கூர் தீட்டிய அம்புகள்
முத்தமிழ் கூகிள் குழுமத்தில் அரங்கர் இட்ட கவிதைகள்
கூர் தீட்டிய அம்புகள்
தயாராக இருந்தன.
மேலும் மேலும்
கூர்தீட்டியபடியே
தருணம் பார்த்திருந்தேன்.
தருணம் வரவில்லை.
அம்புகள் துருப்பிடித்தன..
மழுங்கிப் போயின.
மீண்டும் மீண்டும்
கூர்தீட்டியபடியே...
என் ஆயுள்
முடிந்துபோனது.
மரம்
--------
மண்ணின் வளமதனால்
மண்ணின் தன்மையதே ஆகி,
மண்ணின் சாறுண்டு,
தண்ணென,
தானும் அ·தே கொண்டு,
கிடந்தபூமி கிளர்ந்தெழுந்து
நின்றார்போல்,
நிமிர்ந்தெழுந்து நெடிதுயர்ந்து
நின்று,
புழுபூச்சி முதல்
வல்லூறு ஈறாகப்,
பல்லுயிர்களும் வாழும்
பெருநிலமாய்,
சிறு குருவிகளின்
குட்டிகளுக்குத் தொட்டிலாய்,
நெருப்பென வாட்டுங்
கோடையிலும்,
தெள்ளிய நீரோடையின்
தன்மையோடு
நிழல்உகுத்து,
நிமிர்ந்து நிற்கும்
நீறூற்றே!
அழிப்பார்வரினும்
அஞ்சாதுநின்று,
அங்குமிங்கும் ஓடாது,
வெட்டிப் பிளக்கும்போதும்
சிறிதும் கண்ணீர் உகுக்காத
மறமே...
0 Comments:
Post a Comment
<< Home