இந்திய நாய்களும் அமெரிக்க நாய்களும் - அன்பு செல்வன்
என் நெருங்கிய நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன்.முதல் முதலில் அவன் வீட்டுக்கு போனபோது பயந்துவிட்டேன்.மிகப்பெரும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை வளர்த்துவந்தான்.பில் என்று நாய்க்கு பெயர்.இங்கே நாய்களுக்கு அனாதை விடுதி ஒன்று உள்ளது.அங்கிருந்து எடுத்து வந்து வளர்க்கிறானாம்.
இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டருகே தெரு நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது.அதில் அழகான குட்டி ஒன்றை தூக்கிகொண்டு வந்து ஆசையாய் டோரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தோம்.
பில் மிகவும் சூட்டிகையான நாய்.அதை வீட்டுக்குளேயே வளர்க்கிறார்கள்.சோபாவில் ஏறி உட்காரும், பெட்டில் ஏறி படுக்கும்.ஒண்ணுக்கு,ரெண்டுக்கு வீட்டுக்குள் போவதில்லை.ஒண்ணுக்கு வந்தால் வீட்டுக்கு வெளியே ஓடி அதற்கென தனி டாய்லட் கட்டியிருக்கிறார்கள்.அங்கே தான் போகும்."எப்படி பழக்கினாய்" என என் நண்பனிடம் கேட்டேன்.2000$ செலவில் நாய் ட்ரெய்னரை வீட்டுக்கு கூட்டி வந்து பழக்கினானாம்.
டோரி வந்த புதிதில் வீட்டுக்குளே ஒளித்து வைத்து வளர்த்தோம்.எங்கள் பாட்டிக்கும்,அப்பாவுக்கும் தெரிந்தால் திட்டுவார்கள் என பயம்.டோரி கொஞ்சம் பெரிதானதும் குட்டு உடைந்து திட்டு வாங்கினோம்.அதன் பின்னும் வீட்டுக்குள்ளேயே வளர்த்தோம்.ஆனால் சில நாட்கள் கழித்து மூச்சா,பீச்சா எல்லாம் வீட்டுக்குளேயே போக ஆரம்பித்தது.கன்னா பின்னவென்று திட்டு கிடைத்ததும் அதை வெளியே தோட்டத்துகுள்ளேயே வளர்த்தோம்.அதன் பின் டோரி வெளியே தான் இருந்தது.
விருந்தாளிகள் வந்தால் பில் அவர்கள் மீது பாய்வதில்லை.நேராக ஓடிப் போய் சோபாவின் மீது ஏறி நின்று கொள்ளும்.விருந்தாளிகள் அதை தடவி கொடுக்க வேண்டும்.அதன் பின் அது நண்பனாகிவிடும்.
விருந்தாளிகள் வந்தால் டோரியை கட்டித்தான் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் பாய்ந்து விடும்.இதற்கு பயந்தே விருந்தாளிகள் வந்தால் டோரியை வெளியே அனுப்பிவிடுவோம்.கதவை திறந்து விட்டால் அது ஓடிப்போய் விடும்.
பில் சாப்பிட மாட்டுக்கறியும்,சிக்கனும் பெட்கோவில்.பில்லுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும்.ஐஸ் கியூப்ஸ் என்றால் அதற்கு உயிர்.நாய்க்கு தனியாக இங்கு உண்டு.அதை அடிக்கடி வாங்கி கொடுப்பான் என் நண்பன்.அதற்கு விளையாட நாய் பொம்மைகள் கூட நிறைய வாங்கி வைத்திருந்தான்.அது தூங்க தனி பெட்.டீவி பார்க்கும்போது ஓடி வந்து மடியில் ஏறி படுத்துக்கொள்ளும்.
நாங்கள் டோரிக்கு போட்டது சாதம் தான்.எங்கள் வீட்டில் அசைவம் மூச்ச்.அதனால் டோரியை சைவமாகத் தான் வளர்த்தோம்.நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதே சாப்பாடு தான் டோரிக்கும்.அது எங்களுடன் அதற்கு சின்ன வயதாக இருக்கும்போது விளையாடியது.அது வளர்ந்த பின் பகலில் வெளியே ஓடிவிடும்.சாப்பாட்டு வேளைக்கு திரும்ப வந்து சாப்பிட்டு விட்டு பிறகு மீண்டும் ஓடிவிடும்.
இப்படி இரண்டு நாய்களையும் ஒப்பிட்டு பார்த்தபின் எனக்கு "என்னடா நாய் வளர்த்தோம்?" என்று ஆகிவிட்டது."இங்கே நாயை பிள்ளை மாதிரி வளர்க்கிறார்கள்.நாம் நாயை நாய் மாதிரி வளர்த்தோமே" என தோன்றியது.
டோரி செத்தது கூட எங்கள் அலட்சியத்தால் தான்.ஒரு நாள் நாய் வண்டி வந்து அதை பிடித்துக்கொண்டு போய்விட்டது.50 ரூபாய் கொடுத்திருந்தால் விட்டிருப்பார்கள்.எங்கள் பாட்டி நாய்க்கு 50 ரூபாயா என யோசித்து நாய் வண்டிக்காரனிடம் 10 ரூபாய் தருகிறேன் என பேரம் பேச அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.சாயந்திரம் வீட்டுக்கு வந்து விஷயம் தெரிந்து கன்னா பின்னாவென்று பாட்டியை திட்டத்தான் முடிந்தது.அதன்பின் இரண்டு மாதம் மிகவும் சோகமாக இருந்தேன்.அதன் பின் நாயே வளர்க்கவில்லை.
பில்லை பார்க்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வந்தது.நாய் வளர்த்தால் இப்படித்தானே வளர்க்க வேண்டும் என தோன்றியது.அதன் பின் திடிரென்று ஒரு முக்கிய சந்தேகம் தோன்றியது.
டோரி மிகவும் ரொமான்டிக்கான நாய்.அதற்கு எங்கள் தெருவிலிருந்த பெண் நாயுடன் மிக நெருங்கிய லவ்ஸ் உண்டு.அந்த நாயிடம் வேறு எந்த நாயையும் நெருங்க டோரி விடாது.பில் வீட்டுக்குளே இருக்கிறதே...இதற்கு என்ன செய்யும் என தோன்றியது.நண்பனிடம் கேட்டேன்.
அந்த பிரச்சனையே பில்லுக்கு இல்லை என்று சொல்லிவிட்டான்.அது பிறந்து சில நாட்களில் ஆபரேஷன் செய்து அதை நீக்கி விட்டார்களாம்.அதற்கு இனக்கவர்ச்சியே எப்போதும் தோன்றாதாம்.
கேட்டதும் மனசு நொந்து விட்டது....பில்லை பார்த்ததும் அதன் பின் பொறாமை தோன்றவில்லை.டோரியை நாங்கள் வளர்த்தவிதம் ஆயிரம் மடங்கு தேவலை என்று தோன்றியது.நாயை நாய் மாதிரி வளர்த்தோம்.சந்தோஷமாக இருந்து செத்துவிட்டது.இப்படி பில் மாதிரி பொம்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.
அமெரிக்க நாய்களை ஒப்பிடுகையில் இந்திய நாய்கள் கொடுத்து வைத்தவை தான் என தோன்றுகிறது...
4 Comments:
அந்த பிரச்சனையே பில்லுக்கு இல்லை என்று சொல்லிவிட்டான்.அது பிறந்து சில நாட்களில் ஆபரேஷன் செய்து அதை நீக்கி விட்டார்களாம்.அதற்கு இனக்கவர்ச்சியே எப்போதும் தோன்றாதாம்.
தவறு மனிதர்களுடையது.
நாய்களை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் அவை அளவுக்கு மீறி இனப்பெருக்கம் செய்கின்றன.
சாலைகளில் அடிப்பட்டு சாகின்றன. வீதிகளில் அலைகின்றன.
நானிருக்கும் ஊரில் வருடம் 18,000 மேல் நாய்கள்+வளர்ப்புப் பிராணிகள்
தத்தெடுக்க யாரும் முன் வராததால்
கருணை கொலைக்கு ஆளாகின்றன.
வேறு வழியின்றி கட்டாய உறுப்பு நீக்கம் செய்கிறார்கள்.
நாய்கள் பற்றி எழுதியமைக்கு நன்றி.
நல்ல பதிவு. உங்கள் வீட்டில் டோரி. எங்கள் வீட்டில் மணி.
நாயைப் பற்றிப் பிடித்த வாசகம் - இந்த ஊரில்
All dogs go to heaven!
அன்பே சிவத்தில் கமல் சொல்லும் ஒரு வசனம் - நாய்க்குரிய ஆங்கில வார்த்தையை திருப்பிப்
போட்டுப் சொல்லச் சொல்வார்.
நாயைப் பற்றி இன்னொன்றும் சொல்வார்கள். நாய்க்கென்று தனி ஆத்மா கிடையாது. அதை வளர்ப்பவரின் குணங்களை அதனிடம் காணலாம்
அன்புடன்
சாம்
அன்பர்கள் வாசன்,நெருப்பு சிவா,சாம் ஆகியோருக்கு முத்தமிழின் நன்றி.எங்கள் முத்தமிழ் குழுமத்தில் இதுபோல் பல நல்ல கதைகள்,கவிதைகள் எழுதப்படுகின்றன.அவற்றை எங்கள் வலைபூவில் பிரசுரம் செய்கிறோம்.
இனக்கவர்ச்சி இல்லாததால் இங்குள்ள நாய்கள் சந்தோசமாகவும் நட்பாகவும் உள்ளன. இது இயற்கைக்கு முறணானது ஆனால் நாய்கள் சுகம் பெறுகின்றன. அவைகளை உயிருள்ள பொம்மைகளாக கருதினால் அவைகள் மேல் அன்பு கொள்ளமுடியும்
அன்புடன்
கால்கரி சிவா
Post a Comment
<< Home