கடவுளும் காதலியும் ஒண்ணு
முத்தமிழ் கூகிள் குழுமத்தில் கவிஞர்கள் காழியூரான்,அரவிந்த லோசனன்,அரங்கர் எழுதிய கலக்கல் கவிதைகள்
நீ எல்லாமாய் இருந்தும்
இல்லாமலிருக்கிறாய்
கண்ணில் பட்டும்
காணாமல் இருக்கிறாய்
எட்ட இருந்தும்
கிட்டத்து உறவு என்கிறாய்
தெரிந்தும்
தெரியாமலிருக்கிறாய்
அறிந்தேன் என்று சொல்லுமுன்
அரிதாய் சிரிக்கிறாய்
அதனால் சொல்வேன்
கடவுளும்
காதலியும்
ஒண்ணு.
முற்றத்துக் கவிராயர் (அரவிந்த லோசனன்)
தேடுவது எதுவென்று
அறியாமல்
தேடிக்கொண்டு
இருக்கின்றேன்
கிடைப்பது கிடைத்தாலும்
தேடியது நிற்குமா?
தேடுவது பழகிப்போய்
தேடுவது தொடருமோ?
தேட வேண்டியதை விட்டு
தேடலை தேடுகிறேன்.
தேடலே தேவையானால்
தேடல் அவசியம்தானா?
காழியூரன்
காழியூரானின் இக்கவிதைக்கு அரங்கர் எழுதிய பதிலுரை
தேடுக தேட்டை ஒழிக்கும் தேட்டையை
தேட்டை கிட்டிடின் வாழ்நாள் முற்றும்
வேட்டை! வேட்டை! வேட்டை!
தேடிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தேடிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே
தேடிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே
தேடிக் கண்டார் நிலைசொல்வ தெவ்வாறே.
அஹம் போதகம் நைவ ப்ஹோக்தம் ந ப்ஹோக்தா
சித்தானந்த ரூபஸ் சிவோஹம்! சிவோஹம்!
---------- நிர்வாண ஷட்கம்.
எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.
எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?
எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.
------- வள்ளலார்.
-----------
அரங்கன்.
0 Comments:
Post a Comment
<< Home