இயந்திர வாழ்க்கை
அன்பர்கள்,
நான் கோவைக்கு சென்றிருந்த போது அரசின் பெரிய அதிகாரி ஒருவரின் மனைவி, "அமெரிக்காவில் உங்களூக்கு எல்லாம் இயந்திர வாழ்க்கைதானே" என்றார்.
அதுதான் ஒரு 24 மணி நேரம் நான் என்ன செய்கிறேன் என்று பதிவு செய்ய கருதியிருந்தேன். எமது எந்திர வாழ்க்கைதான்.
இனி நீங்கள் எல்லோரைக்கும் அதே குற்றம் சுமத்தினால்?
எந்திரம் இல்லை எமக்கு சுதந்திர வாழ்க்கை என்று யாரேனும் நிறுவ இயலுமா?
(மூன்னர் அவ்வப்போது இட்ட மடல்களின் தொகுப்பு)
----------------------------------------------------------------------------------------------------------------------------
காலை 7. 06. தேனிர் அருந்தியாச்சு.
மின்மடல் எல்லாம் பார்த்தாச்சு.
இனி புறப்பாடுதான்.
பேருந்து 8.16 மணிக்கு.
BVN மூர்த்தி் வாசிக்கிறேன்.
மணி காலை 7.09 ஓடிப்போ மடலே
-------------------------------------------------------
காலை மணி: 8.02
புறப்பாட்டு ஆச்சு:
'மயிர் வழிக்க இரும்பும் மழுங்கும்' என்றொரு புது மொழி உருவாச்சு.
அவல் சாப்பிட்டாச்சு. காலையில் சாப்பிடவிலையென்றால் முளை இல்லாதவர்கள் என்று ஆர்த்தி பாப்பா வலைதளத்தில் படித்தேன். அதனால் சாப்பிடதொடங்கிவிட்டேன்.
எசமானி எழுந்து மதிய உணவு அடுக்கியாச்சு. போட்டுகொடுத்த காபி குடிச்சாச்சு.
காரின் கண்ணாடிமேல் உள்ள உறைந்த நீரை வழி்க்க வேண்டும்.
பேருந்து நிறுத்தம் ஒரு 5 நிமிடம் தூரம்.
ஓடிப்போ மடலே:மணி காலை 8.06
---------------------------------------------------------
மணி: காலை 8.15: பேருந்து நிறுத்தம் அடைந்தேன். இருவர் நின்றிருந்தனர். சேதிதாள் படிக்கின்றவன் காலை வணக்கம் தெரிவித்தான்.
மணி:8.16: பேருந்து வழக்கம் தவறவில்லை. ஏறுகையில் 'வெற்று பேருந்தை ஓட்டி வந்துள்ளாயே' என்று ஓட்டுனியிடம் சொன்னேன். உண்மையே என்று சொல்லி நகைத்தாள். மூன்று பேர்தான் இருந்தனர். வழக்கமாக வரும் பாரதர் எவரும் இல்லை. புறாக்கூட்டிலிருந்து கிளம்பும் புறவுகள் போல் தம் கார்களிலிருந்து வந்து பேருந்தில் அடைந்தவரோடு மொத்தம் 12 பயணியர். ஆளுக்கு 1.1/2 வெள்ளி கொடுத்தால் ஓட்டும் ஆளுக்கும் ஓட்டுவிக்கும் "அவி"க்கும்மே சேர்ந்த வெள்ளி போதாது. சின்கை மாநகர பேருந்து கழகமே, நன்றி. பேருந்தில் இரவா அளித்து உதவிய PVN மூர்த்தியின் ராமாயண ரகசியம் என்ற நூலின் ஒரு படலம் வாசித்தேன்.'ராமன் தமிழனா' என்பது தலைப்பு. அப்படித்தான் தோனுகிறது
மணி: 8.44: எம் பேருந்து சின்கை பட்டணம் வந்தது . நெடுஞ்சாலையில் நெரிசல் குறைவே. என்னுடன் இறங்கியவன் தன் கைபையொடு ஒரு துவலைதுண்டு வைத்திருந்தான். என்ன நோக்கம் என்றேன். மதிய இடைவேளையின் போது மெல்லோட்டம் போகலாம் என்றுதான். குளித்தபின் ஈரம் உலர்த்தத்தான். இன்று நாள் 57 பாகைக்கு வெம்மை பெறும் என்றான்.
அலுவலகம் செல்ல "வான் நடைவழி" என்று ஒன்றின் வழியே செல்வேன். பல மாடிகட்டிடங்களை ஒரு கூண்டு வழியால் இணைத்திருப்பார்கள். குளிருக்கு ஆளாகாமல் பல அலுவலகங்களுக்கும் மக்கள் இதனூடே செல்வார்கள். வழியில் சில் கடைகளும் இருக்கும். Starbuck குளம்பிக்கு பேர் போனது. எனக்கு அவ்வழியாக செல்லும் நசை அந்த தூக்கலான மணம் நுகரவே .
மணி: 8.55: ப்ராக்டர் & கேம்பிள் தலைமை அலுவலகம் தொடுகிறேன். தாயின் மணிக்கொடி இன்றும் பறக்குது காணீர். தூக்கு தூக்கியில் 6 ஆம் மாடி அடைந்தேன். கணினியை மேசைஅறையிலிருந்து எடுத்து உசுப்பி விட்டேன்.
மணி 9.03: கணினி உயிர்பெற்றது. அவரவர் அவரவர் வேலை பார்க்கிறார்கள். அலுவலக மடல் ஒன்றும் இல்லை.
வழக்கமாக வலையில் நாள் செய்திகள் வாசிப்பேன். இன்று மட்டும் முத்தமிழுக்கு இந்த திருமடல். என் அண்டைய வளையில் உள்ள சிங்கை நாட்டு பாசில் எட்டிபார்த்து தமிழில் அச்சடிக்க கடினமானதா என்கிறான். எனக்கு அச்சு வராது. வருபவர்களுக்கு எளிது. உனக்கு எந்த இந்தியமொழி தெரியும் என்றேனா, இந்தி சற்று தெரியும் என்றான். இந்திபோல் அல்லாது தமிழல் 30 எழுத்துக்கள்தான். ஆனால் மூன்று லகரங்கள் உண்டு என்று அவனுக்கு ழகரம் எப்படி சொல்ல்வது என்று சொன்னேன்.
மணி காலை 9.38: வந்த வேலையை கவனிப்போம். போ மடலே.
----------------------------------------------------------------------
மணி:மதியம் 1.00. அப்பாடா ஏறத்தாழ நான்கு மணி நேரம் வாங்குகிற காசுக்கு வேலை செய்தாச்சு. காலையில் உண்ட அவல் இந்நேரம் வரைக்கும் தாங்கியது. கொண்டுவந்த உண்டியை காபிடீரியாவில் போய் சாப்பிடலாம். நமக்கு துணை இல்லை. பாசிலும் மற்றும் சிலரும் வெளியே உணவங்களுக்கு போய்விட்டர்கள். நான் தினம் 5 வெள்ளி மிச்சம் பிடிக்கிறேன். ஆண்டு முழுதும் மிச்சம் செய்தால் தாயகத்துக்கு ஒரு பயணத்துக்கு காசு மிஞ்சும்.
அம்மணி என்ன கொடுத்து அனுப்பினாக. நாலு ரொட்டிதுண்டும் ஒரு வாழை, ஒரு ஆப்பிள். ரொட்டிக்கு ஜாம். போர். சரி என்ன செய்ய? நேற்று வெளியூர் போனவங்க இரவோடு மீண்டுவந்து இந்த சேவையாவது செய்தாங்களே. ஆனா ரொட்டி மட்டும் தின்று பழகிட்டோம் என்றால் காசு எத்தனை மிஞ்சும். ஒரு ரொட்டி 1 வெள்ளிதானே. ஓரிரண்டு நிமிடம் வேலை செய்தால் அந்த காசு ஈட்டிவிடலாம்.
இருக்கும் இடத்திலேயே சாப்பிடலாம். பலரும் அப்படிதானே செய்கிறார்கள். இன்றைய செய்திகள் என்ன? அப்பாடா! இன்று எந்த அமெரிக்கரும் ஈராக்கில் சாகவில்லை. கடவுளுக்கு நன்றி. Rediff, The Hindu ஒன்றும் பெரிய சேதி இல்லை. யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் அதையும் தெரிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யுதாமே. Very Good!
மணி:மதியம் 1.35: போய்கோ மடலே.
--------------------------------------------------------------------------
மணி:மாலை 4.30.
இன்னும் ஒரு மூன்று மணி நேரம் வேலைபார்த்தயிற்று. வழக்கம்போல் இப்பொது புறப்பட்டால் 4.40 க்கு வரும் பேருந்து பிடிக்கலாம். இன்னிக்கு மட்டும் அடுத்த பேருந்து பிடிப்போமே. ஆப்பிரிக்காவிலிருந்து வந்த குஜ்ஜு உட்பட இங்கே பணிபுரியும் மற்றவர் எல்லோரும் இன்னமும் பணி முசுவாக உள்ளார்கள். இத்தாலி மொழியில் சத்தமாக தொலைபேசுபவனை காணவிலை. ஒவ்வொருத்தனும் ஒவ்வொருமொழி பேசி நம்ம ஊரை நினைவு படுத்துவானுக. இவர்களுடைய மேலாளருக்கு பெருமிதம்.'நம் குழு மிக்க வேற்றுதன்மைகொண்டவர்கள் நிறைந்தது' என்று. இன்றைக்கு புதிதாக இணந்த இந்த இளம்பெண் யாராக இருக்கும். அறிமுகம் ஆகாமலா போகும்!!
மணி:மாலை 4.40. பேருந்துக்கு ஓட்டம். போ மடலே.
----------------------------------------------------------------
மணி: மாலை: 4.45: நகர சதுக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நிற்கிறேன் விமான நிலையம் போலத்தான் இந்த பேருந்து நிறுத்தமும். கூட்டம் இருப்பதாக தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேருந்துக்கும் மக்கள் சாரிசாரியாக வந்துகொண்டே இருக்கிறார்கள். வேறு வேறு தோற்றம் கொண்ட மக்களை வேடிக்கை பார்த்துகொண்டு உள்ளேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு ஆணும் பெண்ணும் சற்று உரக்கவே பேசிக்கொள்கின்றனர். என்ன வேலை செய்வார்களோ, தினமும் பார்க்கிறேன். அவர்கள் அவர்க்கே துணை.
பேருந்து வருகிறது. முன்னர் போன பேருந்து கூட்டத்தை வழித்துக்கொண்டு போய்விட்டது போலும். இதில்கூட்டம் அதிகமில்லை. ஒரு தமிழ் மகனும், ஒரு பாரதியும் இருந்தார்கள். இனிமேல் இந்த வண்டியில்தான் நாள்தோறும் பயணிக்க வேண்டும். சற்றே நெரிசல் இருந்தாலும் ஒரு குண்டு பெண் வந்து அருகில் உட்கார்தால் நாம்தான் ஒடுங்கி அமர வேண்டும். உடல் ஊனமுற்றவருக்கு தனி இருக்கை ஒதுக்கி இருப்பதுபோல் குண்டிகளுக்கும் ஒதுக்கி விட்டால் என்ன? என் புத்தகத்தில் 'ஆரியர்கள் படையெடுப்பா? ஆரியர் வெளிப்பரவலா?" என்ற படலத்தை வாசிக்கிறேன்.
மணி: 5:35 நான் கார் நிறுத்தும் இடத்தில் பேருந்து நின்றதும் இறங்கி விடுகிறேன். பேருந்துகளில் போகும் போது ஏறுகையில் காசு போட வேண்டும். மீளும் போது இறங்குகையில் காசு போட வேண்டும். ஓட்டுநரே, நடத்துனர். எனக்கு மூன்னர் அமர்ந்தவர் எழுந்து சென்ற பின்னரே நான் எழுந்து இறங்க வேண்டும். வரிசை, வரிசைக்கு வருந்தும் இந்த சீமை வாழ்க்கை.
மணி: 5.45 வீடு திரும்பியாயிற்று. மனைனயாள் இருக்க தேனிருக்கு என்ன பயம்.
இன்று நாள் வெம்மையாக உள்ளதால் தோட்ட வேலை செய்யலாம். இளவேனில் என்று பிறக்கும் என்று வானிலையார் சொல்லவில்லை. ஆனால் மணலுள் புதைந்த மனிதர் எழுந்து நிற்பதுபோல் இரண்டு மூன்று நாட்களில் துலிப்ப மலர்கள் எல்லாம் எழுந்து நினறு மஞ்சள், சிவப்பு மலர்களை தலையாட்டிக் கொண்டுள்ளன. புல்வெளி, யாரோ ஒருவன் நாளூம் நள்ளிரவில் வந்து அதன் பசுமையை மீண்டும் அடர்த்தி செய்துவீட்டு சென்றது போல் நாளொரு பச்சை பொழுதொரு நீட்டம் என்று வளர்கிறது. மரங்கள் எல்லாம் தம் ஆடைகளை உள்ளிருந்து வெளிக்கொணர்கின்றன். அடுத்த குளிர்காலம் வந்து விடுமோ என்ற அவசரத்தில் பூக்களதான் முதலில் என்று முந்தும் சில மரங்கள்.
இதோ அமெரிக்கா மால் வண்ணன் போல் மேனி போர்க்கும்.
நானும் நம் பங்குக்கு நம் வீட்டு புல்வெளிக்கு சற்றே உரம் இடுவோம்
மணி: மாலை 6.30 போ மடலே.
------------------------------------------------------------------------------------
மணி மாலை: 8.20, புல்வெளிக்கு உரம் இட்டு நீர் பாய்ச்சி விட்டாயிற்று. செழித்து வளரும் என்று நம்புகிறேன். இன்னமும் மங்குல் விழ வில்லை. வழக்கமாக என் இரு நாய்களுடன் முயல் வேட்டைக்கு போவேன். ஒரு வாரமாக போவதில்லை. கடுவன் நாய்க்கு உடம்பில் தோன்றிய கட்டிகளை மருத்துவரிடம் களையச்சொன்னோம். தையல் இட்டு அவனுக்கு ஓய்வு கொடுக்க மருத்துவர் ஆணையிட்டார்.
மனையாள் சப்பாத்தியும் கோழி குருமாவும் செய்து படைத்தார்கள். பாவம்! மதியம் ரொட்டி சாப்பிட்டீரே, பசித்திருப்பீர்கள் என்று வருத்தப்பட்டுக்கொண்டாள். நான் போன பிறவியில் பாஞ்சாபியாக இருந்ததால் எனக்கு சப்பாத்தி என்றால் கொள்ளை விருப்பம். ஒரு வயிறு பிடித்தேன்.
மணி இரவு 9.00: சன்னில் செய்திகள் வரும். கேட்க வேண்டும். பின் 9.30 க்கு சூப்பர் பத்து . குண்டு பொண்ணு ஆர்த்தியொட காமெடி பார்க்கணும். அத்தோடு காலையில் பதிவு செய்யப்பட்ட சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியை வி்ளம்பர வேளையில் பார்க்கவேண்டும்..
9.30 இரவு ஓடிப்போ மடலே.
-------------------------------------------------------------------------------------------------
மணி. இரவு:10.00. எல்லா மடல்களையும் வாசித்தாயிற்று. சொல்லவேண்டியவற்றை சொல்லி விட்டேன். பட்டி மன்றத்தின் பக்கம் யாரையும் காணவில்லை.
என் திருமதி கோலங்கள் பார்க்கிறார்கள்.
நான், இனி படுக்கைக்கு போக வேண்டியதுதான். உறங்கத்தான்.
மணி: இரவு 10.30 போ மடலே.
----------------------------------------------------------------------------------------------
முற்றும்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
0 Comments:
Post a Comment
<< Home