Tuesday, August 15, 2006

வாழ்க பாரதம்: அப்துல்கலாமின் சுதந்திர தின உரை

அனைவருக்கும் முத்தமிழின் சுதந்திரதின வாழ்த்துக்கள்.இன்று நம் ஜனாதிபதி ஆற்றிய சுதந்திரதின உரையை அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.ஜெய் ஹிந்த்


புதுடெல்லி, ஆக.15-


சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அப்துல்கலாம் ஆற்றிய உரையில்,
இளைஞர்களுக்கு 7 அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்தார்.


ஜனாதிபதி உரை


நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி ஜனாதிபதி அப்துல்கலாம்
நேற்று இரவு டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது
இளைஞர்களுக்கு 7 அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்தார். அவர் கூறிய 7
அம்சங்கள் வருமாறு:-


7 அம்சங்கள்


1. நான் எனது வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உணர்கிறேன். இந்த
இலக்கை அடைவதற்கு தேவையான அறிவை பெறுவேன். கடினமாக உழைப்பேன். பிரச்சினைகள்
வரும்போது அவற்றை சமாளித்து வெற்றி பெறுவேன்.


2. எனது நாட்டின் இளைய சக்தியாக நான் உழைப்பேன். எடுத்துக் கொண்ட அனைத்து
பணிகளிலும் வெற்றி பெறுவதற்காக துணிவுடன் உழைப்பேன். பெற்ற வெற்றியை
அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவேன்.


3. என்னையும், எனது வீட்டையும், சுற்றுப்புறத்தையும், அண்டைப் பகுதிகளையும்
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் எப்போதும் வைத்துக் கொள்வேன்.


4. உள்ளத்தின் நேர்மை குணத்தில் அழகையும், குணத்தின் அழகு வீட்டில்
நல்லிணக்கத்தையும், வீட்டின் நல்லிணக்கம் நாட்டில் ஒழுங்கையும், நாட்டின்
ஒழுங்கு உலகத்தில் அமைதியையும் கொண்டு வரும் என உணர்ந்துள்ளேன்.


5. ஊழல் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ்வேன். மற்றவர்களுக்கு ஓர்
எடுத்துக்காட்டாய் விளங்குவேன்.


6. நாட்டில் நான் அறிவு தீபத்தை ஏற்றுவேன். அது என்றும் சுடர்விட உறுதி
கொள்வேன்.


7. எந்தப்பணி செய்தாலும் அதை செம்மையாக செய்யும் போது 2020-ம் ஆண்டுக்குள்
வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கு நானும் பங்காற்றுகிறேன்
என்பதை உணர்ந்துள்ளேன்.


மேற்கண்ட 7 அம்ச உறுதிமொழியை அப்துல் கலாம் பிரமாணம் செய்து வைத்தார்.


நதிநீர் இணைப்பு


அப்துல்கலாம் தனது உரையில் மேலும் கூறியதாவது:-


வறட்சி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நதிகளை இணைக்க வேண்டிய
அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வீடுகள் கட்ட திட்டமிடும்போது
மழை நீர் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


நமது அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை பெறுவதற்கு ஏதுவாக
முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.


கிராமங்களில் நகர்ப்புற வசதி


ஊரக பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் `புரா' திட்டங்கள் நாடு முழுவதும்
தேவைப்படுகிறது. சுந்தரவன பகுதியிலுள்ள சாகர் எனும் தீவில் உள்ள சூரிய மின்னொளி
திட்டம், நாட்டிலுள்ள தொலைதூர மலைப்பிரதேச, தீவுப்பகுதிகளிலுள்ள
கிராமங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய
ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் உறுதி செய்யப்பட வேண்டும்.


தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய இயக்கம்


தீவிரவாத செயல்களை சமாளிப்பதற்கும், முன்கூட்டியே கணிப்பதற்கும் நமது பல்வேறு
அமைப்புகளை ஒருங்கிணைப்பதுடன், மக்கள் பங்கேற்பை நோக்கமாக கொண்ட தீவிரவாதத்தை
ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்தை நமது நாட்டில் உருவாக்க வேண்டும். சில
மாநிலங்களின் ஒத்துழைப்புடன் போதுமான அளவு யுரேனியத்தை எடுப்பதை நமது நாடு
இலக்காக கொள்ள வேண்டும். எண்ணை தேவைக்காக பயோ டீசல் உற்பத்தியிலும்,
புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


3 முன்முயற்சிகள்


நமது தொலைநோக்கு இலக்கை அடைய 3 முன்முயற்சிகளுக்காக ஒன்றுபட்டு உழைப்போம். அவை
வருமாறு:-


1. குடிமக்கள் பாதுகாப்பு மசோதாவை உருவாக்குதல். 2. எரிசக்தி தற்சார்பு மசோதாவை
உருவாக்குதல். 3. இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பான, வளமான,
மகிழ்ச்சியான, சமூக பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை
ஏற்றல். இவை பற்றி பாராளுமன்றத்திலும், அரசு தரப்பிலும் விவாதம் நடத்தி
முடிவெடுத்து ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியம்.


இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

3 Comments:

At 9:33 AM, Blogger நாமக்கல் சிபி said...

குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையை வலைப்பதிவில் தந்தமைக்கு நன்றி!

 
At 10:03 AM, Blogger Santhosh said...

தலை வழக்கம் போல கலக்கிட்டாரு உரையோட நிறுத்தாம கொஞ்சம் அதை செயல்படுத்துற வழியை பாத்தா நல்லா இருக்கும்.

 
At 1:51 AM, Blogger முத்தமிழ் said...

அருமையான இந்தியாவின் எதிர்காலத்திற்கான நல்லுரை.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4