சோறு, சோறு என்னுமாறு போல படுத்தாநின்றன" என்கிறது ஈடு :-))

இத்தனை அவதியும் எப்படி உண்டாயின?

இறைவனைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்க, அதற்கு அனுகூலமாக ஒரு
சங்கின் ஒலியோ, நாண் ஒலியோ, திருவடி, திருச்சிறகு ஒலி போன்ற நற்
சகுனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அனுகூலமாகக் கருதப்படும் பொருள்கள்
கூட துன்புறுத்தத் துவங்கின.

இந்த சுகமான சோகம் அனுபவித்தவர்களுக்கே புரியும்.

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4