கண்ணதாசனின் தமிழ்ப் பற்று - இரவா-கபிலன்
காஞ்சி சங்கர மடத்தின்
'தமிழ் மன்றம் ' நடத்திய
'கவிதைப் போட்டியில் (1984) பரிசு பெற்ற கவிதை.
"கண்ணதாசனின் தமிழ்ப் பற்று"
எழுதிவிற்ற இலக்கியத்தை கண்ண தாசன்
எங்களுக்குக் கொண்டுவந்த அஞ்சற் காரன் !
தொழுதுஉற்ற ரகசியத்தின் கரத்தி லாடும்
தொகைப்பாட்டுத் தொட்டிலிலே தூங்க வந்தான்!
பழுதுஅற்ற தமிழ்க்கன்னி இதழின் மின்னல்
பைந்தமிழின் கவிதைகளே அவனின் வாழ்வு!
அழுதுஉற்ற சோகமெல்லாம் அவனின் பாட்டின்
அமுதுதரும் சுரபிசுனை மூழ்கி மாளும்!
தென்றலிலே தமிழ்கரைத்தான் கண்ண தாசன்
தீச்சுடரின் கவிதைக்குள் நெய்யும் வார்த்தான்!
மன்றங்கள் மாடங்கள் மாசி யெங்கும்
மதுவூற்றித் தமிழ்ப்பாட்டுத் தீயை வைத்தான்!
இன்றெங்கள் இலக்கியத்தின் வாயில் முன்னே
இனிதான புன்னகையை வீசு கின்றான்!
கன்றுக்கும் தாய்மைக்கும் உறவைப் போலோ
கண்ணனுக்கும் தமிழுக்கும் உறவாய் ஆனான்!
காடுகளில் சுற்றிவரும் பாதை போலே!
கடலோடிச் செல்கைகின்ற தோணி போலே!
மாடுகளை ஓட்டுகின்ற சாட்டை போலே!
மாந்தரையும் வாழுவிக்கும் அன்னம் போலே!
நாடுபல சுற்றிடினும் தமிழைப் போலே
நலமான மொழிஅவனும் கண்ட தில்லை!
பாடுபெற வலுவேற்றும் தமிழைத் தேனைப்
பருகவைத்த மருத்துவன்தான் கண்ண தாசன்!
நற்றமிழின் நாடியெல்லாம் அறிந்தி ருந்தான்!
நாடெங்கும் இசைப்பாட்டு வேந்தன் ஆனான்!
உற்றமிழின் புதல்வனாய் எழுந்து நின்றான்!
உய்கடலும் அவன்பாட்டைக் கேட்டே ஆடும்!
சொற்றமிழின் வளமைக்குள் சொல்லைப் பாய்ச்சிச்
சொக்கட்டான் சூதாட்டம் ஆடிப் பார்த்தான்!
வெற்றிதரும் மா தமிழால் கண்ண தாசன்
வீறுகொண்ட மாணிக்க விளைச்சல் ஆனான்!
போர்ப்பாட்டுத் தமிழாலே தாலோ பாடி
புரியாத மொழியெல்லாம் புரிய வைக்கும்
நேர்ப்பாட்டை அறநூலைப் போலே வாழ்ந்து
நீர்க்கடலின் மணிபோன்று தமிழில் தேர்ந்தான்!
கார்பாட்டை கதிர்பாட்டை கண்ணன் பாட்டை
கவிகொஞ்சும் சீர்பாட்டை சமயப் பாட்டை
போர்கோட்டை இலக்கியமாய் எழுதி வைத்தான்
பூசித்தாள் தமிழ்த்தாயும் அவனைத் தானே!
காற்றுக்கும் மின்னலுக்கும் கரைந்து போகா
கவிமலையின் அரணாகும் தமிழில் வாழ்தல்
ஆற்றுக்கும் நாற்றுக்கும் அன்னை ஆகும்
அருவிகளில் தூங்கிடலாம்! என்றோ, எண்ணி
காற்றுக்கும் தன்பாட்டுத் தேரைத் தந்தான்!
கற்கோட்டை கவிகோட்டை கட்டிக் கொண்டான்!
மாற்றங்கள் வானத்தில் வையம் எங்கும்
வந்தாலும் அவன்புகழைத் தமிழே சொல்லும்!
கட்டிப்பொன் என்பாரே கவியின் சொல்லை,
கண்ணாடி மணிபோலே மயக்குஞ் சொல்லை,
மட்டிப்பால் வாசனையாய் மணக்குஞ் சொல்லை,
மாளிகையின் வாசத்தின் மதப்புச் சொலை,
கொட்டித்தான் வைத்தானே கவிதைக் குள்ளே!
குடிக்கத்தான் செய்தானே தமிழின் கள்ளை!
பட்டுக்குள் வைக்கின்ற வைரம் தன்னைப்
பாட்டுக்குள் வைத்தானை வணங்கு கின்றேன்.
இவண்
இரவா-கபிலன்.
0 Comments:
Post a Comment
<< Home