தொடர்கதை: ஒற்றைச் சிறகு பட்டாம்பூச்சி... - நிலா ரசிகன்
ஒற்றைச் சிறகு பட்டாம்பூச்சி...
-1-
அக்கா அக்கா என்னையும் பாண்டிக்கட்டம் விளையாட
சேர்த்துக்குங்களேன்..என்று தன் தெரு சிறுமியர்கூட்டத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மலர்விழி..
"நீ எப்படி டீ விளையாடுவே? உனக்குத்தான் ஒரு கால்
நொண்டியாச்சே..உன்ன எல்லாம் சேர்த்துக்க முடியாது...போடி" என்று விரட்டினாள் கூட்டத்தில் ஒருத்தி..
அழுதபடியே தன் இடதுகாலில் கைவைத்து விந்தி விந்தி
வீடுநோக்கி நடந்தாள் அந்த பத்துவயது பச்சைக்கிளி...
அழுதவாறே வரும் தன் பிள்ளையின் கண்ணீர் துடைத்தவாறே அம்மா கேட்டாள்
"என்னமா ஆச்சு,ஏன் என் ராசாத்தி அழுறா?"
"என்னை யாருமே விளையாட சேர்த்துக்க மாட்டேங்கறாங்க மா...நான் ஒரு கால் ஊனமா
பிறந்தது என் தப்பாம்மா?"
"நான் விளையாடுறேன் டா என் செல்லத்தோட...வா
நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம்" என்று கன்னத்தில்
வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே மலர்விழியுடன்
விளையாட ஆரம்பித்தாள் அம்மா.
******************************
மணி இரவு பதினொன்று.
"கடவுளே ஏன் என் மகளுக்கு இப்படி ஒரு குறைய வச்ச?
என்ன பாவம் செய்தேன் நான்?
என் பொண்ணை நொண்டின்னு இரக்கம் இல்லாம கிண்டல்
பண்றவங்க கிட்ட இருந்து விடிவே கிடையாதா?
கவலையுடன் கழிந்தது அந்த கண்ணீர் இராத்திரி.
நாட்கள் மாதமாகி மாதங்கள் வருடமாக மாறியதில்
மலர்விழி என்கிற அந்த சிறுமொட்டு பூவாய் மலர்ந்து
நின்றது...
அம்மா நான் தான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்
எடுத்திருக்கேன் மா என்று சந்தோஷத்துடன் ஓடிவந்த
மலர்விழியை கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள்
அம்மா..
"எம் பொண்ணு டாக்டருக்கு படிக்க போறா...நம்ம ஊருக்கே ஒரு நாள் டாக்டரா வருவா பாருங்களேன் "
என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உற்சாகத்துடன்
சொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா..
****************************************************************************************************************
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடுதியில் தங்கி
படிக்க ஆரம்பித்தாள் மலர்விழி…
"ஏய் இங்க பாருங்கடி ஊமை வர்றா,ஒரு கால் இப்படி இருக்கும் போதே இவளுக்கு இவ்ளோ திமிர்...ரெண்டு காலும் ஒழுங்கா இருந்தா எப்படி இருப்பா..."
தோழிகளின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் வகுப்பு நோக்கி நடந்தாள் மலர்விழி...
கல்லூரி சேர்வதற்கு முன்பும் மலர்விழி இப்படித்தான்.. அதிகம் பேசமாட்டாள்..வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாள் மழைதான் அன்று!
அவள் பேசிச் சிரிக்கின்ற ஒரே ஜீவன் அவள் அம்மா மட்டும்தான்.. அம்மா என்றால் கொள்ளைப் ப்ரியம் மலர்விழிக்கு...அம்மாவை ஒரு தோழியாகவே எண்ணி எல்லாம் சொல்வாள்..அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது...
விடுதியில் சேர முதலில் மறுத்தாள்...அம்மாவைப் பிரிய வேண்டுமே!
அம்மாதான் சொன்னாள் "நீ டாக்டரா ஆகணும் மா அதுதான் முக்கியம்...வாரவாரம் நான் வந்து உன்னைப் பார்க்கிறேன் டா...நீ நல்லா படிச்சா அதுவே அம்மாவுக்கு போதும்..." என்று சமாதானம் சொல்லிதான் அனுப்பி வைத்தாள்...
********************************************************************************************************************
விடுதிவாழ்க்கை ரொம்ப வித்தியாசமாக இருந்தது மலர்விழிக்கு...
கிராமத்தில் வளர்ந்தவளுக்கு இந்த நகர விடுதி நரகமாக தோன்றியது...
ஜீன்ஸ்,சல்வார் என்று திரிகின்ற பெண்கள் மத்தியில் தாவணிப்பூவாய் வலம்வருகின்ற இந்த மலரைக் கண்டு
சிரிக்காத பெண்களே இல்லை...
யாருடனும் ஒன்றிப் பழக மனமில்லை மலருக்கு.
இரவு வெகுநேரம் படிப்பாள்..இல்லை அம்மாவிற்கு
கடிதம் எழுதுவாள்...இப்படியே நாட்கள் நகர ஆரம்பித்தது...
ஒரு மாத காலம் கழிந்தது...
அன்று அவள் முதன் முறையாக அவனைச் சந்தித்தாள்..
இரவில் கட்டிலில் தூங்கிய
குழந்தையொன்று விழித்துப் பார்க்கையில்
நெஞ்சில் தூங்கினால் எப்படி ஒரு
இனம் புரியா சந்தோஷம் இருக்குமோ ஒரு
தாயிற்கு அதைப்போன்ற ஒரு
இனம் புரியா சந்தோஷநிலைக்கு
தள்ளப்பட்டாள் மலர்விழி..
ஓ அந்த நொடி...
--சிறகில்லாவிட்டாலும் தொடரும்..
2 Comments:
அ௫மை தொடருங்கல்....
-மலர்விழி-
அ௫மை தொடருங்கல்
-மலர்விழி-
Post a Comment
<< Home