"மௌனஒலி" - லாவண்யா
"Pin drop silence"
அமைதி அல்லது மௌனமான ஒரு இடத்தை,நிகழ்வைக் குறிக்கும் மேற்கோள் தானே மேலே சொன்னது. ஒரு குண்டூசியைத் தரையில் எறிந்தால் அதன் சப்தம் சற்று அமைதியான பகுதியில் காதில் கேட்கும் அளவில் இருக்கும். இது ஒரு சாத்தியமான விசயம். ஆனால் இதை விட ஆழமான கொடூரமான மௌனத்தை பற்றிய சங்க கால கவிதை ஒன்று உள்ளது.
கொன்னுர் துயிலினும் யாந்துங் சலமே
எம்இல் அயல ஏழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
உரை:
---
இந்த பெரிய ஊர் தூங்கிய பிறகும் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டின் அருகே ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள மயிற் பாதம் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின் ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்.
நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"
இந்த சங்க பாடல் ஒரு உக்கிரமான மௌனத்தை பேசுகிறது. ஊர் உறங்கிவிட்ட வேளை. தூங்க முடியாத இருவர், சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்திலிருந்து உதிரும் பூ ஒன்றின் ஒலியை கேட்டுக் கொண்டு இரவெல்லாம் தூங்காது இருப்பதாக வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஆழமான சோகம் போல தெரிந்தாலும் உற்று கவனித்தால், இலைகளை மயிற்பாதங்களுக்கு ஒப்பிட்ட கவிஞன் பெரிய பூங்கொத்துகளை நினைவில் கொணரும் கவிஞன் உதிரும் பூ நீலமணி போலிருக்கும் என்று நினைவு கூரும் கவிஞன் சோகமாக இருக்க
வாய்பில்லை என்றும் கொள்ளலாம். மலர் உதிரும் ஒலியை கேட்பது சாத்தியமா என்ற வாதத்தை விடுத்து உறங்காமல் தவிக்கும் அந்த இருவர் பற்றி சிந்தித்தேன். என் சிந்தனையில் வந்து போனது இந்த நான்கு விதமான உறவுகளாகும்.
நட்பு
--------
நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சண்டை என கொள்வோம். சண்டை முடிந்திருக்கும் ஆனால் அதன் சாரம் போகாதிருக்கும்.நீ என்ன அவ்வளவு பெரியவனா என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கும். ஆனால் நட்பும் மேலோங்கி நிற்கும். பேச முடியாது. ஒரே அறையில் இருவரும் அடுத்தவன் வந்து பேசுவான் என்ற நினைப்போடு உறங்காமல் படுத்து இருப்பார்கள்.
நீண்ட நாட்களுக்கு பின் கூடிய பழைய நண்பர்கள் இருவர். நிறைய பேசி மகிழ்ந்து,பிரிந்து செல்ல வேண்டிய நாளின் முதல் நாள் இரவு. மிக சந்தோசமான மனநிலையில் நாம் இருக்கும் போது ஒரு சில பயணங்கள் முடியக் கூடாது என்று நினைப்போம். அதுபோல் அந்த இரவு முடிவே இல்லாமல் நீளக்கூடாதா என ஏங்கியவாறு தாங்கள் மகிழ்ந்து களித்த நாட்களை ினைத்தபடி கண்மூடி உறங்காது படுத்திருப்பர்"
தாய் மகள்
----------
மகளை திருமணம் முடித்து கொடுத்த பெற்றோர் அவளை காண அவள் வீடு வந்திருக்கின்றனர். திருமணம் மற்றும் தலை தீபாவளி, பொங்கல், ஆடி இப்படி பல பண்டிகைக்கு தரப்பட்ட சீர் சரியில்லை என்கிற சண்டை. வீடு தேடி வந்த பெற்றோரை அவமான செய்த கணவனையும் கணவர் வீட்டாரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத பெண், தன் மகளை இப்படி பட்ட பேய்களிடையே விட்டு விட்டோமே என்று தாய், அவர்களும் ஒரே வீட்டில் ஒர் இரவில் உறங்காது இருப்பார்கள் அப்போது மலர் உதிரும் ஒலி என்ன கண்ணில் இருந்து கன்னங்களில் கண்ணீர் வழியும் ஒலியைக் கூட கேட்க முடியும்.
கணவன் மனைவி
----------------
இந்த உறவில் மலர் உதிரும் ஒலியை கேட்டுக்கொண்டே ஒருவரோடு ஒருவர் பேசமல் படுத்திருப்பார்கள் என்றால் அதைவிட கொடுமை உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்தக் கவிதைக்கு இந்த உறவை வைத்து நான் சிந்தித்தது வேறு விதமாகும்.
"நான் கேட்கும்
எந்த ஒரு கேள்விக்கும்
உடன் பதில் வைத்திருகிறாய்
அழகாய், அது
உன் மௌனம். " - நன்றி நிலா ரசிகன்
இந்த கவி வரிகளில் ஒரு ஏக்கமில்லை, ஒரு சாடல் இல்லை. இதில் ஒரு சந்தோசம் தான் தெரிகிறது. என் மௌனம் சொல்லாத எதையும் என் வார்த்தைகள் சொல்ல போவது இல்லை என்ற புரிதல்(understanding) கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரும் "மயிற் பாதம் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின் ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்" என படுத்திருக்கலாம்.
காதலன் காதலி
--------------
காதலிக்கும் சமயம் இருவரும் வேறு வேறு வீடுகளில் தான் இருப்பார்கள். ஆயினும் சிந்தனை ஒரே புள்ளியில்தான் இருக்கும். ஒருவேளை கற்பனையில் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின்
இருந்து உதிரும் நீலமணி மலர்களின் ஒலியைக் கேட்டபடி இருவரும் அவர் அவர் வீட்டில் உறங்காமல் படுத்து இருப்பர். கற்பனையில் மட்டுமே
மலர் உதிரும் ஒலியை காதில் கேட்க முடியும்.
0 Comments:
Post a Comment
<< Home