வேண்டும் மீண்டும் ஒரு சுதந்திரப்போர்
கால மாற்றத்தில்
காலண்டரில் மட்டுமே
காணக்கிடைக்கின்றாய்!
கண்ட கனவெல்லாம்
கருகிட நீ மறைந்தாய்..
காக்கை உட்காரும்
சிலையாகி நீ நின்றாய்!
காலமெல்லாம் காத்திருந்து
கடைசியில் ஒரு நாள்
மாலை வாங்கி நின்றாய்
மனம் மாறிய
மனிதர்கள் மத்தியில்
மறைந்தே போனாய்...
உடுத்திய கதராடையும்
உழைத்த நெசவாளர்களும்
உயரவே இல்லை
உயர்த்திப் பிடித்த
கொடியும்
ஓங்கி ஒலித்த
கீதமும்
மறந்தே போனது
மதி கெட்ட
மனிதர்களுக்கு
அது ஒரு பொருட்டே
இல்லையென்றானது...
காந்தியவாதிகள்
எல்லாம் வெறும்
கமிசன்வாதிகள்
ஆனார்கள்
கதராடைத் தொண்டர்கள்
எல்லாம் பெரும்
காரியவாதிகள் ஆனார்கள்...
காலம் ரொம்ப மாறிப்போச்சு
காந்தி நீயும் அறிவாயாக...
மறுபிறவி எடுத்து
வந்து இங்கு
தொடங்குவாயாக
மீண்டும் ஒரு
சுதந்திரப்போர் !!!
1 Comments:
//காந்தியவாதிகள்
எல்லாம் வெறும்
கமிசன்வாதிகள்
ஆனார்கள்
//
நச்சுன்னு ஒரு வரில உண்மையை சொல்லிட்டீங்க முத்தமிழ்
Post a Comment
<< Home