அர்த்தமுள்ள இந்துமதம்
முத்தமிழ் கூகிள் குழுமத்தில் சுதனின் விஜி எழுதிய கட்டுரை
மெளனம்
காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!
அசைவது பலவீனத்தைக் காட்டுகின்றது. அசையாதது உறுதியைக் காட்டுகிறது.
சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக்காட்டிக்கொள்கின்றான்.
மெளனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.
"சும்மா இருப்பதே சுகம்" என்றார்கள்.
பேசாமல் இருப்பதே பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளூம் பெரிய மேதைகளூம் குறிப்பிட்ட சில காலங்களில் மெளனவிரதம் அனுஷ்டிக்கின்றார்கள்.
ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று விரும்பி அதைச்சுருக்கமாக தெளிவு படுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.
சிறிய விசயத்தைக் கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன் கேலிக்கு ஆளாகிறான்.
பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, "மக்கட்பதடி" என்றான் வள்ளுவன்.
'சுருங்கக் கூறி விளங்க வைத்தல்" என்பார்கள்.
ஞானிகள் சில விசயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன்மொழிகளாகி விடுகின்றன.
பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.
மெளனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்வீகக் கலை.
ஒரு குடும்பம். கணவன் -மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம். ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக்கிறான். அவன் அவளைத்திட்டி இருந்தால். அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே சித்திரவதை செய்கிறது.
"அவன் பேசமாட்டானா? பேசமாட்டானா?" என்று எதிர் பார்க்கிறாள். இரவில் நிச்சயமாய் பேசுவான் என்று நம்புகிறாள். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.
"நான் என்ன தப்பு பண்ணினேன்? " என்று மெதுவாகக்கேட்கிறாள்.
நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மெளனம் கலையவில்லை. அவன் மெளனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.
திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான்.
அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது!
"இன்றைக்கு நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம் என்று ஊர் முழுக்கச் சொல்லிக்கொண்டு வந்து விடுகிறாள்'..
பத்து வார்த்தை திட்டி நாலு வார்த்தை உதைப்பதை விட அந்த மெளனம் மகத்தான சக்தியைப் பெற்று விடுகிறது.
கோவிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடம் எல்லாம் பேசத்தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத்தட்டி விடும்.
கோவிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கி விடும்" என்று பேசத்தலைப்பட்டு விடுவான்.
அது மெளனமாக இருக்க, பக்தன் தான் பேசுகிறான்,பாடுகிறான்., புலம்புகிறான்.
ஆரவாரங்கள் வெறும் மயக்கங்கள்.
அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.
தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன இலாபம்?
'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.
வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.
வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.
நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.
சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.
பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.
ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.
தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை"..
மெளனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூட போதும்.
தொடரும்...
நன்றி...
அர்த்தமுள்ள இந்துமதம் -கவிஞர் கண்ணதாசன் அவர்கள்..
--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி
--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---
0 Comments:
Post a Comment
<< Home