Monday, March 06, 2006

38-பரணில் கிடைத்த பனை ஓலை

எனது பரணில் கிடைத்த பனை ஓலையிலிருந்து பெறப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்

அமுதே வருக! வருக

இரவா - கபிலன்

தித்திக்கும் ஆரமுதே! 'இந்து' என்னும்

தென்னகத்துத் தாமரையே! தொட்டுப் பார்த்தே

சுற்றுகின்ற பூங்கொடியே! இதயத் துள்ளே

துளிர்கின்ற புன்னகையே! கடைக்கண் காட்டிப்

பற்றிக்கும் பைம்பொழிலே! இளமை துள்ளும்

பஞ்சணையின் பரவசமே! நிலவும் கூசும்

முத்துப்பல் பூச்சரமே! என்றன் நெஞ்சில்

மூழ்கிவிட்ட திருவிளக்கே! அமுதின் தேரே!



எதற்கென்னைத் திருடினாய்? என்னைக் கேட்டால்

இல்லையென்று சொல்வேனா? கொள்ளைக் காரி!

எதற்காகச் சிரிக்கின்றாய்? இரவுக் கனவும்

எரிதணலாய் ஆச்சுதடி! சிறகு கட்டிப்

பறக்கின்ற நினைவுகளும் உன்னைச் சுற்றிப்

பரிவட்டம் கட்டுதடி! பட்டைத் தொட்டும்

உறங்காமல் கிடக்குதடி! ஊமை நெஞ்சும்

உனைத்தேடித் தவிக்குதடி! வருக, மீண்டும்!



மறுபடியும் வருவாயா? மனதுக் குள்ளே

மந்திரமும் தருவாயா? செவிக்குள் இன்பம்

நடுவதற்கு வருவாயா? இதயத் துள்ளே

நடைபோட்டு மகிழ்வாயா? தங்கத் தொட்டில்

அசைவதுபோல் வருவாயா? அன்பில் பொங்கும்

அருவிபோல் வருவாயா? உயிர்க்கு வேண்டும்

அமுதத்தைத் தருவாயா? மதுவின் தேரல்

அடையாக வருவாயா? அழகே, சொல்! சொல்!



சித்திரமே நீ, எனக்கு! அமுதின் ஊற்றாம்

செங்கனிதான் நீ, எனக்கு! நீயும் நானும்

பத்திரமாய் இரவுக்லுள் பதுங்கிக் கொள்வோம்!

பசுங்குளிர்தான், என்னுயிர்க்கு! நெஞ்சம் பூக்க

நித்தமொரு கவிபடைப்பேன்! இன்ப வெள்ளம்

நிறைந்திடவே அணையெடுப்பேன்! தமிழைப் போன்ற

புத்தகமாய் உனைப்படிப்பேன்! பட்டு மெத்தைப்

பனிக்கடலில் மிதந்திருப்பேன்! வருக, அன்பே!



காலத்தை வென்றிடலாம்! இதயம் மூட்டும்

கனலுக்குள் வெந்திடலாம்! காத லாலே

ஞாலத்தை அளந்திடலாம்! கனவித் தேரில்

நாமிருவர் பறந்திடலாம்! இனிமை வெள்ள

அலைநடுவே மிதந்திடலாம்! மாறி மாறி

அமுதத்தைப் பகிந்திடலாம்! நமக்குள் நாமே

சோதிக்கக் கிடந்திடலாம்! உயிரை மாற்றி

ஆதிக்கம் செய்திடலாம்! அமுதே வா! வா!



சாய்ந்தாலும் கோபுரந்தான்! கொங்கை முற்றிச்

சரிந்தாலும் மாமலைதான்! காதற் கண்கள்

காய்ந்தாலும் செம்மலர்தான்! இதழின் தேரல்

கரித்தாலும் செங்கனிதான்! மலரின் கைகள்

ஆய்ந்தாலும் அணிகலந்தான்! பட்டு மேனி

அசைந்தாடும் பூங்கொடிதான்! தென்றல் போலப்

பாய்ந்தாலும் மானினந்தான்! தமிழால் கொஞ்சிப்

பசியாற்றும் பைந்தமிழே, இந்து, நீ, வா!



நெஞ்சுக்குள் இடங்கொடு! கவிஞன் என்றன்

நெஞ்சுக்கும் நிலைத்திடு! அன்பில் பூக்கும்

மஞ்சத்தில் மகிழ்ந்திடு! மனித வாழ்வை

மதித்துமே இணைந்திடு! இதயந் தேடும்

அஞ்சுகமாய் இருந்திடு! இன்னும் என்றும்

அருகினிலே அமர்ந்திடு! உயிரே என்னில்

தஞ்சமாய் வந்திடு! தமிழைப் போலத்

தளிர்த்து நீ, வாழ்ந்திடு! வாழி, இந்து!



இனிக்கின்ற நிலவாக இருப்ப தென்றால்

என்னுடனே இருந்து போ! இல்லை யென்றால்,

பனி போலே எனைவிட்டுத் தேய்வ தென்றால்

பாசத்தைக் காதலை நீ அறிவ தென்றோ?

இனிக்கின்ற காதல்தான் வரலா றாகும்!

இகழ்கின்ற மற்றெல்லாம் கவிஞர்க் கில்லை!

கனிக்குவியல் தேன் பொழியும் 'இந்து', செந்தேன்

கவிவடிக்கும் மாளிகைக்குள் வாழ்க! நீயே!

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4